கிரிக்கெட்டில் ஒரு வாசகம் உண்டு அதாவது form is temporary class is permanent. ஆனால் இது டான் பிராட்மேன், கேரி சோபர்ஸ், சுனில் கவாஸ்கர், பேரி ரிச்சர்ட்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ் முதல் சச்சின், லாரா, காலிஸ், கோலி, ஸ்மித், வில்லியம்சன், ரூட் வரை பேசப்பட வேண்டிய ஒன்று. புஜாரா பேசலாமா? இவரிடம் என்ன கிளாஸ் இருக்கிறது?
ஆனால் தன்னை அப்படித்தான் கூறிக்கொள்கிறார் புஜாரா. அவர் சொல்லும் கூற்று சரிதான், ஆனால் அது அவருக்குப்பொருந்தாது, ஆடிக்கொரு அரைசதம் அமாவசைக்கு ஒரு அரைசதம் என்று அடித்துக் கொண்டு அணியில் இளம் வீரர்களை நுழைய விடாமல் வாசலை அடைத்துக் கொண்டு நிற்கும் போது ஃபார்ம் தற்காலிகம் தரம் நிரந்தரம் என்று கூறுவது நியாயமா? இவரிடம் பார்மும் இல்லை தரமும் இல்லை என்பதை யாராவது அவருக்குப் புரிய வைத்தால் நல்லது.
ஓவர் பிட்ச், ஆஃப் வாலி பந்தை பீல்டர் கைக்கு நேராக அடித்தும், ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடாமல் லெக் திசையில் எழும்பும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியாமல், கையிலும் விரலிலும் அள்ளையிலும் இடுப்பிலும் ஹெல்மெட்டிலும் வாங்கிக் கொண்டு ஆடி கிரீசில் cat on a hot tin roof போல் தத்தளிக்கும் இவர் தரம் பற்றி பேச முடியுமா என்பதே நம் கேள்வி. புஜாரா ஒரு பயனுள்ள கிரிக்கெட் வீரர், அவ்வளவுதான் பயன் முடிந்ததும் போக வேண்டியதுதான், இங்கு பந்தயக்குதிரைகளுக்குத்தான் இடம்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியி்ல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக்கூறி இருவரும் மீண்டும் அணியில் இடம்பெற போடும் நாடகங்கள் அப்பப்பா!!
ஜோகன்னஸ்பர்க்கில் புஜாரா, ரஹானே பேட்டிங்கைப் பார்த்து எரிச்சலும், வெறுப்பும் அடைந்த முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 2-வது இன்னிங்ஸ்தான் புஜராவுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இருவரும் அரைசதம் எடுத்தனர், இது இவர்களது திறமையினால் அல்ல தென் ஆப்பிரிக்காவின் விட்டேத்தியான பவுலிங்கினால்தான்.
புஜாராவின் கணக்கைக் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து எடுத்துக்கொண்டால் இதுவரை 45 இன்னிங்ஸ் விளையாடி அதில் 1,189 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் அவரின் சராசரி 26.89 ரன்கள் மட்டும்தான். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் புஜாரா கடைசியாக சதம் அடித்தார் அதன்பின் அடிக்கவில்லை.
இந்நிலையில் சுனில் கவாஸ்கர் விமர்சனமும் அவருக்கு கவலை ஏற்படுத்தவில்லையாம், அவர் கூறுகிறார், “சுனில் கவாஸ்கர் எங்களை விமர்சித்ததைப் பற்றி கவலையில்லை. நானும் ரஹானேவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களுக்கு அணி நிர்வாகம் பக்கபலமாக இருக்கிறது. சுனில் கவாஸ்கர் என்ன மாதிரியான விமர்சனம் வைத்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவே விரும்புகிறோம். எப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போது அவரிடம் பேசுவேன், எனக்குப் பல்வேறு நேரங்களில் ஆதரவாக இருந்துள்ளார்
Also Read: கவாஜா சதம்; கடைசி 3 விக்கெட்டுக்கு 174 ரன்களை வாரி வழங்கிய இங்கிலாந்து- லயன் சிக்சருடன் 416/8 டிக்ளேர்
ஒரு பேட்ஸ்மேன் ஃபார்ம் இழக்கும்போது அவருக்கு நெருக்கடி காலம் வரும், அவரின் பேட்டிங் மீது கேள்வி எழும். ஆனால், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நானும், ரஹானேவும் எங்களின் இயல்பான ஆட்டத்திலிருந்து தவறவில்லை. எங்களைப் பொறுத்தவரை பேட்டிங் ஃபார்ம் என்பது தற்காலிகம், தரம் என்பதுதான் நிரந்தரம்.” என்கிறார் புஜாரா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.