Virat Kohli: பேட்டிங்கும் சொதப்பல், பவுலிங்கும் ஊற்றிக்கொள்ள நடுவரிடம் வாக்குவாதமா?-கோலி மீது விமர்சனம்

கொடுமையான முதல் நாளான 3வது டெஸ்ட்

விராட் கோலி ஒழுங்காக பேட்டிங் பார்முக்குத் திரும்புவது நல்லது, ஒவ்வொருமுறை அவர் பேட்டிங்கில் சொதப்பும்போதும் களத்தில் அவரது நடத்தை கடும் கண்டனங்களை எழுப்பும் நிலைக்குச் செல்கின்றன.

  • Share this:
    விராட் கோலி ஒழுங்காக பேட்டிங் பார்முக்குத் திரும்புவது நல்லது, ஒவ்வொருமுறை அவர் பேட்டிங்கில் சொதப்பும்போதும் களத்தில் அவரது நடத்தை கடும் கண்டனங்களை எழுப்பும் நிலைக்குச் செல்கின்றன. நேற்று ஹெடிங்லேயில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து பிட்சைத் தவறாகக் கணித்து அவரும் சொதப்பி அணி மொத்தமும் சொதப்பி 78 ரன்களுக்கு சுருண்டது.

    ஒவ்வொரு முறை அவர் பேட்டிங்கில் சீப்பாக அவுட் ஆகும் போதெல்லாம் மைதானத்தில் அல்லது ஓய்வறையில் சார்பட்டா டான்சிங் ரோஸ் ஆகி கவன ஈர்ப்பு வேலைகளில் ஈடுபடுவது சகிக்க முடியாத வகையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அவரை சாடுகின்றன.

    அதுவும் குறிப்பாக தெரு கிரிக்கெட் போல், ஸ்கூல் பையன்கள் கிரிக்கெட் போல், கல்லி கிரிக்கெட் போல் எப்போதும் நடுவரிடம் வாக்குவாதம் புரிவது பார்க்க அபத்தமாக இருப்பதாக இங்கிலாந்தின் வர்ணனையாளர் டேவிட் லாய்ட் கடுமையாக கோலியை விமர்சித்துள்ளார்.

    கோலி ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் காட்சி.


    மேலும் நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு காட்டும் பிரிவில் அவருக்கு அபராதம் அல்லது ஒன்றிரண்டு போட்டிகள் தடை விதிக்க வேண்டும் என்று அவர் ஊடகம் ஒன்றில் காட்டமாக எழுதியுள்ளார்.

    நேற்று முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், இந்த மைதானத்துக்கு நாங்க புதுசு என்பது போல் 78 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. பிறகு இங்கிலாந்து பேட் செய்யும் போது பவுலிங்கும் ஊற்றிக் கொண்டது.

    இஷாந்த் சர்மா


    அப்போது இஷாந்த் சர்மா தாறுமாறாக ஒரு ஓவரை வீசினார். நோபால்கள், வைடு என்று 10 பந்துகளை ஒரே ஓவரில் வீசினார். ஒரு பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மிகவும் வைடு அதை நடுவர் வைடு என்றவுடன் நாட்டாமை கோலி வந்தார், தீர்ப்ப மாத்திச் சொல்லு என்று நடுவரிடம் வாக்குவாதம் புரிந்தார். நடுவர் அலெக்ஸ் வார்ஃப் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டது நடுவரின் பெருந்தன்மையே. கோலி போன்ற ஒருவர் இப்படிச் செய்யலாமா? அவருக்கு ஒருமுறை தண்டனை அளித்தால்தான் கோலி திருந்துவார் என்கிறார் டேவிட் லாய்ட்:

    “விராட் கோலி கிரேட் பிளேயர் ஆனால் அவரிடம் மிகவும் ஏமாற்றமளிப்பது தொடர்ந்து நடுவர்களின் தீர்ப்பில் குறுக்கிட்டு வாக்குவாதம் புரிந்து வருகிறார், இது ஆட்டத்தின் மாண்பை கெடுப்பதாகும்.

    இஷாந்த் சர்மா இருமுறை நோ-பால் வீசினார், பிறகு ஒரு ஆஃப் சைடு வைடு போடப்பட்டது. அதை நடுவர் அலெக்ஸ் வார்ஃப் மிகச்சரியாக வைடு என்றார். முதல் ஸ்லிப்பிலிருந்து கோலி தன் அதிருப்தியை உடனே வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்தவுடன் இதை நடுவருடன் விவாதித்தார். அது வைடு அவ்வளவுதான், நடுவர்களுக்கு வீரர்களை இத்தகைய நடத்தைக்காக தண்டிக்கும் உரிமை அளிக்க வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார் அவர்.
    Published by:Muthukumar
    First published: