• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 1988-ல் ஒரு டெஸ்ட்டில் வென்றதோடு சரி! கேன் வில்லியம்சனுக்கு அடிவயிற்றை கலக்கும் இந்தியத் தொடர்கள்

1988-ல் ஒரு டெஸ்ட்டில் வென்றதோடு சரி! கேன் வில்லியம்சனுக்கு அடிவயிற்றை கலக்கும் இந்தியத் தொடர்கள்

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர்.

இந்தியாவில் நியூசிலாந்து அணி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. கடைசியாக 1988-ல் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருக்கிறது அவ்வளவே.

  • Share this:
    கான்பூரில் நாளை மறுநாள், வியாழனன்று தொடங்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விராட் கோலி இல்லாத இந்திய அணியை பதம் பார்க்க கேன் வில்லியம்சன் வாளைத்தீட்டிக் கொண்டிருப்பார். ஆனால் முந்தைய இந்திய தொடர்களை நினைத்தால் அவர் அடிவயிறு கலங்கிவிடும். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

    இந்தியாவில் நியூசிலாந்து அணி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. கடைசியாக 1988-ல் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருக்கிறது அவ்வளவே

    எப்படி நியூசிலாந்தில் இந்தியா சொதப்பி வருகிறதோ அதே போல்தான் துணைக்கண்டத்தில் நியூசிலாந்து ஒருபோதும் சரியாக ஆடியதில்லை. தட்பவெப்பம் முதல் பிட்ச் வரை எல்லாமே அவர்களுக்கு சரிவர அமையாது. 1969-ல் ஒரு டெஸ்ட்டில் வென்றனர், 1988-ல் ஒரு டெஸ்ட்டில் வென்றனர். அவ்வளவே. அதன் பிறகு ஒரு டெஸ்ட்டில் கூட வென்றதில்லை இங்கே.



    ஆனால் இரு அணிகளும் மோதி மிகவும் அறுவையாக டெஸ்ட் ட்ரா ஆன தருணங்கள் உள்ளன. தொடர்கள் மட்டத்தில் பார்த்தால் 24 தொடர்களை இரு அணிகளும் எதிர்த்து ஆடியுள்ளன, இதில் 13- தொடர்களில் இந்தியா வெல்ல 8 தொடர்களைத்தான் நியூசிலாந்து வென்றுள்ளது. 3 தொடர்கள் ட்ரா ஆகியுள்ளன.

    இரு நாடுகளும் 61 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 21 டெஸ்ட்களில் வென்றுள்ளது, 13 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வென்றுள்ளது. 26 டெஸ்ட்கள் ட்ரா ஆகியுள்ளன. அக்டோபர் 2003-ல் நியூசிலாந்து இங்கு தொடருக்கு வந்த போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 0-0 என்று மகா அறுவையான ட்ரா ஆனது. ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் மொகாலியில் பிட்சி கொஞ்சம் புல் இருந்தது. இந்திய அணி இதில் ஃபாலோ ஆன் ஆடியது ஆனால் விவிஎஸ் லஷ்மண் 104 மற்றும் 67 என்று இன்றியமையாத இன்னிங்ஸை ஆடி அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

    விவிஎஸ்லெட்சுமணன்


    மீண்டும் 2010-ல் நியூசிலாந்து இங்கு வந்த போது டேனியல் வெட்டோரி மட்டுமே 2003 தொடரில் இருந்த ஒரே வீரர் ஆவார். இந்தத் தொடரில்தான் ஹர்பஜன் சிங் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்தார். நாக்பூரில் மட்டுமே ரிசல்ட் தெரிந்தது. இந்த தொடர் அகமதாபாத்தில் தொடங்கியது. இந்தியா 65/6 என்று தடுமாறியது. இந்தியாவின் லீட் அப்போது வெறும் 93 ரன்கள்தான் அப்போதுதான் ஹர்பஜன் சிங் இறங்கி அதிரடி சதம் கண்டார். கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில்தான் 20 வயதில் அறிமுகம் காண்கிறார்.



    அடுத்த டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் ஒரு அறுவையான டிரா ஆனது. நாக்பூரில் ராகுல் திராவிட் 191 ரன்களை எடுக்க, பவுலர்கள் பிரமாதமாக வீச இந்திய அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடரை 1-0 என்று இந்திய அணி வென்றது.

    2012 டெஸ்ட் தொடர்: 2011 உலகக்கோப்பையை வென்ற பிறகே அணியில் புதிய உத்வேகமிக்க இளம் வீரர்கள் வந்திருந்தனர், விராட் கோலி, புஜாரா, அஸ்வின் ஆகியோர் அணியில் இருந்தனர். அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்றார். 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது, இத்தனைக்கும் நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர், பிரெண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன் இருந்தனர்.

    அடுத்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை என்ன சேதி என்று கேட்டது. விராட் கோலி சதமெடுத்தும் நியூசிலாந்து அணி 12 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 261 என்ற போது டிம் சவுதீ பெரிய பவுலிங் போட்டார். இந்தியாவை 165/6 என்று சறுக்கச் செய்தார்.ஆனால் எப்படியோ இந்தியா வென்று தொடரை கிளீன் ஸ்வீப் செய்தது.

    2016 டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து அணியை இந்திய அணி 3-0 என்று கிளீன் ஸ்வீப் செய்த தொடராகும் இது. கான்பூர், கொல்கத்தா, இந்தூரில் 3 டெஸ்ட் போட்டிகள் நடந்தன, நியூசிலாந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதுவும் கடைசி டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்த போது விராட் கோலி 211 ரன்கள் விளாச, ரகானே 188 ரன்கள் எடுக்க இருவரும் 365 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்று வென்றது. இதே தொடரில் ஜடேஜா அல்ரவுண்ட் திறமையைக் காட்ட, விருத்திமான் சகா இரண்டு முக்கியமான இன்னிங்ஸ்களை பின்னால் இறங்கி ஆடினார்.

    இந்த இரண்டு தொடர்களையும் நினைத்தாலே கேன் வில்லியம்சனுக்கு கசக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: