இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 இன்று இரவு இந்திய நேரம் 7 மணிக்கு பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.இந்திய அணிக்கு கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் திரும்பியுள்ளனர், அதனால் கோடாரி யார் மீது விழும் என்று தெரியவில்லை. இஷான் கிஷனைத் தூக்கி விட்டு தீபக் ஹூடாவை தொடக்கத்தில் இறக்கி கோலிக்கு இடம் கொடுக்கலாம், ஆனால் ரிஷப் பண்ட்டை எங்கு சொருக முடியும்? நிச்சயம் ஒன்று சூரியகுமார் யாதவ் இல்லையெனில் தினேஷ் கார்த்திக் தலையில் வந்து விடியும்.
தினேஷ் கார்த்திக் முதல் போட்டியில் சரியான டவுனில் இறக்கப்படாமல் இவருக்கு முன் அக்சர் படேலை இறக்கி அவரை வதை கொட்டிக் கொண்டனர். கடைசியில் இறங்கி 2 அதிரடி ஷாட்களின் மூலம் ஸ்கோரை 200க்கு அருகில் கொண்டு சென்றார். ஆனால் கீப்பிங்கில் 3 கேட்ச்களை டிராப் செய்தார். கேட்ச்களை ட்ராப் செய்ததற்காக அணியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் இந்திய லெவனில் யாருமே இருக்க முடியாது.
ஆனால் இன்று ரிஷப் பண்ட்டிற்காக தினேஷ் கார்த்திக் வழிவிட்டுத்தான் ஆக வேண்டும் போல் உள்ளது. தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவரை உட்கார வைத்தால் கூட களேபரமாகி விடும் ஏனெனில் இருவரும் சூழ்நிலையெல்லாம் பார்க்காமல் முதல் பந்திலிருந்தே முதல் டி20 போட்டியில் விளாசி இங்கிலாந்து பவுலிங்கை சிதறடித்தார்கள், இவர்கள் கூட்டணிதான் இந்திய ரன் ரேட்டை பெரிய மைதானத்திலும் ஓவருக்கு 10 ரன்கள் வரை வைத்திருந்தது. கடைசியில் அக்சர் படேலை இறக்கித்தான் ரன் ரேட் 9 ரன்களாகக் குறைந்தது. பிறகு தினேஷ் கார்த்திக் 2 பெரிய ஷாட்களால் 200 பக்கம் வந்தது.
இன்று அக்சர் படேல் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டி20 தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் வேளையில் பார்மில் இல்லாத விராட் கோலியை வெறும் செல்வாக்கிற்காக அணியில் எடுக்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அணி நிர்வாகம்.
எனவே இஷான் கிஷனை உட்கார வைத்து விட்டு, ரோஹித் சர்மா, தீபக் ஹூடாவை ஓப்பனிங்கில் இறக்கி, விராட் கோலியை ஒன் டவுனில் இறக்க வாய்ப்பிருக்கிறது. பவுலிங்கில் அதே போல் அர்ஷ்தீப் சிங் பும்ராவுக்கு இடம் விட்டுத்தான் ஆக வேண்டும்.
இதையும் படிங்க: அஸ்வினை நீக்க முடியும்போது கோலியையும் நீக்கலாம்- கபில் தேவ் காரசாரம்
ஐபிஎல் 2022 தொடரில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 115, ஆவரேஜ் 22க்கும் கொஞ்சம் அதிகம், அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும் என்று கபில் தேவ் கேட்பது சரிதான், ஆனால் விராட் கோலி போன்ற ஒரு வீரர் மீண்டும் பார்முக்கு வந்தால் டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று அணி நிர்வாகம் நினைத்திருக்கலாம். ஆனால் டி20யில் திணறும் ரிஷப் பண்ட்டை மீண்டும் இறக்குவது ஏன் என்ற கேள்விக்கு அணி நிர்வாகத்திடம் பதில் இல்லை.
எனவே இந்திய லெவன் இப்படியிருக்கலாம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), தீபக் ஹூடா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், செஹல், பும்ரா.
இங்கிலாந்து நிச்சயம் பதிலடி கொடுக்க பயங்கரமாக அதிரடியில் இறங்கும். பட்லர், லிவிங்ஸ்டன், மொயின் அலி என்று ஒரு படையே காத்திருக்கிறது.
இங்கிலாந்து உத்தேச லெவன்: ஜேசன் ராய், பட்லர், டேவிட் மலான், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லே, ரிச்சர்ட் கிளீசன், மேட் பார்க்கின்சன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dinesh Karthik, India Vs England, Jasprit bumrah, Ravindra jadeja, Rishabh pant, T20, Virat Kohli