ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இங்க பும்ரான்னா அங்க டாப்லீ- இந்தியாவுக்கு ஷாக்- 100 ரன்களில் வென்று செம பதிலடி

இங்க பும்ரான்னா அங்க டாப்லீ- இந்தியாவுக்கு ஷாக்- 100 ரன்களில் வென்று செம பதிலடி

இங்கிலாந்தின் ரீசி டாப்லி 24/6 இந்தியாவை சுருட்டிய ஆட்ட நாயகன்

இங்கிலாந்தின் ரீசி டாப்லி 24/6 இந்தியாவை சுருட்டிய ஆட்ட நாயகன்

லார்ட்சில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து பவுலர் டாப்லீ அற்புதமாக வீசி இந்தியாவை 146 ரன்களுக்குச் சுருட்ட இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

லார்ட்சில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 24 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து பவுலர் டாப்லீ அற்புதமாக வீசி இந்தியாவை 146 ரன்களுக்குச் சுருட்ட இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது, இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதல் போட்டியில் சரியாக இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தவர், இந்த முறை பீல்டிங் தேர்வு செய்தது தவறான முடிவானது, பிட்சில் பந்துகள் எழும்பின, கொஞ்சம் ஸ்விங்கும் ஆகின. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சை ஆடவரவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவும் இடது கை வேகப்பந்து வீச்சு என்றால் அந்தக்காலத்திலிருந்தே ஆட வராது, பாகிஸ்தானின் ஹசீம் ஹபீஸ் முதல் இப்போதைய டாப்லீ வரை இந்தியாவை பிடித்து ஆட்டி படைத்துள்ளனர், என்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சை ஆடும் பேட்டிங் வரலாற்றின் இருண்ட பக்கம்.

பேட்டிங்கில் இறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஷமி, பும்ராவிடம் திணறினர், ஷிகர் தவான் ஸ்லிப்பில் ஒரு கேட்சை விட்டார், செம தடவு தடவிய ஜேசன் ராய் கடைசியில் ஷமியை இறங்கி வந்து  ஒரு பெரிய சிக்சரை மிட்விக்கெட்டில் அடித்தார், பேர்ஸ்டோவும் மெல்ல மெல்ல டச்சுக்கு வரை இருவரும் 9 ஓவர்களில் 41 என்று ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஜேசன் ராய் தடவல் 23 ரன்களுடன் ஹர்திக் பாண்டியா (2/28)பந்தை சிப் ஷாட் ஆடப்போய் டீப்பில் கேட்ச் ஆகி முதல் விக்கெட்டாக வெளியேறினார்.

ஜானி பேர்ஸ்டோ அபாயகரமாக 38 ரன்களில் ஆடிவந்த போது யஜுவேந்திர சாஹல் (4/47) தன் அபாரமான பந்து வேக மாற்றுத்திறனினால் பேர்ஸ்டோவை பவுல்டு செய்தார். ஸ்வீப் ஆடப்போய் பந்து சிக்கவில்லை. ஜோ ரூட் 21 பந்தில் 11 ரன் என்று செம தடவு தடவி ஸ்வீப் ஆடப்போய் செஹலிடம் எல்.பி.ஆனார். பென் ஸ்டோக்ஸ் செஹலை அப்செட் செய்ய ரிவர்ஸ் ஸ்வீப்பாக ஒரு ஓவர் முழுக்க ஆடினார், 4 ரிவர்ஸ் ஸ்வீப்புகளில் 2 பவுண்டரிகள் அடித்து 21 ரன்கள் எடுத்த நிலையில் செஹலை மீண்டும் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் பேலன்ஸ் போய் கீழே விழுந்து எல்பி ஆகி வெளியேறினார்.

அடுத்த அபாய வீரர் ஜாஸ் பட்லர் வந்த வேகத்துக்கு ஷமியின் (1/48) அற்புதமான இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆனார், ஆனால் இந்த பந்து ஸ்லாட்டில் இருந்த பந்து, பவுண்டரி பந்து, ஆனால் அப்படியும் பட்லர் பவுல்டு ஆகிச்சென்றார். லியாம் லிவிங்ஸ்டனுக்கு ஷார்ட் பிட்ச் பந்தில் டெஸ்ட் வைத்தனர், கடுமையாகத் திணறினார். ஒரு பந்தில் ஹெல்மெட்டில் அடியும் வாங்கினார். ஆனால் இவரும் 33 ரன்களில் ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்கிறேன் பேர் வழி என்று டீப் ஸ்கொயர் லெக்கில் வெளியேற இங்கிலாந்து 148/6 என்று இருந்தது.

அதிலிருந்து 246 அடித்ததற்கு டேவிட் வில்லே 15 ரன்களுக்குள் இருந்த போது பிரசித் கிருஷ்ணா கேட்சை விட்டார். பிறகு 24 ரன்களில் மீண்டும் கொஞ்சம் கடின வாய்ப்பை ஹர்திக் பாண்டியாவும் வில்லேவுக்கு தவற விட்டார். வில்லே 41, மொயீன் அலி 47 ஆகியோர் இணைந்து 62 ரன்களை 7வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர், பிரசித் கிருஷ்ணா வாங்கினார். ஜஸ்பிரித் பும்ராவின் கடைசி ஓவர்களும் சாத்து முறை நடந்தது. அவர் 2/49 என்று இன்னிங்சை 246 ரன்களுடன் முடித்தார்.

தவான், ரோஹித் சர்மா செம தடவு; டாப்லீயிடம் மடிந்த இந்திய அணி

இந்திய அணிக்கு முதல் 5 ஓவர்களில் வந்த முதல் பேட் ரன்கள் 5வது ஓவரில்தான் வந்தது, அதற்கு முன் லெக் பை தான் வந்தது, ரோஹித் சர்மா அன்று அபாரமாக ஆடிவிட்டு நேற்று பந்துகளுக்கு நடனமாடினார். ஷிகர் தவான், நீண்ட காலமாக ஐபிஎல் உள்ளிட்ட மிகவும் தரமற்ற பந்துவீச்சை ஆடிவிட்டு திடீரென ஸ்விங் பந்துகளில் ஆடு என்றால் என்ன செய்வார், பாவம் அவரும் நடனமாடினார்.

டாப்லி இந்திய அணியின் பலவீனத்தை நன்றாகப் பயன்படுத்தினார். ரோஹித்தை டக்கில் எல்.பி.செய்ய, ஷிகர் தவன் லெக் திசை எட்ஜில் காலியானார். பிரைடன் கார்ஸின் ஃபுல்டாஸை நேராக மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ரிஷப் பண்ட்டும் டக் அவுட் ஆனார். விராட் கோலி 2 நேர் பவுண்டரிகளை அடுத்தடுத்து அடித்து மொத்தம் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவரது பேட் எட்ஜ் ‘என்ன நான் இருப்பதை மறந்து விட்டாயா?’ என்று கேட்க இல்லை இல்லை என்று கோலி டாப்லி பந்தை எட்ஜ் செய்து பட்லரிடம் சிக்கி வெளியேறினார், இந்தியா 31/4.

சூரியகுமார் யாதவ் (31), ஹர்திக் பாண்டியா (27) கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தனர். டாப்லீ மீண்டும் வந்தார், சூரியகுமார் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். மொயீன் அலியிடம் அவுட் ஆனார் ஹர்திக். ஜடேஜா (29), ஷமி (23)ஆறுதலுக்கான ஷாட்களை ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

டாப்லி, லிவிங்ஸ்டன் சம்பிரதாயத்தை முடித்து வைத்தனர். முதல் ஒருநாள் போட்டியிலேயே இங்கிலாந்து ஒரு 150 ரன்களை அடித்து ஒழுங்காகப் பந்து வீசியிருந்தால், அதாவது ஷார்ட் பிட்ச் என்று தன் காலுக்கு பக்கத்திலேயே பவுலர்கள் குத்தாமல் போட்டிருந்தால் ஒருவேளை அந்த மேட்சிலும் இந்திய அணியை ஒரு கை பார்த்திருக்கலாம் என்றே நேற்றைய போட்டியை பார்க்கும் போது நமக்குத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. டாப்லீ 24 ரன்களுக்கு 6 விக்கெட், ஆட்ட நாயகன். ஞாயிறன்று வாழ்வா சாவா இறுதிப்போட்டி.

First published:

Tags: India Vs England, Yuzvendra chahal