2வது ஒருநாள் போட்டியில் 337 ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி... கே.எல்.ராகுலின் சதம் வீண்!

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இங்கிலாந்து அணி.

  • Share this:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் (3-1) மற்றும் டி20 தொடரை (3-2) கைப்பற்றிய இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2வது ஒரு நாள் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (25), ஷிகர் தவான் (4) சோபிக்கத் தவறினாலும் விராட் கோலி (66) கேப்டனுக்குரிய பங்களிப்பை அளித்தார்.

கே.எல்.ராகுல் 114 பந்துகளில் 108 ரன்களும் (இது இவருடைய 5வது சதமாகும்), ரிஷப் பந்த் 77 ரன்களும், ஹர்திக் பாண்டியா 35 ரன்களும் குவித்ததால் இந்திய அணி 300 ரன்களை கடந்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்தது.

மிகவும் சவாலான இலக்குடன் இங்கிலாந்து அணி நெருக்கடியான நிலையில் களமிறங்கியது. இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் நங்கூரம் அமைத்துக் கொடுத்தனர். ஜேசன் ராய் 55 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி இந்திய அணியின் வெற்றியை தட்டிப்பறிக்கும் விதத்தில் ஆடியது. ஜானி பேர்ஸ்டோ அற்புதமான சதம் அடித்தார். 112 பந்துகளுக்கு 124 ரன்களை அவர் விளாசினார். மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய பென் ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்கள் அடித்து மிரட்டினார். புவனேஸ்வர் குமாரின் பந்தில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 165 ரன்கள் திரட்டினர்.

இந்த நிலையில் 43.3 ஓவர்களிலேயே 337 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: