மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்?

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்?

கோலி

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள MCA மைதானத்தில் மார்ச் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  • Share this:
இங்கிலாந்துக்கு எதிராக புனேவில் நடைபெறவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக வேறு ஒரு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து பிசிசிஐ பரீசிலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 3வது போட்டி அகமதாபாத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதே மைதானத்தில் தான் மார்ச் 4ம் தேதி முதல் கடைசி டெஸ்ட் போட்டியும் தொடங்க உள்ளது.

டெஸ்ட் தொடருக்கு பின்னதாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரும் இதே மைதானத்தில் தான் தொடங்கி நடைபெற உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள MCA மைதானத்தில் மார்ச் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனிடையே, தற்போது மகாராஷ்டிராவில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் புனேவில் ஒரு நாள் தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிராவுக்கு வெளியே வேறு ஒரு இடத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வேளை கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் செயல்படுத்தும் வகையில் இந்த பரிசீலனையை பிசிசிஐ மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் 8,000 என்ற அளவை கடந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மகராஷ்டிராவின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளையும் மும்பைக்கு பதிலாக வேறு நகரங்களில் நடத்த பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மும்பையில் 4 சர்வதேச மைதானங்கள் இருந்தும் கொரோனா பரவல் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: