Home /News /sports /

India vs England -இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு நம் ஆவேசமே பதில் - இப்படி ஆடினால் இங்கிலாந்தை வீழ்த்தலாம்!

India vs England -இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு நம் ஆவேசமே பதில் - இப்படி ஆடினால் இங்கிலாந்தை வீழ்த்தலாம்!

பும்ரா கேப்டன்

பும்ரா கேப்டன்

எட்ஜ்பாஸ்டன் பிட்சில் கொஞ்சம் உயிரோட்டமுள்ள புற்களுடன் வெண்மை கலந்த பிரவுன் நிறத்தில் உள்ளது பிட்ச், ஸ்பின் எடுக்குமா என்பது இப்போதைக்குத் தெரியாது. மெக்கல்லம், பென்ஸ்டோக்ஸ் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் பூராவும் அலறுகின்றன, ஆனால் இந்திய பவுலிங் ஒரு உலகத் தரம் வாய்ந்த பவுலிங் என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும் படிக்கவும் ...
எட்ஜ்பாஸ்டன் பிட்சில் கொஞ்சம் உயிரோட்டமுள்ள புற்களுடன் வெண்மை கலந்த பிரவுன் நிறத்தில் உள்ளது பிட்ச், ஸ்பின் எடுக்குமா என்பது இப்போதைக்குத் தெரியாது. மெக்கல்லம், பென்ஸ்டோக்ஸ் என்று இங்கிலாந்து பத்திரிகைகள் பூராவும் அலறுகின்றன, ஆனால் இந்திய பவுலிங் ஒரு உலகத் தரம் வாய்ந்த பவுலிங் என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

லார்ட்ஸில் 60 ஓவர் தாங்க முடியாமல் தோற்றதை மறந்திருக்க மாட்டார்கள், ஜேம்ஸ் ஆண்டர்சனை வெறுப்பேற்றியதை மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஜானி பேர்ஸ்டோ கடந்த இந்திய தொடரில் 184 ரன்களை 48 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார், ஆனால் இப்போது நியூசிலாந்துக்கு எதிராக அவரோ 394 ரன்கலை 120 என்ற அசுர ஸ்ட்ரைக் ரேட்டில் வைத்துள்ளார்.

மெக்கல்லமின் ஸ்டோக்சின் உத்தி பேட்டிங்கில் இந்திய தரமான பந்து வீச்சை லைன் மற்றும் லெந்த்திற்கு செட்டில் ஆகவிடாமல் சாத்துவது என்பதாகத்தான் இருக்கும். அதற்காக தடுப்பு வியூகம் அமைத்து விடக் கூடாது, அட்டாக்கிங் வியூகம் தான் அமைக்க வேண்டும். ஏனெனில் அடித்து ஆடும் வீரரின் விக்கெட்டைக் காலி செய்ய வேண்டும், நியூசிலாந்து அபாரமாக வீசியே 55/6 என்று இங்கிலாந்தை மடக்கியது, ஆனால் அதன் பிறகு தேவையான தடுப்பு வியூகம் அமைக்காமல் தேர்ட் மேன் இல்லாமல் அந்தப் பக்கம் மட்டுமே பேர்ஸ்டோவை 30-40 ரன்களை பவுண்டரிகளாக எடுக்க அனுமதித்தது.

சேவாக் ஒருகாலத்தில் அடித்து ஆடும் போது டீப் தேர்ட் மேன், டீப் ஸ்கொயர் தேர்ட் மேன் என்று இரண்டையும் வைத்திருப்பார்கள். அது போல்தான் பேர்ஸ்டோவை முடக்க வேண்டும். சிறந்த வழி அவரை வீழ்த்துவதுதான். அவரது ஈகோ இப்போது புடைத்து பெருத்திருக்கும் எனவே ஒன்றிரண்டு ஷார்ட் பாலில் கை, மார்பில் அடி கொடுத்தால் போதும் அவர் கோபமடைந்து ஏதாவது குறுக்கு மறுக்காகச் செய்வார். அந்த சாத்தியக் கூறுகளையும் விடுதல் கூடாது.

இன்னொரு பெரிய அச்சுறுத்தல் ஜோ ரூட், அவரை செட்டில் ஆகவே விடக்கூடாது அதாவது வெறுமனே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக்கொண்டேயிருந்தால் அவர் ஆடாமல் பார்த்துக் கொண்டிருப்பதோடு செட்டில் ஆகிவிடுவார், ஆகவே அவுட் ஸ்விங்கர், இன்ஸ்விங்கர், பவுன்சர், யார்க்கர் என்று அவரை கிரீசில் நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும், பென்ஸ்டோக்சுக்கும் இதே தான், இவருக்கு மாறாக அடிக்க தூண்ட வேண்டும், அங்கங்கே இடைவெளிகளைக் கொடுத்து அங்கு ஆடுமாறு அவரை சபலமடையச் செய்து டைட்டாக வீசினால் போதும் அவர் தானாகவே அவுட் ஆகி விடுவார்.

இந்திய பேட்டர்களுக்குத்தான் பிரச்சனை. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆடினால் அவரும் பிராடும் வீசும்போது தொடக்க ஆட்டக்காரர்கள் அவர்கள் இருவரையும் செட்டில் ஆகவிடக் கூடாது. ஷுப்மன் கில், அல்லது புஜாரா இருவரில் ஒருவரை ஆக்ரோஷமாக ஆடச்செய்ய வேண்டும், முதலில் புஜாரா போன்றவர்கள் அரிதாகக் கிடைக்கும் தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்ப வேண்டும். அதை விடுத்து நான் தான் சுவர் என்று நினைத்துக் கொண்டு ஆடினால் எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தி விடலாம். புஜாரா அட்டாக் செய்தால் இங்கிலாந்துக்கு புதிராக இருக்கும், எனவே அவரை அட்டாக்கிங் ஆக ஆட உத்தரவிட வேண்டும்!

கிரிக்கெட் பற்றி இயன் சாப்பல் ஒன்று அடிக்கடி கூறுவார், இதை திராவிட் அந்தக் காலத்தில் மகா அறுவையாக ஆடும்போது வர்ணனையில் கூறியதுதான், “அதாவது பேட்ஸ்மேன் ரன்கள் எடுக்க வேண்டும், பவுலர் விக்கெட் எடுக்க வேண்டும்” இதுதான் கிரிக்கெட் என்பார். அவர் கூறுவது என்னவெனில் களத்தில் இறங்கி ரன்கள் எடுக்கவோ, விக்கெட் எடுக்கவோ நீ என்ன வேண்டுமானாலும் செய் என்பதுதான். இந்தியா தோற்கும் போது புஜாரா 100 பந்தில் 15 ரன்கள் எடுப்பதை கடின உழைப்பு என்றெல்லாம் நாம் புகழுவதை நிறுத்த வேண்டும். இது புகழ் அல்ல, நமக்கு நாமே கூறிக்கொள்ளும் புளுகுதான்.

தளர்வான பந்துகளே வரவில்லையா, பேட்டர்கள், ரன்கள் எடுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும், இதுதான் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சோதிக்கப்படுவார், அதிலிருந்து மீள ஒன்றிரண்டு பந்துகளுக்கு நடந்து வந்து ஷாட்களை ஆடினால் போது, பயந்து விடுவார்கள், கோலியைக் கண்டால்தான் இங்கிலாந்துக்கு பயம். அடுத்து ரிஷப் பண்ட்டைக் கண்டு பயப்படுவார்கள்.

கோலி திராவிட் பாணியில் பயிற்சி ஆட்டத்தில் ஆடியது போல் ஆடினல் பயன் தராது, இங்கிலாந்தை மிரட்ட முடியாது, இன்னிங்ஸை அழகாகக் கட்டமைக்க வேண்டும் சச்சின் பாணியில், ஒரு 5 ஓவர்கள் இறங்கியவுடன் அடித்து ஆடி 20 ரன்களைத் தேற்றிக் கொள்ள வேண்டு, அடுத்த 30 ரன்களை ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து எடுத்து அரைசதம் எடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு எப்படியும் ஒரு பலவீனமான பவுலர் சிக்குவார் அவரை சாத்தி எடுக்க வேண்டும், ஒருமுறை மொயின் அலியிடம் 6 விக்கெட், 4 விக்கெட் என்றெல்லாம் கொடுத்தது போல் ஜாக் லீச்சிடம் விக்கெட் கொடுத்தால் அந்த அணி உருப்படாது.

அதே போல் 50 ஒவர்களில் பந்து பழசாகும், இங்கிலாந்தில் ரிவர்ஸ் ஸ்விங் எடுக்காது எனவே அந்த 50 ஓவர் முதல் அடுத்த புதிய பந்தை எடுக்கும் 80வது ஓவருக்குள் இருக்கும் 30 ஓவர்களில் ஓவருக்கு 4 ரன்கள் வீதம் 120 ரன்களை எடுத்தாலே போதும் இங்கிலாந்து மிரண்டு விடும். இப்படி திட்டமிட்டு ஆட வேண்டும் டெய்ல் எண்டர்கள் தலா 15 ரன்கள் எடுக்காமல் அவுட் ஆவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக கேட்ச்களை ட்ராப் செய்தால் செய்யும் திட்டமெல்லாம் வீணாகிப் போகும், எனவே கேட்ச்களை ட்ராப் செய்தல் பாவம் என்ற கொள்கையை வளர்த்தெடுத்து கேட்சை விடமாட்டோம் என்று உறுதி பூண வேண்டும். இதைக் கடைப்பிடித்தால் இங்கிலாந்தை வீழ்த்தி 3-1 என்று புதிய சாதனை படைக்கலாம், ஏனெனில் இந்தியா இருமுறை 2 போட்டிகளில் அங்கு வென்றுள்ளது, ஒருமுறை கூட 3 டெஸ்ட்களில் அங்கு வென்றதில்லை.

ஆக்ரோஷ அணுகுமுறையை விடுத்து பூனைகள் போல் பம்மினால் செம தோல்வியைத்தான் எதிர்கொள்ள நேரிடும்!!
Published by:Muthukumar
First published:

Tags: Cheteshwar Pujara, India Vs England, Jasprit bumrah, Virat Kohli

அடுத்த செய்தி