5-வது டெஸ்ட் நிலவரம் என்ன?- கைவிடப்பட்டதா? இழக்கப்பட்டதா? ஒத்தி வைக்கப்பட்டதா?

கோலி-ஜோ ரூட்

கொரோனா பாதிப்பு காரணமாக மான்செஸ்டரில் நடைபெறவிருந்த தொடரை முடிவு செய்யும் 5வது இறுதி டெஸ்ட் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியானாலும் பிசிசிஐ-இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.

  • Share this:
    என்ன முடிவு? தொடர் 2-1 என்று இந்தியாவுக்குச் சாதகமா அல்லது அப்படியே தொங்கலில் விடப்பட்டு 5வது டெஸ்ட் பிறகு எப்போதாவது நடைபெறும் போது தொடரின் முடிவு தெரியவருமா? 2022-ல் 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிவுகள் தெரியவருமா? அல்லது இந்த டெஸ்ட் போட்டியின் வர்த்தகம் ஒப்பந்தம் உள்ளிட்ட இழப்பீடுகளை சரிகட்ட ஒரேயொரு டெஸ்ட் நடத்தப்பட்டு சமரசம் எட்டப்படுமா? என்று எதுவும் இதுவரை தெரியவில்லை. காப்பீடு தொகை என்ன போன்ற விவரங்கள் சரிவர வெளியாகவில்லை.

    கோவிட் காரணமாக டெஸ்ட் நடைபெறவில்லை என்பதால் ஐசிசி இது கைவிடப்பட்ட டெஸ்ட் என்ற கணக்கில் சேர்த்தால் இப்போதைக்கு இங்கிலாந்து தொடரை இந்தியா 2-1 என்று வென்றதாகவே அர்த்தம். இப்படி முடிவெடுத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு காப்பீட்டு தொகைக் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கோவிட்டினால் மேட்ச் கைவிடப்பட்டது என்பது காப்பீடு விதிமுறைகளின் கீழ் வராது.

    மாறாக இந்தியா மேட்சில் விளையாட விரும்பவில்லை, மேட்சை விட்டுக்க் கொடுத்தது என்ற முடிவுக்கு ஐசிசி வருமேயானால் தொடர் 2-2 என்று சமன் ஆகும் ஏனெனில் இந்தியா ஆட மறுத்ததால் அது இங்கிலாந்தின் வெற்றிக்கணக்கில் போய்த்தான் முடியும். பிசிசிஐ-யின் நிலைப்பாடு என்னவெனில் 2022-ல் வெள்ளைப்பந்து தொடருக்காக இந்திய அணி இங்கிலாந்து செல்லும் போது ஒரேயொரு டெஸ்ட் போட்டியை நடத்தலாம் என்று கூறுகிறது. ஆனால் அதற்கு டூர் புரொகிராம் ஒத்து வர வேண்டியது அவசியம். எனவே தொடர் முடிந்து விட்டதா, அல்லது என்ன நிலவரம் என்பது முடிவாக இன்னும் தெரியவில்லை.

    பிசிசிஐ இன்னொரு சமயம் இந்தப் போட்டியை நடத்திக் கொள்ளலாம் என்று கூறுவது நல்ல செய்தி என்று கூறும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அந்த மேட்ச் இந்தத் தொடரின் ஒரு பகுதியா அல்லது புதிதாக ஒரு டெஸ்ட் போட்டியா என்பது தெரியவில்லை என்று கூறுகிறது.

    எதிர்கால தேதி ஒன்று இந்த டெஸ்ட்டுக்கு நிர்ணயிக்கப்பட முடியவில்லை எனில் இந்தப் போட்டியை இந்தியா இழந்ததாகவே அர்த்தம் அதனால் சீரிஸ் 2-2 என்று ட்ரா என்றே கருதப்பட வேண்டும் என்று இங்கிலாந்து கருதுகிறது. 2-2 என்று தொடர் சமன் என்று முடிவெடுத்தால் இழந்த வருவாயை இங்கிலாந்து வாரியம் காப்பீடு மூலம் பெற முடியும். அதாவது 41.6 மில்லியன் டாலர்கள் தொகையை ஈசிபி பெறும்.

    கோவிட் மட்டுமே காரணமல்ல என்பது ஈசிபியின் நிலைப்பாடு, ஏனெனில் இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.- பிசிஆர் சோதனை அத்தனை வீரர்களுக்கும் நெகட்டிவ் என்று வந்து விட்டது. ஆகவே கொள்கை ரீதியாக 20 வீரர்களிலிருந்து ஒரு அணியை மான்செஸ்டர் டெஸ்ட்டுக்கு அளித்திருக்க முடியும் என்பதே. ஆனால் இந்த டெஸ்ட் போட்டியின் நிலை என்ன என்பது இன்னமும் கூட புரியாத புதிராகவே உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published: