Home /News /sports /

IND vs SA| என்ன விவ் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டையா எடுத்து விட்டீர்கள் பும்ரா? ஏன் இந்தஅலட்டல்?

IND vs SA| என்ன விவ் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டையா எடுத்து விட்டீர்கள் பும்ரா? ஏன் இந்தஅலட்டல்?

தென் ஆப்பிரிக்கா வீரர் யான்சென் ஸ்டெம்ப் எகிறும் காட்சி

தென் ஆப்பிரிக்கா வீரர் யான்சென் ஸ்டெம்ப் எகிறும் காட்சி

வெற்றி தோல்விகளுக்கு அப்பால் ஒரு நாட்டையும் அதன் பண்பாட்டையும், மக்களையும் அரசையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் தான் விளையாட்டு வீரர்கள் இதனை மனதில் கொண்டுதான் நடந்து கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் ஒரு சின்ன விஷயம் செய்து விட்டாலே அதை ஓவராகக் கொண்டாடுவது என்பது நடந்து வருகிறது, கொண்டாட்டம் இருக்க வேண்டியதுதான் ஆனால் அது எதிரணியினரை இழிவு படுத்தும் விதமானக் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது என்பதற்கு பும்ராவின் நேற்றைய நடத்தை உதாரணமாக அமைந்தது.

ஏற்கெனவே கடந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் யான்செனிடம் வாக்குவாதத்தில் அசிங்கமாக ஈடுபட்டார், அவர் பவுன்சர் வீசி அது இவர் கைகளைத் தாக்க அதை ஏதோ தூசியைத் தட்டுவது போல் தட்டி செய்கை செய்ததோடு ஆக்ரோஷமாக அவரை நோக்கி முன்னேறி வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.  முதலில் பும்ரா நீங்கள் என்ன பேட்டிங்கில் சுனில் கவாஸ்கரா? அதே போல் பவுலிங்கில் விக்கெட்டை கொண்டாட வேண்டியதுதான், அதற்காக யான்சென், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பேட்டிங்கில் பிள்ளைப்பூச்சிகள் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அதற்கு ஏன் இத்தனை அலட்டல்? இதைத்தான் செய்து வருகிறார் பும்ரா.

இவரது அலட்டல் நடத்தையை கொண்டாடும் ஒரு கேப்டன் (கோலி) இருக்கும் வரை இந்திய அணி அநாகரீகத்தின் உச்சத்திற்குச் சென்று ஆஸ்திரேலியா போல் அவமானப்பட்டு திரும்பும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை உணர வேண்டும்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஜேஸன் 7ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஸ்டெம்ப் சில அடி தூரம் எகிறி விழுமாறு பவுல்டு ஆகி வெளியேறினார் யான்சென். அப்போது பும்ராவின் செய்கை கொண்டாட்டம் ரொம்பவும் அலட்டலாக, போதுமா வெளியே போ என்பது போன்ற ஒரு கேலிப்பார்வை, இது பும்ராவுக்குத் தேவையா?  கோலியும் அவரை கண்டிக்காமல் தானும் சேர்ந்து இத்தகைய கீழ்மையைக் கொண்டாடி ஏதோ கேரி சோபர்சை வீழ்த்தியது போல் முஷ்டியை உயர்த்திக் காட்டுகிறார். ராகுல் திராவிட் முதலில் ரவிசாஸ்திரி வளர்த்து விட்ட ஒருவிதமான லும்பன் கலாச்சாரத்தை சீர் செய்ய வேண்டும். என்ன விவ் ரிச்சர்ட்ஸையா வீழ்த்தி விட்டார்.

பவுலிங் தரம் மேம்பட்ட பும்ராவின் நடத்தை தரம், குணாதிசிய தரம் இருக்க இருக்க கீழ்மையடைந்து கொண்டே செல்கிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன் விவகாரத்திலும் அப்படித்தான் நடந்தது.

சரி யான்சென் விக்கெட் என்ன பெரிய இதுவா? விவ் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டையா வீழ்த்தி விட்டார், அல்லது கேரி சோபர்ஸை வீழ்த்தினாரா? இவர்களையெல்லாம் வீழ்த்திய இந்திய பவுலர்கள் எவரும் இது போன்று அசிங்கமாக அதைக் கொண்டாடியதில்லை, தற்பெருமை பீற்றிக் கொண்டதில்லை. கபில்தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் 7/56, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 8/106, இங்கு மே.இ.தீவுகளுக்கு எதிராக அகமதாபாத்தில் 9/83 என்று எத்தனையோ வேலைகளைச் செய்துள்ளார், ஆனால் அசிங்கமாகக் கொண்டாடியதில்லை, இவ்வளவு ஏன்? 1983 உலகக்கோப்பையை வென்ற போது இப்படியா நடந்து கொண்டார்கள்?ஆகவே பும்ரா நட்புணர்வுடன் எதிரணியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் அதுவும் தென் ஆப்பிரிக்காவின் இப்போதைய வீரர்கள் பலரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்கள், நம்மைப்போன்ற ஐபிஎல் கிரிக்கெட்டினால் பெற்ற செல்வ வளத்தின் புதிய பணக்காரர்கள் அல்ல அவர்கள்.  கருப்பரின வீரர்கள் பலர் ஆயிரக்கணக்கான ஆண்டின் நிறவெறி ஆதிக்கத்திலிருந்து மீண்டு வரும் புதிய தலைமுறையினர். ஒரு நாட்டின் கலாச்சாரம், வரலாறு தெரிந்துதான் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும், அங்கு மக்கள் நம்மை நேசிக்க வேண்டும், அப்படித்தான் நம் நடத்தை இருக்க வேண்டும். படுகேவலமான நடத்தையினால் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நம் ஒட்டுமொத்த இந்தியாவையே வெறுக்க நேரிடும். காந்தி தேசத்தில் இப்படிப்பட்ட வீரர்களா என்று நினைத்து விடக்கூடாது என்பதாக வீரர்களின் கவலை இருக்க வேண்டும்.

வெற்றி தோல்விகளுக்கு அப்பால் ஒரு நாட்டையும் அதன் பண்பாட்டையும், மக்களையும் அரசையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் தான் விளையாட்டு வீரர்கள் இதனை மனதில் கொண்டுதான் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளாமல் அராஜக ஆட்டம் போடும் வீரர்களை ஓரிரு போட்டிகளில் உட்கார வைத்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, India vs South Africa, Jasprit bumrah

அடுத்த செய்தி