Home /News /sports /

அஸ்வின், கோலி, ராகுல் அராஜக நடத்தைக்கு அபராதம் இல்லை-வெறும் எச்சரிக்கைதான்

அஸ்வின், கோலி, ராகுல் அராஜக நடத்தைக்கு அபராதம் இல்லை-வெறும் எச்சரிக்கைதான்

கோலி ஸ்டம்ப் மைக் சர்ச்சை

கோலி ஸ்டம்ப் மைக் சர்ச்சை

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அவமானப்படுத்தும் விதமாக அஸ்வின், கோலி நடந்து கொண்டதற்கு அபராதம் எதுவும் இல்லை, மேட்ச் அதிகாரிகள் இந்திய நிர்வாகத்திடம் பேசி எச்சரித்தது மட்டுமே நடந்துள்ளது.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா ஆடிவந்த போது டீன் எல்கருக்கு அஸ்வின் போட்ட பந்து எல்.பி என்று கள நடுவரா தீர்ப்பளிக்கப்பட்டது, ஆனால் எல்கர் ரிவியூ செய்தார் அப்போது பந்து மேலே சென்றது தெரியவர நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் அஸ்வின், கேப்டன் விராட் கோலி கடுப்பாகி அசிங்கமாக ஸ்டம்ப் மைக் முன்னால் சில வார்த்தைகளை வெறுப்பில் உமிழ்ந்தனர்.

ஹாக் ஐ என்பது அணிக்கு சம்பந்தமற்ற ஒரு தனித்த அமைப்பு, அது தொழில்நுட்பம். இதே மயங்க் அகர்வால் தப்பிய போது கோலிக்கு இனித்தது, ஆனால் எல்கர் தப்பியதும் ஏதோ பிராடு நடப்பது போல் மைக் முன்னால் சென்று, “பந்தை தேய்த்துப் பளபளப்பேற்றும் போது உங்கள் அணியினர் மீது கவனம் செலுத்து, எதிரணியினரை அல்ல. எப்போதும் யாரையாவது எதிலாவது மாட்டி விடுவது” என்று விராட் கோலி கூற, தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்த அஸ்வின், “வெற்றி பெற இதை விட சிறந்த வழிகள் உள்ளன” என்று அசிங்கமாக பேசினார்.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி வரலாறு எதுவும் தெரியாமல், இப்போதுள்ள அணி எப்பேர்ப்பட்ட கடினப்பாடிலிருந்து மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத கே.எல்.ராகுல், “ஒரு நாடே 11 வீரர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது” என்று முத்து உதிர்த்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஐசிசி மேட்ச் அதிகாரிகள் இந்திய அணி நிர்வாகத்திடம் கோலி, அஸ்வின், ராகுல் நடத்தை குறித்து எச்சரித்துள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.

கோலியே ஆட்டம் முடிந்த பிறகு, ‘அதுபற்றி சர்ச்சை செய்ய விரும்பவில்லை’ என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவெல்லாம் வெளிநாடுகளில் பல போட்டிகளில் வென்று அந்த ஹோதாவில் ஸ்லெட்ஜிங் செய்கின்றனர், நாம் இப்பத்தான் வெல்லவே ஆரம்பித்திருக்கிறோம் அதற்குள் இத்தனை திமிர் ஆகாது என்றே விவரம் தெரிந்த கிரிக்கெட் பண்டிதர்கள் கருத்து கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்திய கேப்டனின் நடத்தை பல அத்துமீறல்களுக்குப் பிறகு இப்போது எச்சரிக்கை அளவுக்கு வந்துள்ளது, ஐசிசி இந்தியப் பணத்தில் நடப்பதால் இந்த புதிய பணக்கார முரண்டுபிடிக்கும் குதிரைகளுக்கு கடிவாளம் போட முடியா கோழையாக உள்ளது.

இந்திய வீரர்களிடம் உள்ள பணத்தில், சொத்தில் பாதியளவு கூட தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கே இருக்குமா என்று தெரியவில்லை, அந்த அணி மாறும் படலத்தில் உள்ளது, மிகவும் ஒரு குரூரமான வரலாற்றிலிருந்து மெல்ல மெல்ல மேலேறி வந்து கொண்டிருக்கிறது போன்ற வரலாறெல்லாம் தெரியாமல் இந்திய அணியின் புதுப்பணக்காரர்கள், உலகின் ஏழ்மையான கிரிக்கெட் வாரியத்தையும் அதன் ஒளிபரப்பாளர்களையும் அவமானப்படுத்துவது வரலாற்றுத் தவறு என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருதுகின்றனர்.

சஞ்சய் மஞ்சுரேக்கர், டேரில் கலினன் போன்றோர் இந்திய வீரர்களின் நடத்தையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கோலி இப்படி அசிங்கமாக நடந்து கொள்வதற்குப் பதில் கீகன் பீட்டர்சன் அடித்து நொறுக்கிய பவுண்டரிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று யோசிக்கலாம். அதுதான் அவருக்கு நல்லது.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, India vs South Africa

அடுத்த செய்தி