Home /News /sports /

Ind vs SA 3rd T20-கேட்ச்களை விட்டு சொரத்தே இல்லாமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா: இந்தியா சாதனை வெற்றி

Ind vs SA 3rd T20-கேட்ச்களை விட்டு சொரத்தே இல்லாமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா: இந்தியா சாதனை வெற்றி

4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஹர்ஷல் படேல்

4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஹர்ஷல் படேல்

விசாகப்பட்டிணத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணி ஒருவழியாக முதல் வெற்றியப் பதிவு செய்தது, முதலில் பேட் செய்து 179/5 என்று எடுத்த இந்திய அணி பிறகு தென் ஆப்பிரிக்காவை 131 ரன்களுக்குச் சுருட்டியது, இதன் மூலம் தொடர் 2-1 என்று உயிர்ப்புடன் உள்ளது.  வென்றால் தொடரை வெல்லலாம் என்ற ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா சொரத்தில்லாமல் ஆடியது பெரிய ஆச்சரியமே!

இந்திய அணி நிர்வாகம் பார்த்தது, ரன்கள் வேண்டும் என்று ரசிகர்களை குஷிப்படுத்த பிட்ச் போட்டது போதும், தென் ஆப்பிரிக்கா வென்றதும் போதும் என்று போடு ஸ்லோ பிட்சை என்று போட்டுவிட்டனர். ரிஷப் பண்ட் கேப்டனாக முதல் வெற்றியைச் சாதித்தார். இன்னொரு சாதனை என்னவெனில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாச வெற்றியை முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாதனை வெற்றி பெற்றது இந்தியா, அதாவது ரன்கள் அடிப்படையில் பெரிய வெற்றி என்ற சாதனை!!

ருதுராஜ் கெய்க்வாடுக்கு இது கடைசி ஆட்டம் என்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது, அவர் தன் ஆட்டத்தை மேம்படுத்தி 35 பந்துகளில் 57 ரன்களை 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் விளாசினார். இஷான் கிஷன் தன் அருமையான பார்மைத் தொடர்ந்து நிரூபித்து 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயஸ் அய்யர் (14), ரிஷப் பண்ட் (6), தினேஷ் கார்த்திக் (6) ஏமாற்றமளிக்க ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டிவைன் பிரிட்டோரியஸ் சிக்கனம் காட்டி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியா 179/5.

ருதுராஜ் கெய்க்வாட்


பந்து வீச்சில் ஹர்ஷல் படேல் அதியற்புதமாக வீசி 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார், செஹல் கடந்த போட்டி சாத்துப்படிக்கு ஈடுகட்டி 4 ஓவர் 20 ரன் 3 விக்கெட் என்று அசத்தினார், தென் ஆப்பிரிக்காவில் ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார் அவ்வளவே.கடந்த 15டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் 2வது தோல்வியே இது.

ருதுராஜ் கெய்க்வாட் நார்ட்யே பந்தில் மேலேறி வந்து மிட் ஆன் மேல் தூக்கி அடிக்க கடுப்பான நார்ட்யே ஹெல்மெட்டில் கிரில்லில் பவுன்சரில் கொடுத்தார் ஒரு அடி, அது அதில் பட்டு பவுண்டரிக்கு போனதென்றால் பந்தின் ஸ்பீடை ஊகிக்க முடிகிறதா, முதலில் இந்த பவுண்டரி ருதுராஜ் கணக்கில் சேர்க்கப்பட்டது, பிறகு மாற்றப்பட்டு லெக் பை ஆனது. ருதுராஜ் எகிறு வேகத்தில் கீழேயே விழுந்து விட்டார். ஆனால் எழுந்திருந்தவுடன் பவுண்டரி விளாசினார்.

ஒரு கேட்சும் விடப்பட்டது. 30 பந்தில் அரைசதம் கண்டார் ருதுராஜ்.
ஷ்ரேயஸ் அய்யர் திருப்திகரமாக ஆடவில்லை, நார்ட்யே பந்தில் டாப் எட்ஜ் எடுத்து சிக்ஸ் போனது. பிறகு ஷம்சியை இறங்கி வந்து லாங் ஆஃப் மேல் சிக்ஸ் விளாசினார். ஒரு ஸ்வீப் ஷாட்டில் தப்பினார், இன்னொரு ஸ்வீப் ஷாட்டில் டீப்பில் கேட்ச் ஆகி 14 ரன்களில் வெளியேறினார்.

2 கேட்ச்கள் ட்ராப்:

ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் இருந்த போது டேவிட் மில்லர் எளிதான கேட்சை விட்டார். பண்ட் 4 ரன்களில் இருந்த போது ரசி வாண்டர் டசன் ஓடி வந்து ஒரு கேட்சை விட்டார். ஆனால் பண்ட் ட்ராப் காஸ்ட்லியாகவில்லை, 6 ரன்களில் ரிஷப் பண்ட் மீண்டும் ஒரு சொதப்பல் ஆட்டத்தில் வெளியேறினார். ஆனால் பாண்டியா கேட்சை விட்டதால் அவர் 31 ரன்களை விளாச இந்திய அணி 179 ரன்களை எட்டியது.

 

தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் ஒரு சொரத்தே இல்லை. பவர் ப்ளேயில் 38/2 என்று சரிந்தனர், புவனேஷ்வர் குமார் 2 ஓவர் 7 ரன் என்று பிரமாதமாக வீசும்போது பண்ட் அவரை கட் செய்தார், பண்ட்டிற்கு இது ஒரு வழக்கமாகப் போய்விட்டது யாராவது நன்றாக வீசினால் அவரை கட் செய்வது.

சொரத்தே இல்லாத சேசிங்கில் மிடில் ஆர்டரும் சொதப்பியது வாண்டெர் டசன் 1 ரன்னில் செஹலிடம் வீழ்ந்தார். பிரிட்டோரியஸும் அதே முறையில் வீழ்ந்தார், டேவிட் மில்லர் ஹர்ஷல் படேலின் அபார ஸ்லோ பந்தில் காலியானார். வெய்ன் பார்னெல் இறங்கும் போது தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் வாய்ப்பேயில்லை என்ற நிலவரம்தான் இருந்தது.

கிளாசனை செஹல் எடுத்ததும் தென் ஆப்பிரிக்காவின் சொரத்தில்லாத ஆட்டம் முடிந்தே போனது. டி20-யில் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக  48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ரன்கள் வித்தியாசத்தில் முதல் பெரிய வெற்றியாகும்.  ஆட்ட நாயகன் செஹல்.
Published by:Muthukumar
First published:

Tags: India vs South Africa, Rishabh pant, T20, Yuzvendra chahal

அடுத்த செய்தி