‘வல்லுநர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேச வேண்டும், ஆடுகளம் பற்றி அல்ல’ - ரோகித் சர்மா சாடல்

ரோகித் சர்மா

என்னை பொருத்தவரையில் பிட்ச்சை பற்றியான விவாதங்கள் தேவையற்றது. வீரர்கள் அவர்களின் ஆட்டத்திறன் குறித்து விவாதியுங்கள். அவர்கள எவ்வாறு பேட்டிங், பவுலிங் செய்கிறார்கள் என்பதை பற்றி பேசுங்கள் ஆனால் பிட்ச்சை பற்றி பேசாதீர்கள். இரு அணிகளும் ஒரே ஆடுகளத்தில் விளையாடுகின்றன, யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

  • Share this:
வல்லுநர்களை ஆடுகளம் பற்றி பேசுவதற்கு பதிலாக கிரிக்கெட்டை பற்றி பேச வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது குழி பிட்ச், மோசமான பிட்ச் என்பது போன்ற விவாதங்கள் எழுந்தன. சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் மூன்றரை நாட்களில் முடிவு கிடைத்தது. இதனையடுத்து இந்த விமர்சனங்கள் அதிகரித்தன.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா வல்லுநர்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேச வேண்டும், ஆடுகளம் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என பிட்ச் மீதான விவாதங்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்தியாவில் பிட்ச்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுகிறதே என்ற கேள்வி எழுந்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரோகித் சர்மா பேசும்போது, “இரண்டு அணிகளுமே ஒரே ஆடுகளத்தில் தான் விளையாடுகின்றன. அப்படி இருக்கும் போது ஆடுகளம் பற்றி எதற்காக விமர்சிக்கிறார்கள் என புரியவில்லை. பொதுமக்களும் இதனைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே பிட்ச்கள் இப்படித்தான் இருக்கின்றன என்பதே உண்மை.

எதுவும் மாறக்கூடாது என்று நான் நினைக்கவில்லை. எல்லோரும் ஹோம் பிட்ச்கள் மீதான முன்னுரிமையை பயன்படுத்துகிறார்கள். நாங்கள் வெளி நாடுகளுக்கு செல்லும்போது, ​​யாரும் நம்மைப் பற்றி நினைப்பதில்லை - எனவே நாம் ஏன் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்?

எங்கள் அணியின் விருப்பத்துடன் நாங்கள் செல்ல வேண்டும். அதுதான் ஹோம் பிட்ச்சின் முன்னுரிமைக்கான பொருள். இல்லையெனில், அந்த முன்னுரியை நீக்கி விடுங்கள். இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் உள்ள ஆடுகளங்களுக்கு ஐ.சி.சி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான விதிமுறையை கொண்டு வர வேண்டும்.

நாங்கள் வெளிநாட்டிற்கு சென்றால் அங்கு எங்களுக்கு கடினமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது. என்னை பொருத்தவரையில் பிட்ச்சை பற்றியான விவாதங்கள் தேவையற்றது. வீரர்கள் அவர்களின் ஆட்டத்திறன் குறித்து விவாதியுங்கள். அவர்கள எவ்வாறு பேட்டிங், பவுலிங் செய்கிறார்கள் என்பதை பற்றி பேசுங்கள் ஆனால் பிட்ச்சை பற்றி பேசாதீர்கள். இரு அணிகளும் ஒரே ஆடுகளத்தில் விளையாடுகின்றன, யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

ஒரு அணியாக இதை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. பிட்ச்சை பற்றி அதிகம் யோசிப்பதால் ஒன்றும் மாறி விடாது. அந்த பிட்ச்சில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதே எங்கள் கவனமாக இருக்கும் . எனவே வல்லுநர்கள் பிட்ச்சை பற்றி பேசாமல் கிரிக்கெட் பற்றி பேச வேண்டும்” இவ்வாறு ரோகித் பேசினார்.
Published by:Arun
First published: