சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுருண்டு விழுந்த ஜோ ரூட்: உதவிக்கு ஓடி வந்த கோலி.. நெட்டிசன்களின் இதயங்களை வென்ற கோலியின் செயல்!

ஜோ ரூட்டுக்கு உதவும் விராட் கோலி

சாம்பியன் மற்றும் உண்மையான மனிதர் எனவும் ஜெண்டில் மேன் எனவும், உங்களை கண்டு பெருமைப்படுவதாகவும் கோலியை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  • Share this:
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மைதானத்தில் கீழே விழுந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த போது இந்திய கேப்டன் விராட் கோலி அவருக்கு உதவிய நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. விளையாட்டுக்கு உரிய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்திய கோலியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் போட்டியின் முதல் நாளான இன்று ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் செயல் அரங்கேறியுள்ளது.

இன்றைய போட்டி தான் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு 100 வது டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது. தனது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்தார்.

இந்நிலையில் போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஆட்டத்தின் 87வது ஓவரில், பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ஜோ ரூட் நிலைதடுமாறினார். அவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்ட நிலையில் தடுமாறி மைதானத்தில் படுத்தார் ஜோ ரூட். அப்போது அருகே இருந்த கேப்டன் விராட் கோலி ஓடோடி வந்து ஜோ ரூட்டுக்கு உதவினார்.ஜோ ரூட்டின் காலை பிடித்து சிறிது நேரம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறிதும் ஈகோ பார்க்காமல் ஜோ ரூட்டின் காலை பிடித்து அவருக்கு கோலி உதவியதை கண்ட ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஜோ ரூட்டுக்கு கோலி உதவும் வீடியோவை ‘கிரிக்கெட்டின் உண்மையான உத்வேகத்தின் சிறந்த வெளிப்பாடு’ என நெகிழ்ச்சியுடன் பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதனை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரீட்வீட் செய்து வருகின்றனர்.சாம்பியன் மற்றும் உண்மையான மனிதர் எனவும் ஜெண்டில் மேன் எனவும், உங்களை கண்டு பெருமைப்படுவதாகவும் கோலியை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 263 ரன்களை (3 விக்கெட்கள் இழப்பு) எடுத்துள்ளது. ஜோ ரூட் 197 பந்துகளில் 128 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
Published by:Arun
First published: