Home /News /sports /

IND vs ENG ஏகப்பட்ட பீட்டன்களுடன் பேர்ஸ்டோ சதம்; ஷமி, பும்ரா அட்டகாசம்;புஜாரா அரைசதம்- இந்தியா 257 ரன்கள் முன்னிலை

IND vs ENG ஏகப்பட்ட பீட்டன்களுடன் பேர்ஸ்டோ சதம்; ஷமி, பும்ரா அட்டகாசம்;புஜாரா அரைசதம்- இந்தியா 257 ரன்கள் முன்னிலை

மரபான டெஸ்ட் பேட்டிங்கில் நிரூபிக்கும் புஜாரா

மரபான டெஸ்ட் பேட்டிங்கில் நிரூபிக்கும் புஜாரா

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று ஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் எடுத்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சின் கை மேலோங்கியது, இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்குச் சுருண்டது, இதன் மூலம் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. மொத்தம் 257 ரன்கள் முன்னிலை.

மேலும் படிக்கவும் ...
  எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று ஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம் எடுத்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சின் கை மேலோங்கியது, இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்குச் சுருண்டது, இதன் மூலம் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. மொத்தம் 257 ரன்கள் முன்னிலை.

  3ம் நாள் ஆட்ட முடிவில் ரிஷப் பண்ட் 30 ரன்களுடனும் புஜாரா பிரமாதமான அரைசதத்துடன் 50 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், இதனையடுத்து டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.

  நேற்று 84/5 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி காலையில் வெயில் அடித்ததாலும் 30 ஓவருக்குப் பிறகு பந்து பிளாஸ்டிக் பந்து போல் ஆனதாலும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியது. ஜானி பேர்ஸ்டோ சதம் எடுத்திருக்கலாம் 3வது சதத்தை தொடர்ந்து எடுத்திருக்கலாம், கோலி அவரை சீண்டியிருக்கலாம் ஆனால் அவர் ஆடிய 140 பந்துகளில் குறைந்தது 50 பந்துகளாவது பீட்டன் ஆகியிருப்பார், பந்துகள் மட்டை விளிம்பை நூலிழையில் தவற விட்டிருக்கலாம், ஒரு கட்டத்தில் என்ன ஒரு மனுஷனுக்கு இவ்வளவு மச்சமா? என்று கேட்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தது, இந்திய பவுலர்கள் பக்கம் துரதிர்ஷ்டம் தலைத் தூக்கியது.

  இந்தப் பிட்ச் மரபான ஆட்டமுறைக்கு ஏதுவான பிட்ச், சச்சின், திராவிட், லஷ்மண், கூட்டணி இருந்தால் இந்திய அணி முதல் இன்னிங்சே 500 ரன்களுக்கும் மேல் குவித்து இங்கிலாந்து வெற்றி வாய்ப்பையே ஒன்றுமில்லாமல் செய்திருக்கும். இப்போது ஆடப்படும் முறை ஆக்ரோஷம் என்ற பெயரில் ஹை ரிஸ்க் ஆட்டம், இதனால் இங்கிலாந்து எதிரணிக்கும் ஒரு வெற்றி வாய்ப்பை வழங்கி விடுகிறது. மெக்கல்லம் முறை நிச்சயம் ஒருநாள் பேக் ஃபயர் ஆகும், நாம் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது போல் அன்று இலங்கை 22 ஓவர்களில் 110 ரன்களுக்கு மடிந்தது போல், ஒன்றிரண்டு டெஸ்ட்களில் இங்கிலாந்து மடிந்தால் பிறகு மீட்டிங் போட்டு இதெல்லாம் ஒன்றும் வேண்டாம், மரபான டெஸ்ட் போட்டி முறையில் ஆடுங்கள் என்பார்கள். ஏனெனில் சாதாரணமாக ஒரு தடுப்பாட்ட இன்னிங்சை எப்படி ஆடுவது என்பது இங்கிலாந்துக்கு மறந்து போய்விடும், இந்திய அணியில் ரிஷப் பண்ட் மட்டும்தான் அப்படி ஆடுகிறார். ஆனால் அங்கு எல்லோருமே அப்படி ஆட முயற்சி செய்வது மெக்கல்லம் முறை இங்கிலாந்தை ‘மொக்க’ல்லம் ஆக்கி விடப்போகிறது!!

  பும்ரா ஷமி அபாரம், சிராஜ் 4 விக்கெட் பேர்ஸ்டோ சதம்:

  நேற்று காலை பும்ராவும் ஷமியும் அட்டகாசமாக வீசினர், ஒருமணி நேரத்துக்கு பேட்ஸ்டோ, ஸ்டோக்ஸுக்கு ஒருவித க்ளூவும் கிடைக்கவில்லை. இந்த பீரியடில்தான் பேர்ஸ்டோவின் பேட்டிங் பற்றி எல்லோருக்குமே சந்தேகம் பிறந்திருக்கும் ஒங்க வீட்டு பீட்டன் எங்க வீட்டு பீட்டன் இல்லை அவ்வளவு பீட்டன். 65 பந்துகளில் 16 என்று இருந்த பேர்ஸ்டோ பந்து பிளாஸ்டிக் ஆக பிட்ச் பெட்ஷீட் போல் ஆக பவுண்டரிகளாக விளாசி 81 பந்துகளில் அரைசதம் கண்டார்.  ஷமி உண்மையில் அதிர்ஷ்டம் இல்லாத பவுலர் ஆனார். பேர்ஸ்டோவுக்கு ஷமியை ஆடத்தெரியவில்லை, அதாவது தன்னம்பிக்கையுடன் ஒரு டிபன்ஸ் அவரை ஆடத்தெரியவில்லை, அடிக்கும் முறைக்கு வந்து விட்டால் ரிஸ்க். நேற்று அவருக்கு மாட்டியது அவ்வளவே. மற்றபடி ஆச்சா போச்சா, பெரிய இன்னிங்ஸ் என்பதெல்லாம் இல்லை.

  பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கு எப்போது வேண்டுமானாலும் தான் அவுட் ஆவேன் என்று வாய்ப்புகளை வழங்கினார், ஷமி பந்தை இறங்கி வந்து அடிக்கிறேன் பேர்வழி என்று செங்குத்தாகக் கொடியேற்றி மூக்குக்கு மேல் ராஜாவாகி தூக்கினார், ஆனால் ஷர்துல் தாக்கூர் மிக மிக எளிதான கேட்சை தரைக்குத் தாரை வார்த்தார். பிறகு ஷர்துல் தாக்குர் பந்தில் பும்ரா மிட் ஆஃபில் கையில் வந்த கேட்சை விட்டார், ஆனால் அடுத்த பந்தே ஸ்டோக்ஸ் இந்தா இதையாவது பிடி என்று கேட்ச் கொடுக்க முந்தைய கேட்சை விட சற்றே கடினமான கேட்சை பிடித்தார் பும்ரா. ஸ்டோக்ஸ் 25 ரன்களில் அவுட்.

  பேர்ஸ்டோ பந்து ஒன்றுமில்லாமல் ஆக ஷர்துல் தாக்கூரையும் சிராஜையும் விளாசினார், அதுவும் புல் ஷாட் சிக்ஸ், ஹை பிளிக், மிட் ஆஃப் மேல் தூக்கி அடித்தல் என்று தன் ஒரிஜினல் ஆட்டத்துக்குத் திரும்பி தாக்கூரை பாயிண்ட் பவுண்டரிக்கு அனுப்பி 119 பந்துகளில் சதம் விளாசினார்.  இடையில் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஒரு எல்.பி. முறையீடு, பும்ரா பந்தில் கீழே விழும் அளவுக்கு யார்க்கரில் பீட்டன், எல்.பி. முறையீட்டில் தப்பினார் பேர்ஸ்டோ. கடைசியில் லக் கைக் கொடுக்கவில்லை, ஷமி வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி கோலியிடம் கேட் கொடுத்து 140 பந்துகளில் 106 என்று ஆட்டமிழந்தார்.

  ஸ்டூவர்ட் பிராடுக்கு சிராஜ் ஒரே ஏத்து ஏத்தினார், சாம் பில்லிங்ஸ் 36 ரன்களில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். இதில் ஒரு ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டும் உண்டு. மேத்யூ பாட்ஸ் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தாலும் 11.3 ஓவர்களி 66 ரன்கள் என்று கொஞ்சம் அடி வாங்கினார். ஷர்துல் தாக்கூர் 7 ஓவர் 48 என்று சாத்து வாங்கினார், ஆனால் ஏதோ அதிர்ஷ்டத்தில் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.

  புஜாராவின் மரபான டெஸ்ட் அரைசதம்:

  இந்தியா மீண்டும் பேட் செய்ய வந்த போது இங்கிலாந்து ஷார்ட் பிட்ச் பித்தம் இல்லாமல் ஒழுங்காக வீசினர், ஷுப்மன் கில் 4 ரன்களில் குட்லெந்தில் எழுந்த ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஹனுமா விஹாரி தன்னால் முடிந்த அளவுக்கு நின்று பார்த்தார், ஆனால் 44 பந்துகளே தாக்குப்பிடித்து 11 ரன்களில் பிராடிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

  India's Cheteshwar Pujara bats during the third day of the fifth cricket test match between England and India at Edgbaston in Birmingham, England, Sunday, July 3, 2022. (AP Photo/Rui Vieira)


  புஜாரா ஸ்டான்ஸில் மாற்றம் செய்துள்ளார், அதாவது அவர் இடது கால் லேசாக மிட் ஆன் நோக்கியும் இடது தோளும் அந்தப்புறமே சாய்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடியதை மாற்றி தன் இடது தோள் பவுலரை நோக்கியும் இடது கால் லேசாக கவர் திசை நோக்கியும் இருக்குமாறு ஆடியதால் அவுட்ஸ்விங்கர்களை எளிதில் ஆடாமல் விட முடிந்தது. இன்ஸ்விங்கர்களையும் அபாயகரமாக ஆடாமல் விட்டு ஒருமுறை ஸ்டோக்ஸ் பந்தில் கடும் எல்.பி.முறையீட்டுக்கு ஆளானார், அது பவுல்டுதான், ஆனால் அம்பயர்ஸ் கால் ஆனது. தப்பினார்.

  விராட் கோலி தன் வழக்கமான முன்னால் வந்து ட்ரைவ் ஆடும் பாணிக்குத் திரும்பியதா 3 பவுண்டரிகளை அட்டகாசமாக அடித்து 20 ரன்கள் எடுத்தார், அப்போது ஸ்டோக்ஸ் பந்து ஒன்று குட்லெந்தில் எழும்பி அவரது மட்டையின் மேல் விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. ஆட முடியாத பந்து. மிக மிக அபாரமான பந்து ஒன்றும் செய்ய முடியாது.

  ரிஷப் பண்ட் இறங்கி உறுதியான தடுப்பாட்டம் ஆடினார், ஒருமுறை பொறுத்தது போதும் என்று பிராட் பந்தை இறங்கி வந்து விளாசினார். புஜாரா 139 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 நாட் அவுட், ரிஷப் பண்ட் 46 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 நாட் அவுட்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Cheteshwar Pujara, India Vs England, Jasprit bumrah, Test match

  அடுத்த செய்தி