India vs England | இஷாந்த் சர்மாவின் ஆக்‌ஷன் போய்விட்டது, இனி அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்;  சிராஜைக் கொண்டு வர வேண்டும்

இஷாந்த் சர்மா

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலேயே முகமது சிராஜ் ஆடியிருக்க வேண்டும், ஸ்விங் நிலைமைகளில் இவர்தான் சிறந்த பவுலர், ஆனால் இஷாந்த் சர்மாவை அணியில் எடுத்தனர்.

  • Share this:
இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் எடுத்தாலும் அவரது பந்து வீச்சு பின்னடைவு கண்டு விட்டது, அல்லது இனி வரப்போகும் டெஸ்ட்களில் சாத்து வாங்குவார் என்று அவரது மாறிய ஆக்‌ஷனை வைத்துக் கூற முடியும்.

நேராக நிமிர்ந்து ஓடி வந்து தலை நேராக இருக்குமாறு உடலை வளைக்காமல் தோள்பட்டை வலிமை மற்றும் மணிக்கட்டு இயக்கத்தில் அவர் குட்லெந்தில் பிட்ச் செய்து ஒரே ஆக்‌ஷனில் அவுட்ஸ்விங்கர், இன்ஸ்விங்கர் வீசிய போது ரிக்கி பாண்டிங் உள்ளிட்டவர்களையே அச்சுறுத்தினார், மேத்யூ ஹெய்டன் திணறினார்.

ஆனால் சமீப காலமாக அவர் ஓடி வந்து கிரீசுக்கு அருகில் உடலைக் குனியச் செய்து, முதுகை வளைத்து, இடதுமுழங்கால் லேசாக மடங்கிய நிலையில் வீசுகிறார், கையும் காதோடு ஒட்டி வராமல் உடலை விட்டுத் தள்ளி செல்கிறது. முன் காலை மடக்கும் போது அவரது உயரம் குறைகிறது, இதனால் பந்து அவர் நினைக்கும் இடத்தில் பிட்ச் ஆகாது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான எச்சரிக்கை மணி ஆகும்.இப்படி வீசினால் பந்தில் வேகம் இருக்காது, ஸ்விங் கொஞ்சம்தான் இருக்கும், லெந்த்தைக் கண்டுப்பிடிக்க சிரமப்படுவார், இப்போதைக்கு சரியாக வீசுவது போல் தெரியும், ஆனால் இந்த ஆக்‌ஷன் மாற்றம் அவராக மாற்றியதா, இல்லை தானாகவே இப்படி மாறியதா என்பதை பயிற்சியாளர் பாரத் அருண் அவரிடம் பேச வேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்துக்கு அஞ்சி தங்களது ஆக்‌ஷனை மாற்றி விடுவார்கள், மேலும் ஐபிஎல் போன்ற டி20களில் ஆட வேண்டிய நிர்பந்தம் காரணமாக, வருமானம் காரணமாக ஆக்‌ஷனை காயமடையா வண்ணம் மாற்றி கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது. மேலும் இடது கை பேட்ஸ்மென்களுக்கு ஓவர் த விக்கெட்டில் வீசி பந்தை குறுக்காக செலுத்துவதற்குப் பதிலாக ரவுண்ட் த விக்கெட் உத்தியைக் கடைப்பிடிப்பதும் அவரது ஆக்‌ஷனால் ஏற்பட்ட மாற்றமே.

இடது கை பேட்ஸ்மென்கள் ஒரு கண்ணால் பார்க்கும் ஓவர் த விக்கெட் பவுலிங்தான் அவர்களை தவறிழைக்க வைக்கும், ரவுண்ட் த விக்கெட்டில் வீசும்போது இடது கை பேட்ஸ்மென்கள் பந்தை இரு கண்களாலும் பார்க்கின்றனர். ஆனால் இது வலது கைபேட்ஸ்மென்களுக்குப் பொருந்தாது, ஏனெனில் வலது கை பேட்ஸ்மென்கள் எப்போதுமே ஒரு கண்ணால் பார்த்து தான் ஆடுகின்றனர். இந்தியாவின் முன்னாள் வீரர் மொகீந்தர் அமர்நாத், அல்லது பாகிஸ்தானின் பவாத் ஆலம் போல் வித்தியாசமாக நிற்பவர்களுக்கு இது பொருந்தாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே இஷாந்த் சர்மா இந்த ஆக்‌ஷனிலிருந்து பழைய ஆக்‌ஷனுக்கு மாறும் வரை அவருக்குப் பதிலாக முகமது சிராஜை அணியில் தேர்வு செய்ய வேண்டும். சிராஜ் இங்கிலாந்து பிட்ச்களுக்கு துல்லியமாகப் பொருந்தக்கூடியவர்.ஆஸ்திரேலியாவில் எப்படி இஷாந்த் சர்மா பிரமாதமாக தன் அறிமுக நாட்களில் வீசினாரோ அதே போல் சிராஜ் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் கலக்கினார். சிராஜ் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இந்தியக் குழிபிட்ச்களிலும் கூட சிராஜ் பவுலிங் பிரமாதமாக இருந்தது.

இந்நிலையில் அஸ்வின், ஜடேஜாவை அணியில் இங்கிலாந்து டெஸ்ட்களில் தேர்வு செய்தாலும் இஷாந்த் சர்மாவை உட்கார வைத்து சிராஜை தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும்.
Published by:Muthukumar
First published: