Home /News /sports /

ஹனுமா விஹாரிக்குப் பதில் அஸ்வினை வைத்திருக்க வேண்டும்

ஹனுமா விஹாரிக்குப் பதில் அஸ்வினை வைத்திருக்க வேண்டும்

அஸ்வின்

அஸ்வின்

ஹனுமா விஹாரி ஒரு பயனுள்ள வீரர்தான் இல்லை என்று மறுக்கவில்லை, சிட்னி டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய ட்ராவை நமக்கு பரிசாக அளித்ததில் அவரது கடமை உணர்வு, நாட்டுப்பற்று, மன உறுதி எல்லாம் வெளிப்பட்டது, அதனால்தான் அந்த ஆஸ்திரேலியா தொடரையே இந்திய அணியினால் வெல்ல முடிந்தது, ஆனால் அவரை இந்திய அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்தவில்லை.

மேலும் படிக்கவும் ...
  ஹனுமா விஹாரி ஒரு பயனுள்ள வீரர்தான் இல்லை என்று மறுக்கவில்லை, சிட்னி டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய ட்ராவை நமக்கு பரிசாக அளித்ததில் அவரது கடமை உணர்வு, நாட்டுப்பற்று, மன உறுதி எல்லாம் வெளிப்பட்டது, அதனால்தான் அந்த ஆஸ்திரேலியா தொடரையே இந்திய அணியினால் வெல்ல முடிந்தது, ஆனால் அவரை இந்திய அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்தவில்லை.

  அவருக்கென்று ஒரு டவுன் கொடுக்காமல் இடைவெளியை நிரப்பும் டவுன் ஆகவும், கடினமான சூழ்நிலையில் 3ம் நிலையிலும் அதுவும் தொடக்க வீரர்கள் பலவீனமாக இருக்கும் போது அவரை 3ம் நிலையில் இறக்குவதும் அவருக்கு செய்யும் நன்மையாகாது. மாறாக அவருக்கு ஒரு நிரந்தர டவுனைக் கொடுத்து தொடர்ச்சியான வாய்ப்புகளையும் கொடுத்து அந்த உயர்மட்டத்துக்குத் தேறுவாரா என்று பார்ப்பதுதான் விவேகம்.

  ஞானக்கூத்தன் என்பாரின் கவிதையில் வரும் சப்பட்டை மனிதன் போல் ஹனுமா விஹாரியை எங்கு வேண்டுமானாலும் செருகிவிடும் போக்கு சரியல்ல. அவருக்கும் டெக்னிக் என்பது பேட்டிங்கில் சரிவர அமையவில்லை. நேற்று எட்ஜ்பாஸ்டனில் அவர் பாட்ஸின் பந்தை முன்னால் வந்து ஃபார்வர்ட் டிபன்ஸ் ஆட வேண்டிய பந்துக்கு கிரீசிலேயே நின்று ஆடியதால் பந்து தாழ்வானபோது எல்.பி.ஆகி வெளியேறினார். 20 ரன்கள்தான்!

  இப்போது நம் கேள்வி என்னவெனில், இவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டரா என்று கேட்டால் கொஞ்சம் ஆஃப் ஸ்பின்னும் போடுவார் என்று சொல்கிறார்கள், இவரது டெஸ்ட் சராசரியும் மோசமல்ல 35 வைத்திருக்கிறார். 15 டெஸ்ட்களில் ஒரு சதம் 5 அரைசதங்களையும் எடுத்துள்ளார். அது பிரச்சனையில்லை. ஆனால் விஹாரி போன்றவர்களிடம் சீரான தன்மை இல்லை, நம்பத்தகுந்த உத்தியும் இல்லை.

  ஆனால் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களை எடுத்துள்ளார். இதோடு ஹனுமா விஹாரி எடுக்கும் 20 ரன்களை அஸ்வின் நிச்சயம் எடுப்பார், இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் முன்னால் இறக்கினால் இவரது தடுப்பாட்ட உத்தியும் அவ்வளவு மோசமில்லை என்பதையும் பார்த்திருக்கிறோம், எனவே அரைசதம் அளவுக்கு இவரால் இங்கிலாந்து கண்டிஷனில் போக முடியும் என்று நம்பலாம்.

  அதோடு பவுலிங்கில் உலகத்தரம் வாய்ந்த அஸ்வின் இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இருந்தால் அணியின் பலம் எப்படியிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம், இங்கிலாந்தின் ஆக்ரோஷ அணுகுமுறைக்கும் அஸ்வின் பந்து வீச்சை அத்தனை எளிதாக அடித்து விட முடியாது, அல்லது அஸ்வினை அட்டாக் செய்தால் அவர் நிச்சயம் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார். இங்கிலாந்து பேட்டிங் வரிசையையும் ஊடுருவிக் கலைக்கும் வாய்ப்பு அதிகம்.

  எனவே டெஸ்ட் போட்டிகளில் இனி அஸ்வினா ஜடேஜாவா என்ற விவாதம் தேவையில்லை, ஏனெனில் ஜடேஜா நிரூபித்து விட்டார், அவரை இனி உட்கார வைக்க முடியாது, மாறாக சிறந்த 3ம் நிலை பேட்டர் கிடைக்கும் வரையில் அந்த இடத்தில் வெளிநாடாக இருந்தாலும் அஸ்வினை பயன்படுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்.

  எட்ஜ்பாஸ்டனில் நாம் 375 ரன்களை எடுத்து விடும் பட்சத்தில் இங்கிலாந்தின் ஆக்ரோஷத்துக்கு செக் வைக்கும் நபர் அஸ்வினாக இருப்பார், எனவே அஸ்வினை உட்கார வைக்கும் போக்கை தவிர்த்தால் நல்லது, இந்த எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் அஸ்வின் ஆடியிருக்க வேண்டும். இதைத்தான் ஷேன் வாட்சன் சொல்கிறார், மற்றும் பலரும் சொல்கின்றனர்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India Vs England, R Ashwin

  அடுத்த செய்தி