''அஸ்வின் தான் வர்ராரு, விக்கெட் எடுக்க போராரு",  "வெற்றி நடை போடும் தமிழ் மகனே" - அஸ்வினை கொண்டாடும் ரசிகர்கள்

India vs England

India vs England | ரவிசந்திரன் அஸ்வின் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறையாகும்.

  • Share this:
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார். ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் அஸ்வின் சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.

கொரோனோ வைரஸ் காரணமாக முதல் போட்டி  ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்நிலையில் விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக அரசு 50% பார்வையாளர்களை  அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ள நிலையில்  இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 14 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்.
முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டை வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் 29 வது முறையாக ஐந்து விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலியிடம் ஜோடி சேர்ந்த அஸ்வின் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் தனது ஐந்தாவது சதத்தை பதிவு செய்தார்.சொந்த மண்ணில் சதம் விளாசுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

ரவிசந்திரன் அஸ்வின் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறையாகும். இந்த சாதனையை ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் கொண்டாடி தீர்த்துள்ளனர். அஸ்வின் சாதனை ஒரு தமிழச்சியாக என்னை பெருமையடைய வைத்துள்ளதாக ரசிகர் ஒருவர் மகிழ்ச்சியடைகிறார்.

நான்காம் நாள் ஆட்டத்தை பார்க்க வந்திருந்த ரசிகர்கள், " அஸ்வின் தான் வர்ராரு விக்கெட் எடுக்க போராரு",  " வெற்றி நடை போடும் தமிழ் மகனே" என எழுதப்பட்ட பேனருடன் வந்து அஸ்வின் சாதனையை கொண்டாடி தீர்த்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து  119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார்.
அத்துடன் முடித்துக்கொள்ளாமல் மைதானத்திற்கு வந்த  தமிழக ரசிகர்களுக்கு மாஸ்டர் விஜயின் டேன்ஸ் மூவ்மெண்ட் போட்டு குஷிப்படுத்தினார்.
Published by:Vijay R
First published: