இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் வில்லியம்சன்னுக்கு நேர்ந்த வேடிக்கையான நிகழ்வு ஒன்றின் வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெலிங்கடனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப்போட்டியின் 46வது ஓவரின் போது நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காற்று வேகமாக வீச அவரது தொப்பி பறந்துவிட்டது. பீல்டிங் செய்யும் போது இதுபோன்று நடப்பெதெல்லாம் சாதாரணமே என்றாலும், காற்று சற்று பலமாக வீசியதால் ’தொப்பி’ பவுண்டரி லைனை தாண்டி சென்றுவிட்டது.
இதனை பிடிக்க வில்லியம்சனும் பந்தை விரட்டுவது போல் விரட்டிக் கொண்டே போக அவருக்கு பிடிகொடுக்கவில்லை அந்த தொப்பி. இந்த காட்சி காண்போருக்கு புன்னகையை வரவழைக்க, தொப்பியை விரட்டிய வில்லியம்சனும் ஒரு கட்டத்தில் வெடித்துச் சிரித்துவிட்டார். இறுதியில் பவுண்டரி எல்லையை தாண்டி போய் அவர் தனது தொப்பியை எடுத்துவந்து பீல்டிங் செய்ய தொடங்கிய பின் தான் ஆட்டம் தொடர்ந்தது.
இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் இதற்கு கேலியான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.