ரஹானேவும் புஜாராவும் என்னதான் சொதப்பினாலும் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுவதும் அதற்கான நியாயம் கற்பிப்பதும் தான் இந்திய கிரிக்கெட்டின் சாபக்கேடு. அதை எத்தனை பயிற்சியாளர் வந்தாலும் மாற்ற முடிவதில்லை. தேவையில்லாதவற்றிலெல்லாம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பார்த்து காப்பி அடிக்கும் இந்திய கிரிக்கெட், இந்த விஷயத்தில்தான் உண்மையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ரஹானே, புஜாரா சதம் அடிப்பது பொய்யா பழங்கதையாய்ப் போனதே. கடைசி 16 டெஸ்டுகளில் ரஹானேவின் சராசரி ரன் வெறும் 24.39 தான். புஜாராவை எடுத்துக் கொண்டால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசி 16 டெஸ்டுகளில் அவரது சராசரியும் (27.65) மோசமாகவே உள்ளது. ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆதரவுகரம் நீட்டியிருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரேவும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரீ கூறும்போது, “ரஹானேவும், புஜாராவும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவமுடையவர்கள். ஒரு இன்னிங்ஸ்தான், அந்த இன்னிங்சை ஆடிவிட்டால் அவர்கள் பார்முக்கு திரும்பிவிடுவார்கள் என்பது தெரியும். ஒரு அணியாக ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்கிறோம். அணியில் அவர்களது பங்களிப்பு எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை அறிவோம். அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு போதுமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்களது பார்ம் குறித்து விவாதிக்கப்படவில்லை.
கான்பூர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாலும் அதில் இருந்து நாம் பல சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். அதில் வெற்றி பெறாவிட்டாலும், அதில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய கடுமையான முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த ஆடுகளத்தில் 19 விக்கெட்டுகள் வீழத்தியது எளிதான விஷயம் அல்ல.
கழுத்துவலியையும் பொருட் படுத்தாமல் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா முதலாவது டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரது உடல்தகுதி குறித்த தகவல்களை தெரிவிக்க அணியின் பிசியோதெரபிஸ்ட், பயிற்சியாளர் திராவிட், கேப்டன் கோலியிடம் தொடர்பில் உள்ளார். போட்டி நெருங்கும் போது அவர் விளையாடும் அளவுக்கு உடல்தகுதியுடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை முடிவு செய்வோம்.
வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இந்த ஆண்டில் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. எனவே அவர் பழைய நிலைக்கு திரும்ப ஓரிரு போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியமாகும். கோலி திரும்புவதால் ஆடும் லெவன் அணி குறித்து முடிவு செய்வது ஆரோக்கியமான ஒரு பிரச்சினையாக உருவாகியுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர் முதலாவது டெஸ்டிலேயே சதமும், அரைசதமும் அடித்தது ஆச்சரியமான மகிழ்ச்சி” என்றார் பராஸ் மாம்ப்ரீ.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Cheteshwar Pujara, India vs New Zealand