IND vs ENG | பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

IND vs ENG | பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

IND vs ENG

இந்திய அணியின் ஓபனிங் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி பெவிலியன் திரும்பினர்.

  • Share this:
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி  8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இதையடுத்து கடைசி டி20 போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும்.

    இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த 3 போட்டிகளிலும் முதலில் டாஸ் வென்ற அணியே போட்டியை வென்றது. டி20 தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

    இந்த போட்டியிலும் இந்திய அணியின் ஓபனிங் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி பெவிலியன் திரும்பினர். ரோஹித் சர்மா (12), கே.எல்.ராகுல் (14), கேப்டன் கோலி (1) ரன்னிலும் அவுட்டாகினர். ஆனால் சூர்யகுமார் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதி ஓவர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் தன் பங்கிற்கு அதிரடி காட்ட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு  185 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் சறுக்கலாக அமைந்தது. பட்லர் 9 மற்றும் டேவிட் மலன் 14 ரன்னில் அவுட்டாகினர். ஜோசன் ராய் அதிரடியாக விளையாடி 40 ரன்னில் அவுட்டானார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பேரிஸ்டோவ் இந்திய சுழற்பந்தை துவம்சம் செய்து சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினர். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 52 ரன்களை அள்ளிக் கெடுத்தார்.

    இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் இங்கிலாந்திற்கு டஃப் கொடுக்க ஸ்டோக்ஸ், கேப்டன் மார்கன் சர்துல் தாகூர் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகினர். பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 23 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன், அடுத்த பந்தில் பந்தில் பவுண்டரி, 3-வது பந்தில் சிக்ஸர் என ஆர்ச்சர் விளாச போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் சற்று பதற்றமடைந்த தாகூர் தொடர்ந்து இரண்டு வொய்டு வீசி தேவையில்லாமல் 2 ரன்கள் கொடுத்தார். அடுத்து 4-வது பந்தில் ஒரு ரன் கொடுத்தார். இதையடுத்து 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் ஜோர்டன் விக்கெட்டை தாகூர் வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டார். ஒரு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியாவின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி பந்தில் ரன் ஏதும் கொடுக்காமல் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2-2 என தொடர் சமநிலையில் உள்ளது. கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
    Published by:Vijay R
    First published: