ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

கே.எல்.ராகுல் பொறுப்பான ஆட்டம்... இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

Ind vs SL

Ind vs SL

India vs Sri Lanka | இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் வென்று தொடரையும் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. தற்போது, இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ஷ

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்களில் வெளியேறிய போதும், மற்றொரு தொடக்க வீரரான நுவனிது பெர்னாண்டோ அரைசதத்தை பதிவு செய்து, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இவர் வெளியேறியதும் குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலில் சிக்கிய இலங்கை, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இலங்கை அணி இறுதியாக 39.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் தடுமாற்றமாகவே இருந்தது.

கேப்டன் ரோஹித் சர்மா (17), சுப்மன் கில் (21), விராட் கோலி (4) ரன்களில் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் வலுவாக இருந்த ஸ்ரேயாஸ் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சற்று நேரம் தாக்குபிடித்த ஹர்டிக் பாண்டியா 36 ரன்களில் நடையை கட்ட அக்ஷர் படேல் வந்த வேகத்தில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் விழுந்து கொண்டிருந்த போது 5வது வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.

கே.எல்.ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல்  64 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடரையும் கைப்பற்றி உள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

First published: