சென்சூரியனில் இந்தியா வென்றது, ஆனால் ஜோகான்னஸ்பர்க் மற்றும் கேப்டவுனில் 200 ரன்களுக்கும் மேலான இலக்கை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வென்றதையடுத்து தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது தோல்விக்குக் காரணம் ரகானே, புஜாரா பேட்டிங் தான் என்று முன்னாள் வீரர் அடுல் வாசன் சாடியுள்ளார்.
ரஹானே, புஜாரா இருவரையும் அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வரத் தொடங்கிவிட்டன.
ரகானே, புஜாரா, மயங்க் அகர்வால் மூவரும் 20 ரன்கள் சராசரியில் இந்த தொடரில் ஆடினர். 2020 தொடக்கத்திலிருந்து புஜாரா சராசரி 26. அதுவும் 20 டெஸ்ட்களில். 19 டெஸ்ட்களில் ரகானேவின் சராசரி 24.
இந்நிலையில் முன்னாள் பவுலர் அடுல் வாசன் கூறியதாவது:
இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இந்திய வீரர்களின் பேட்டிங்கைப் பார்த்து வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்திய அணியிடம் இருந்து இதுபோன்ற கோழைத்தனமான ஒரு சரணாகதியை எதிர்பார்க்கவில்லை.
அதேநேரம் தென் ஆப்பிரிக்க அணி பல்வேறு இடர்களிலிருந்து மீண்டு வருகிறது என்பதற்கு நல்ல அறிகுறியாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை அடுத்து இந்திய அணியை எதிர்த்து ஆதிக்கம் செய்ய தென் ஆப்பிரிக்க அணி தொடங்கிவிட்டது. இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியிருக்கிறது.
இதுவரை எந்தத் தொடரையும் வெல்லவில்லை, இந்தத் தொடரையும் இழந்துவிட்டோம் என்பது வேதனையாக இருந்தாலும், தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
இந்திய அணி 1-0 என்ற முன்னிலையில் இருந்தபோதே இந்திய அணி எந்த இடத்தில் நிற்கிறது என்பதை ராகுல் திராவிட் உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன். இந்திய அணியின் பலவீன பேட்டிங் குறித்து ராகுல் திராவிட் நிச்சயம் சிந்தித்திருப்பார். ஆனால், தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர், குறிப்பாக பீட்டர்ஸன்.
இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா போதுமான பங்களிப்பு ஏதும் செய்யவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு இருவரும் முக்கியக் காரணம். இருவருக்கும் வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளும் முடிந்துவிட்டன. 40 ரன்களும், 50 ரன்களும் நிச்சயமாக அணியின் வெற்றிக்கு உதவாது. இந்த டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்களால்தான் இந்திய அணி தோற்றது.
டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்களுக்குப் பிறகே ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகச் சென்றது, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ரன் அடித்தார்கள், இந்திய பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. கடந்த 2 டெஸ்ட் போட்டிகளாக என்ன நடந்தததோ அதுதான் நடந்தது. தோல்விக்கு புஜாரா, ரஹானேதான் முக்கியக் காரணம், என்றார் அடுல் வாசன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Cheteshwar Pujara, India vs South Africa