டெஸ்ட் தொடர் போல் டி20-க்கும் ‘குழி பிட்ச்’ தானோ? : பீதியில் இயான் மோர்கன்

இயான் மோர்கன்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் 4ம் நாள், அல்லது 5ம் நாள் பிட்ச்கள் போல் டி20க்குப் போடப்பட்டால் அது சரியாக இருக்காது.

 • Share this:
  தங்கள் அணி டி20, ஒருநாள் கிரிக்கெட்டில் சமீபத்தில் பல வெற்றிகளைப் பெற்றிருப்பதாலும் வலுவான அணி என்பதாலும், உலகக்கோப்பையை மனதில் கொண்டும் பந்துகள் திரும்பும் ஸ்பின் பிட்ச்களைத்தான் இந்த 5 டி20 போட்டிகளுக்கும் வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம் என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

  டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட்டில் முதல் 2 நாட்கள் தார்ச்சாலை, பிறகு குண்டும் குழியுமானது, ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளும் 17-18-ம் நூற்றாண்டு கிராமப்பாதை போல் குண்டும் குழியுமாக மண்ணும் புழுதியுமாகப் போடப்பட்டது. இந்திய அணி வென்றது. இப்படி அந்த அணியின் ரிதத்தை காலி செய்தாகிவிட்டது, அதனால் அகமதாபாத்தில் ஒரு மிதமான குழிப்பிட்சை போடலாம் என்று போட்டனர், அதான் 2 படுகுழிப்பிட்சில் அவர்களை காலி செய்தாகி விட்டதே, இதிலும் அவர்களுக்கு கால் நகரவில்லை, கை வரவில்லை, தோற்றுப் போனார்கள்.

  இந்நிலையில் டி20 தொடருக்கும் டெஸ்ட்டுக்குப் போட்டது போல் அந்த மாதிரி குழிப்பிட்ச் இல்லாவிட்டாலும் ஸ்பின் சாதக, பந்துகள் திரும்பும் பிட்ச்களை இந்தியா விரும்பும் என்று மோர்கன் கூறியுள்ளார்.

  அவர் கூறியதாவது:

  நாங்கள் டி20 கிரிக்கெட்டில் கிரேட் ஃபார்மில் இருக்கிறோம், இதன் மூலம் நிறைய தன்னம்பிக்கை எங்களிடம் வந்தடைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சிலபல பிரமாதமான வெற்றிகளை ஈட்டியுள்ளோம்.

  ஆனால் உலகக்கோப்பையைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறோம். எங்களிடம் வலுவான அணி உள்ளது, பொதுவாக இப்படி அமையாது. அதனால் எந்த திட்டத்தையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் எந்தத் திட்டத்துடனும் களமிறங்கும் நம்பிக்கையும் பிறந்துள்ளது .

  டெஸ்ட் போட்டிகளில் போடப்பட்டது போன்ற பிட்ச்கள் தான் டி20யிலும் இருக்கும் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் பந்துகள் திரும்பும் பிட்ச்கள் போடப்படும் என்றே கருதுகிறேன்.

  2016-ம் ஆண்டு உலகக்கோப்பை இங்கு நடந்த போது பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை. ஆனால் குறைந்த ஸ்கோர் போட்டிகள் அதிகமிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். நியூஸிலாந்து இந்தியாவை வீழ்த்தியது, இந்தியாவும் ஆப்கானும் வெஸ்ட் இண்டீஸை வறண்ட பிட்சில் வீழ்த்தினர்.

  வறண்ட பிட்ச்களில் பவுலிங் செய்யும் விதம் பற்றி இங்கிலாந்து பவுலர்கள் கற்றுக் கொண்டு வருகின்றனர். குறைந்த ஸ்கோர் டி20 போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக ஆட விரும்புகிறோம். எனவே இந்திய சவாலை எதிர்நோக்குகிறோம்.

  டெஸ்ட் கிரிக்கெட்டின் 4ம் நாள், அல்லது 5ம் நாள் பிட்ச்கள் போல் டி20க்குப் போடப்பட்டால் அது சரியாக இருக்காது. 2016 போல் பிட்ச்கள் இருந்தால் 120 ரன்களை எதிர்த்து 90 ரன்கள் என்றுதான் மேட்ச்கள் இருக்கும். லோ ஸ்கோர் போட்டிகளில் ஆட எங்களுக்கு அனுபவம் வேண்டும். நாங்கள் இப்படிப்பட்ட போட்டிகளில் அதிகம் ஆடியதில்லை.

  இந்தத் தொடர் அனைவருக்கும் சவால்தான், பேட்டிங் பவுலிங் பீல்டிங், ஆனால் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

  இவ்வாறு கூறினர் மோர்கன், நாளை முதல் டி20 போட்டி தொடங்குகிறது.
  Published by:Muthukumar
  First published: