Home /News /sports /

கஷ்டப்பட்டு ஜெயித்த இந்தியா- நியூசிலாந்துக்கு எதிராக 7 தோல்விகளுக்கு பிறகு வெற்றி- ரோகித்-திராவிட் கூட்டணி அசத்தல்

கஷ்டப்பட்டு ஜெயித்த இந்தியா- நியூசிலாந்துக்கு எதிராக 7 தோல்விகளுக்கு பிறகு வெற்றி- ரோகித்-திராவிட் கூட்டணி அசத்தல்

வெற்றி கூட்டணி.

வெற்றி கூட்டணி.

ஜெய்பூரில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. நல்ல நிலையிலிருந்து கடைசியில் திண்டாடி 2 பந்துகள் மீதமிருக்க ஜெயித்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்திடம் 3 வடிவங்களிலும் தொடர்ச்சியாக அடைந்த 7 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நியூசிலாந்து முதலில் பேட் செய்து மார்டின் கப்டில் (70), மார்க் சாப்மேன்(63) ஆகியோரது அபாரமான இன்னிங்ஸினால் 164/6 என்ற ஸ்கோரை எட்டியது, இது 175 ஆக இருந்திருந்தால் இந்தியா அம்போவாகியிருக்கும். அந்தவிதத்தில் அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அஸ்வினின் 2 விக்கெட்டுகள் நியூசிலாந்தை கட்டிப்போட்டது, அதே போல் ட்ரெண்ட் போல்ட்டின் சூரியகுமார் யாதவ், ரோகித் சர்மா விக்கெட்டுகள் இந்திய அணியை தோற்க முடியாத நிலையிலிருந்து தோற்கும் நிலைக்குத் தள்ளியது.

டேரில் மிட்செல் ஸ்விங் பவுலிங் ஆல்ரவுண்டராம் அதுவே நேற்று அவர் கடைசி ஓவரை வீச வரும்போதுதான் தெரிந்தது, ஏனெனில் நியூசிலாந்தின் பவுலிங் தெரிவுகள் அனைத்தும் ஓவர்களை முடித்து விட்டதன் விளைவு. டேரில் மிட்செல் பொதுவாக மிடில் ஆர்டரில் இறங்குவார், ஆனால் அவரை ஓப்பனிங் அனுப்புகின்றனர், வெங்கடேஷ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரராக இறங்குபவர் ஆனால் இங்கு 6ம் நிலையில் இறங்கினார், இவர் பவுலிங் ஆல் ரவுண்டர் ஆனால் பவுலிங் கொடுக்கப்படவில்லை. ஒரு வீரரின் முழுத்திறமையையும் பயன்படுத்துவதுதான் நல்லது.

6ம் நிலையில் வெங்கடேஷ் அய்யர் இறங்கும் போது இந்திய அணி தோற்று விடும் போல் இருந்தது. 6 பந்துகளில் 10 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று ஆட்டம் நெருக்கமாக இருந்தது. மிட்செல் இதுவரை பவுலிங் செய்யவில்லை அவர் வீசுகிறார், வெங்கடேஷ் அய்யருக்கு இது முதல் சர்வதேச போட்டி ஆகவே இருவருக்குமே ஹீரோவாகும் வாய்ப்பு, ஆனால் இருவருமே ஹீரோவாக வில்லை. வெங்கடேஷ் அய்யர் ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்தே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். டேரல் மிட்செல் 2 மிகப்பெரிய வைடுகளை வீசிய போதுதான் தெரிந்தது, அவரை ஏன் பவுலிங்கில் பயன்படுத்துவதில்லை என்று.

இதனையடுத்து 3 பந்துகளில் 3 என்று சமன்பாடு மாறியது. ரிஷப் பண்ட் டி20க்கு சரிப்பட மாட்டார் என்றே தோன்றுகிறது. 16 பந்துகளில் 13 என்று அவர் கொஞ்சம் தடவினார். ஆனால் மிட்செல் பந்தை மேலேறி வந்து ஒரு மிட் ஆஃபில் பவுண்டரிக்கு விரட்டி வின்னிங் ஷாட்டை அடித்தார்.

அஸ்வின் திருப்புமுனை:கப்டில் முதலில் அதிகப் பந்துகளை சந்திக்கவில்லை, மார்க் சாப்மேன் அதிகபந்துகளை சந்தித்தார் ஆனால் ரன்கள் எடுக்க போராடினார். இருவரும் அடிக்கத் தொடங்கி ஆடிய போது நியூசிலாந்து 110/1 என்று 14வது ஓவரில் இருந்தது. இந்த நிலையில் ஸ்கோர் 170 பக்கம் வரும்போல்தான் இருந்தது. அஸ்வின் பிட்சில் கொஞ்சம் கிரிப் இருப்பதை உணர்ந்து வீசினார். சாப்மேனை அருமையான பந்தில் பவுல்டு ஆக்கினார். அடுத்த 3 பந்துகள் கிளென் பிலிப்சுக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. கடைசியில் கேரம் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். கப்டில் 2 சிக்சர்கள் விளாசி 31 பந்தில் 50 அடித்தார். பிறகு சாகரை ஸ்டாண்ட்சுக்கு சிக்ஸ் அடித்து நியூசிலாந்தின் ஸ்கோரை 150க்கு உயர்த்தினார்.

ஆனால் சாகர் ஸ்லோப் பந்தை வீச கப்டில் அதே ஷாட்டை ரிபீட் அடிக்க முயன்று கேட்ச் ஆனார், இவர் போன பிறகு நியூசிலாந்து கடைசி 16 பந்தில் 14 ரன்களையே எடுத்தது. இதனால் ஸ்கோர் இந்தியா வெற்றி பெறும் ஸ்கோராக இருந்தது.

சூரியகுமார் சிறப்பு:

இந்தியா சேஸிங் செய்த போது ராகுல் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் சிறப்பாகத் தொடங்கினார், ஆனால் 15 ரன்களில் சாண்ட்னரிடம் பெவிலியன் திரும்பினார். பிறகு ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் கூட்டணி. ரோகித் சர்மா மிகச்சிறப்பாக ஆடினார், பேக்ஃபுட்டில் அருமையான ஷாட்களை ஆடினார், அவரது டிரேட் மார்க் புல் ஷாட் ரசிகர்களிடையே பந்து போய் விழும் அளவுக்கு சிறப்பாக அமைந்தது. சூரியகுமார் யாதவ் தன் மிட்விக்கெட் மீதான ட்ரேட் மார்க் விப் ஷாட்களை பிரமாதமாக ஆடி மிகவும் ஃப்ரீயாக ரன்களை எடுக்கத் தொடங்க இந்தியா 10 ஓவர்களில் 85 என்று டார்கெட்டை நோக்கி விரைவு கதியில் முன்னேறியது.ரோகித் சர்மா 48 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டின் ஸ்லோ பவுன்சரில் காலியானார். ஆனால் சூரியகுமார் யாதவின் பவுண்டரிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் 34 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தார். போல்ட் 16வது ஓவரில் கையில் வந்த கேட்சை சூரியகுமார் யாதவுக்கு விட்டார், ஆனால் அப்போதே இந்திய வெற்றிக்கு 24 பந்துகளில் 23 ரன்கள்தான் தேவைப்பட்டது.

சூரியகுமார் யாதவ் 40 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 62 ரன்களில் வெளியேற, ஷ்ரேயஸ் அய்யர் தூக்கி கையில் கொடுத்து விட்டுப்போக ஆட்டம் நெருக்கடியாக மாறியது கடைசி 18 பந்தில் 21 தேவை என்று மாறிய ஆட்டத்தில் அடுத்த 2 ஓவர்களில் இந்தியா 11 ரன்களை மட்டுமே எடுத்தது, வெங்கடேஷ் அய்யர் பவுண்டரியும், ரிஷப் பந்த்தின் பினிஷிங்கும் கைகொடுத்தன என்பதை விட, நியூசிலாந்தில் பவுலர்கள் கோட்டா முடிந்து மிட்செல் வீசியதால் வெற்றி சமைந்தது என்பதுதான் சரி. ஆட்ட நாயகனாக உண்மையில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, R Ashwin, Rohit sharma, T20, Team India

அடுத்த செய்தி