மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (44), மாயங்க் அகர்வால் (52 நாட் அவுட்) பிரமாதமாக ஆடி முதல் விக்கெட்டுக்காக 80 ரன்கள் சேர்த்தனர். ஷுப்மன் கில் 71 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஆஃப் ஸ்பின்னர் வில்லியம் சோமர் வில்லை டீப் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர் விளாசி 44 ரன்கள் எடுத்தார், தொடக்கத்தில் ஆக்ரோஷம் காட்டிய ஷுப்மன் கில், கைல் ஜேமிசனை இரண்டு பிளிக் மற்றும் ஒரு அபார கவர் டிரைவ் என்று ஒரே ஓவரில் 12 ரன்கள் விளாசினார்.
ஸ்பின்னர் வந்தவுடன் ஆக்ரோஷமாக ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்த ஷுப்மன் கில் இடது கை ஸ்பின்னர் அஜாஜ் படேல் ஒரு பந்தை அருமையாக ஆஃப் ஸ்டம்பில் குத்தி வெளியே எடுக்க கில் காலை நகர்த்தாமலேயே பேட்டை கொண்டு போய் எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவுட் ஆவதற்கு முதல் பந்துதான் ஸ்டம்பிங்கை விட்டார் லேதம், ஆனால் அடுத்த பந்தே இந்தா ஸ்டம்பிங்கை விட்டால் என்ன? இதோ கையில் கொடுக்கிறேனென்று வெளியேறினார் ஷுப்மன் கில்.
புஜாரா இறங்கினார். பாவம் 5 பந்துகள்தான் நீடித்தார், அஜாஜ் படேல் வீசிய பந்து ஒன்று எல்பி அப்பீலை எழுப்ப நியூசிலாந்து ரிவியூ செய்து பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்ல ரிவியூவை இழந்தது, ஆனால் அடுத்த பந்தே பந்து நன்றாக பிளைட் செய்யப்பட்டு டிப் ஆக புஜாரா பீட்டன் ஆனார், இந்த முறை மட்டைக்குக் கீழ் சென்ற அருமையான பந்து நன்றாகத் திரும்பி பவுல்டு ஆனது.
இதே ஓவரில் ஷாக் காத்திருந்தது, நமக்கும் கோலிக்கும் அனைவருக்கும்தான். அதே ஓவரின் கடைசி பந்தில் விராட் கோலி அஜாஜ்படேல் பந்து ஒன்று மிடில் அண்ட் லெக்கில் நேராக வர முன்னால் காலைக் குறுக்காகப்போட்டு தவறிழைத்தார் பந்து மட்டையில் பட்டதா, கால்காப்பில் பட்டதா, எதில் முதலில் பட்டது, இரண்டிலும் ஒரே நேரத்தில் பட்டதா, கால்காப்பில் பட்டு மட்டையில் பட்டதா என்று தெரியவில்லை. கள நடுவர் கையை உயர்த்தினார், விராட் கோலி விடுவாரா ரிவியூ செய்தார்.
ரிவ்யூவிலும் மேற்கண்ட கேள்விகள் எழ 3வது நடுவர் பந்து முதலில் மட்டையில் பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை எனவே ஆஃப் பீல்ட் நடுவர் கொடுத்த முடிவு செல்லும் என்றார் விராட் கோலி டக் அவுட், நம்ப முடிகிறதா? அஜாஜ் படேல் அசத்தல் பந்து வீச்சில் புஜாரா, கோலியை ஒரே ஓவரில் வீழ்த்தினார்.
ஆனால் அதன் பிறகு மயங்க் அகர்வால் படேலை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்து ஆக்ரோஷம் காட்டினார். பிறகு மீண்டும் ஒரு பவுண்டரி அடித்து 46 ரன்கள் வந்த அகர்வால், அடுத்து ரச்சின் ரவீந்திராவை லேட் கட் பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார். இப்போது ஷ்ரேயஸ் அய்யர் 7, மயங்க் அகர்வால் 52 களத்தில் இருக்கின்றனர்.
நியூசிலாந்து தரப்பில் அஜாஜ் படேல் 15 ஓவர் 7 மெய்டன் 30 ரன் 3 விக்கெட். இந்தியா 111/3. இன்று இன்னமும் 41 ஓவர்கள் மீதமுள்ளன.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.