நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 208 ரன்களும், ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஷிப்லே, டேரில் மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். அதிரடி பேட்ஸ்மேன் டெவோன் கான்வே 10 ரன்களிலும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஃபின் ஆலன் 40 ரன்கள் எடுத்தார். கேப்டன் லாதம் 46 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
29 ஆவது ஓவரின்போது நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் அடுத்த சில ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நியூசிலாந்து அணிக்கு ஆட்டமே இதற்கு பின்னர்தான் ஆரம்பம் ஆனது. 7 ஆவது விக்கெட்டிற்கு அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் ஜோடி சேர்ந்து, இந்திய பவுலிங் சிதறடித்தனர். குறிப்பாக பிரேஸ்வெல் இந்த ஆட்டத்தை டி20 மேட்சைப்போல விளையாடி, இந்திய ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்தார்.
இந்த ஜோடியை பிரிக்க பவுலர்கள் அனைவரையும் ரோஹித் சர்மா பயன்படுத்தினார். இருப்பினும், இந்த ஜோடி நியூசிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்து வந்தது. கடைசியாக சான்ட்னர் விக்கெட்டை 46 ஆவது ஓவரில் சிராஜ் பிரித்தார். சான்ட்னர் கொடுத்த கேட்ச்சை சூர்யகுமார் அற்புதமாக பிடித்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மைக்கேல் பிரேஸ்வெல் 10 சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் மொத்தம் 140 ரன்கள் அடித்து, இந்திய ரசிகர்களின் நிம்மதியை பறித்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பாலை ஷர்துல் தாகூர் வீச, அந்த பந்து சிக்சருக்கு பறந்தது. அடுத்ததாக 5 பந்துகளுக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில், அடுத்த பந்தை ஷர்துல் வைடாக வீசினார். இதனால் 5 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது ஷர்துல் வீசிய அடுத்த பந்தில், பிரேஸ்வெல் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேற, இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
A high scoring thriller in Hyderabad!#TeamIndia clinch a 12-run victory and take a 1️⃣-0️⃣ lead in the #INDvNZ ODI series 👏🏻
Scorecard ▶️ https://t.co/DXx5mqRguU @mastercardindia pic.twitter.com/aQdbf25By4
— BCCI (@BCCI) January 18, 2023
35 ஓவருக்குள் முடிய வேண்டிய ஆட்டத்தை நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் பிரேஸ்வெல் கடைசி ஓவர் வரையில் எடுத்து வந்து பாராட்டைப்பெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket