கோலி தொட்டதெல்லாம் பொன்னாகிறது: நாசர் ஹுசைன் தாராளம்

விராட் கோலி

லார்ட்ஸ், ஓவல் வெற்றிகளைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 • Share this:
  லார்ட்ஸ்டில் 60 ஓவர்களுக்குள் இங்கிலாந்தைச் சுருட்டிய அதே ஆக்ரோஷம் இந்த டெஸ்ட்டில் இல்லாவிட்டாலும் உணவு இடைவேளைக்குப் பிறகு களவியூகம், பந்து வீச்சு மாற்றம், ஜடேஜாவைப் பயன்படுத்திய விதம் ஆகியவை பெரும் பாராட்டுக்குரியனவாகியுள்ளது. இந்தியா 2-1 என்று டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்து தொடரை வெல்ல வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இங்கிலாந்து இனி தொடரை வெல்ல முடியாத நிலைக்கு கோலி தள்ளியுள்ளார்.

  இந்நிலையில் நாசர் ஹுசைன் கூறியதாவது: “பந்து வீச்சில் ஒவ்வொரு மாற்றமும் கைகொடுத்தது, பீல்டிங்கில் மாற்றமும் இப்படித்தான் விக்கெட்டை பெற்றுத் தந்தது. தேநீர் இடைவேளக்குப் பிறகு புதிய பந்தை எடுத்தவுடன் நேரடியாக விக்கெட் காலியானது. உமேஷ் யாதவ் கிரெய்க் ஒவர்டனை வீழ்த்தினார். இது கோலியின் மிடாஸ் டெஸ்ட். கோலி தொட்டதெல்லாம் பொன்னான மிடாஸ் டச். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் புகழ்பெற்ற தொடர் வெற்றியை இந்தியா கொண்டாடும். ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வென்ற பிறகு இன்னொரு மகுடம்.

  ஜடேஜாவை கோலி புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினார். இதை மொயின் அலியைக் கொண்டு ரூட் செய்யவில்லை. ஒரு முனையில் ஜடேஜாவை வீசச் செய்து இன்னொருமுனையில் கோலி வேகப்பந்து வீச்சை சுழற்சி முறையில் வீச வைத்தார். அதாவது அவர்கள் அதிக ஓவர்கள் வீசாமல் குறைந்த ஓவர்கள் ஆனால் வேகம் அதிகம் என்ற முறையில் கோலி பயன்படுத்தினார்.

  மாறாக மொயின் அலியை புறக்கணித்ததால் ரூட் வேகப்பந்து வீச்சாளர்களை களைப்படையச் செய்து விட்டார். இதனால் 5வது டெஸ்ட் போட்டி ஓல்ட் ட்ராபர்டிலும் சிக்கல்களைச் சந்திப்பார் ரூட்.

  ஜடேஜா இன்னொரு காரியமும் செய்தார், ஹசீப் ஹமீது, மொயின் அலி போன்ற முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு வலது கை பேட்ஸ்மெனின் லெக் ஸ்டம்புக்கு வெளியே இருந்த பவுலர்கள் காலடித் தடத்தில் பிட்ச் செய்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் எடுப்பதற்கான ஒரு வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். இதனால்தான் பந்து ஒரு பக்கம் மென்மையாகவும் இன்னொரு பக்கம் கனமாகவும் மாறி ரிவர்ஸ் ஸ்விங் எடுத்தது” இவ்வாறு புகழ்ந்தார் நாசர் ஹுசைன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: