முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு நாங்கதான் போவோம்: சொல்லி அடித்த ரிஷப் பந்த்தின் மாஸ்டர் கிளாஸ் சதம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு நாங்கதான் போவோம்: சொல்லி அடித்த ரிஷப் பந்த்தின் மாஸ்டர் கிளாஸ் சதம்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். இந்தப் பிட்சில் 100-150 ரன்கள் முன்னிலை என்பது பெரிய விஷயம். கடினமான பிட்சில் ரிஷப் பந்த் எடுத்த சதம் இந்திய வெற்றிக்கு வழிவகுத்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று இங்கிலாந்தின் அதியற்புத கடின உழைப்பிலான பந்து வீச்சில் இந்தியா 121/5 என்றும் பிறகு அஸ்வினும் வெளியேற 146/6 என்றும் இருந்த நிலையில் இங்கிலாந்துக்கு ஒரு வாய்ப்பு இருந்தது.

ஆனால் ரிஷப் பந்த் ஒரு புறம் தடுப்பாட்டத்திலும் அதன் பிறகு ‘என்னை நிற்க விட்டாயா?’ இதோ பார் என்று புகுந்த அதிரடி ஆட்டமும் உண்மையில் வியக்க வைப்பதாக அமைந்த்து.

பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக வீசி விராட் கோலியை எகிறு பந்தில் டக் அவுட் ஆக்க, இந்தப் பிட்சில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸிக்கு அடித்தளம் போட்ட ரோஹித் சர்மாவை பெரிய இன்ஸ்விங்கரிலும் வீழ்த்தினார், ஒரு புறம் ரன்கள் வர மறுத்தது ஆண்டர்சன் ஒரு கட்டத்தில் 10 ஓவர் 8 மெய்டன் 3 ரன்கள் என்று படுசிக்கனமாக வீசினார், பவுண்டரிகள் முடக்கப்பட்டன.

ஆனால் டாம் பெஸ் இங்கிலாந்து அணியின் சுமையாகத் திகழ்ந்தார், 2 பந்துகள் அருமையாக வீசினால் 2 புல்டாஸ்களை வீசி பவுண்டரி அளிக்கிறார், இதனால் அவரது பந்து வீச்சுக்கு களவியூகம் அமைக்க ஜோ ரூட் திணறியதைப் பார்க்க முடிந்தது. பந்த், வாஷிங்டன் சுந்தர் சதக்கூட்டணி அமைத்தனர்.

ரிஷப் பந்த்தின் அதிர்ஷ்டமும் அசாத்திய துணிச்சலும்

அரைசதம் அடிக்கும் முன்னர் டாம் பெஸ் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி ஒரு பந்தை உள்ளே கொண்டு செல்ல பின் காலில் சென்று ஸ்டம்ப் அருகே ரிஷப் பந்த் கால்காப்பில் வாங்கினார். அது பிளம்ப் எல்பி., எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவுட் ஆனால் நடுவர் நேராக இருப்பவருக்கு அது அவுட் இல்லை போலும். நாட் அவுட் என்றார், இங்கிலாந்து ரிவியூ செய்தது, வழக்கம் போல் அம்பயர்ஸ் கால் ஆனது, ரிஷப் பந்த் சிரித்துக் கொண்டிருந்தார். நிதின் மேனன் கடினமான சூழ்நிலையில் இந்தத் தொடரில் சிறப்பாக நடுவர் பொறுப்பு ஆற்றியதாக வர்ணனையாளர்கள் கூறினர்.

முதல் அரைசதத்தை 82 பந்துகளில் விளாசிய பந்த் அதன் பிறகு வெங்கலக் கடையில் யானை புகுந்தது போல் புகுந்தார். 33 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எடுத்து சிக்சரில் இந்தியாவில் தன் முதல் சதத்தை விளாசினார்.

பிட்ச் 2வது டெஸ்ட் போல் அவ்வளவு மோசமில்லை, ஒருவேளை இன்று மோசமாகி இங்கிலாந்து 2வது இன்னிங்சில் படாதபாடு பட வாய்ப்புள்ளது. ஆனால் பந்து பிட்ச் ஆனால் தூசி கிளம்பும் பிட்சை எப்படிப் பார்த்தாலும் நல்ல பிட்ச் என்று கூற முடியாது, இதற்கு முட்டுக் கொடுக்கவும் முடியாது. பேட்டுக்கும் பந்துக்கும் ஆதிக்கத்தில் சமவாய்ப்பளிக்கும் பிட்ச்தான் நல்ல பிட்ச்.

புதிய பந்தை ஆண்டர்சன் கையில் எடுத்ததும் மிட் ஆஃப், கவரில் பவுண்டரிகளை விளாசிய ரிஷப் பந்த், வீசுவது உலகின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்றால் எனக்கு என்ன என்று ரிவர்ஸ் ஸ்கூப் செய்தாரே பார்க்கலாம். ஆண்டர்சனே கொஞ்சம் திகைத்துப் போனார், ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. ஜோ ரூட் பந்தை ஸ்லாக் ஸ்வீப்பில் மிகப்பெரிய சிக்சரில் சதம் கண்டார் ரிஷப் பந்த், ஆனால் மீண்டும் ஆண்டர்சனை ஒரு வெளு வெளுக்க புல் ஷாட் ஆடினார், ஆனால் அது மட்டையில் சரியாகச் சிக்காமல் கேட்ச் ஆனது.

118 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 101 ரன்களில் அவர் அவுட் 113 ரன்களை பந்த்தும், சுந்தரும் சேர்த்தனர். 141 ரன்கள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு சேர்க்கப்பட்டன.

ரிஷப் பந்த் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். இந்தப் பிட்சில் 100-150 ரன்கள் முன்னிலை என்பது பெரிய விஷயம். கடினமான பிட்சில் ரிஷப் பந்த் எடுத்த சதம் இந்திய வெற்றிக்கு வழிவகுத்து ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Ahmedabad, India Vs England, Rishabh pant, Washington Sundar