Home /News /sports /

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. பும்ரா, ரோஹித் சர்மாவிடம் சின்னாபின்னமான இங்கிலாந்து

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. பும்ரா, ரோஹித் சர்மாவிடம் சின்னாபின்னமான இங்கிலாந்து

பும்ரா- ரோஹித் சர்மா இங்கிலாந்தை சிதைத்த மகிழ்ச்சியில்

பும்ரா- ரோஹித் சர்மா இங்கிலாந்தை சிதைத்த மகிழ்ச்சியில்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பின்னரே கோச் மெக்கல்லம் முறையை ‘Bazball' என்று வர்ணித்து ஏதோ உலகத்தில் இல்லத அணுகுமுறை போல் இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் பீற்றிக்கொள்ள அதற்கு சரியான அடியாக இன்று ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து பிறகு ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி 114/0 என்று அபார வெற்றி பெற்றது. பகலிரவு போட்டி என்றார்கள் இரவு கவிவதற்கு முன்னரே ஆட்டம் முடிந்து விட்டது.

மேலும் படிக்கவும் ...
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பின்னரே கோச் மெக்கல்லம் முறையை ‘Bazball' என்று வர்ணித்து ஏதோ உலகத்தில் இல்லத அணுகுமுறை போல் இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் பீற்றிக்கொள்ள அதற்கு சரியான அடியாக இன்று ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து பிறகு ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி 114/0 என்று அபார வெற்றி பெற்றது. பகலிரவு போட்டி என்றார்கள் இரவு கவிவதற்கு முன்னரே ஆட்டம் முடிந்து விட்டது.

    முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்துகிறது. ஓவலில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா இடையே 4வது சதக்கூட்டணியாகும் இது. எட்ஜ் பாஸ்டனில் வாங்கிய உதைக்கு இது சரியான பதிலடியே , இதனால் ஒன்று தெரிகிறது, பிட்சை பேட்டிங் பிட்சாக போட்டால்தான் எந்த Bazball ஆக இருக்கட்டும், அல்லது ஆக்ரோஷமாக இருக்கட்டும் செல்லுபடியாகும்.

    டாஸ் வென்ற ரோஹித் சர்மா சரியாக பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கிரீன் டாப் டெஸ்ட் பிட்சில் பும்ரா பந்து வீச்சில் ஆகச்சிறந்த பந்து வீச்சாக 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்ற ஷமி 3 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் என்று இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு ஆடிய இந்திய அணிக்கு ஏதோ ஷார்ட் பிட்ச் பவுலிங் என்றால் பலவீனம் என்று நினைத்து அதுவும் ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங்காக வீசி சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டது இங்கிலாந்து, ரோஹித் சர்மா 58 பந்துகளில் 5 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் நாட் அவுட், ஷிகர் தவான் சிறிது காலமாக தரமான பந்து வீச்சை தரமான பிட்சில் எதிர்கொள்ளா விட்டாலும் தன் பங்குக்கு பொறுமையாக் ஆடி 54 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 18.4 ஓவர்களில் 114 ரன்கள் நோ லாஸ் என்று இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

    கேப்டன் பும்ரா


    உண்மையில் டாஸ் வென்றால் இந்தியா பேட்டிங்தான் எடுக்கும் என்ற தவறான கணிப்பில் கிரீன் டாப் விக்கெட்டைப் போட்டனர், ஆனால் ரோஹித் சர்மா மிகச்சாமர்த்தியமாக பீல்டிங்கைத் தேர்வு செய்தார். Bazball-ஆ அல்லது பும்ரா பாலா என்ற ஆர்வம் மேலிட்டது. 2வது ஓவரில் ஜேசன் ராய் பும்ரா பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார். பந்துகள் எழும்பி பயங்கரமாக ஸ்விங் ஆகின. அடுத்ததாக ஜோ ரூட் கூடுதல் பவுன்சில் பண்ட்டிடம் பூபோல் எட்ஜ் செய்து கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

    பென் ஸ்டோக்ஸுக்கு முகமது ஷமி ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை உள்ளே கொண்டுவர பயங்கர ஸ்விங்கில் இன்சைடு எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் ஆக ஸ்டோக்சும் டக் அவுட். ஜானி பேர்ஸ்டோ எட்ஜ்பாஸ்டன் சூப்பர் ஸ்டார், பும்ராவின் அதியற்புதமான பந்துக்கு அவுட் ஆகியே தீர வேண்டும் 7 ரன்களில் பண்ட்டின் அற்புத கேட்சுக்கு வெளியேறினார்.

    ஷமி


    லியாம் லிவிங்ஸ்டனுக்கு பும்ரா ஒரு சில பந்துகளை வெளியே கொண்டு சென்று ஸ்விங் செய்ய இன்னொரு பந்தை சற்றே மேலேறி நடந்து வந்து ஆட நினைத்தார், பிரமாதமான யார்க்கர் லெக் அண்ட் மிடில் எகிறியது, லிவிங்ஸ்டனும் டக் அவுட். இங்கிலாந்து 26/5. மொயீன் அலி (14), பட்லர் (30) இணைந்து ஸ்கோரை 53 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், ஆனால் மொயீன் அலியை அழகாக செட் அப் செய்து எடுத்தார் பிரசித் கிருஷ்ணா ஷார்ட் பிட்ச் ஆக வீசி விட்டு ஒரு ஃபுல் லெந்த் வீச அவரிடமே மொயின் அலி கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜாஸ் பட்லர் 30 ரன்களில் ஷமி பவுன்சரை புல் ஷாட் ஆடி டாப் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

    கடைசியில் டேவிட் வில்லே, பிரைடன் கார்ஸ் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுக்க கிரெய்க் ஓவர்டன் 8 ரன்களை எடுக்க டாப்லி ஒரு சிக்சருடன் 6 ரன்களை எடுக்க இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ஆல் அவுட்.

    ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பவுலிங் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட இங்கிலாந்து:

    ஷிகர் தவான் இருமுறை ரன் அவுட் ஆகியிருப்பார் தப்பினார், ஆனால் இன்னொரு முனையில் ரோஹித் சர்மா 70% ஷாட்களை லெக் திசையில் இதில் 50% ஷாட்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளில் டீப் ஸ்கொயர்லெக், பைன் லெக், லாங் லெக் திசைகளில் பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார். 58 பந்துகளில் 76 ரன்கள் விளாசித்தள்ளினார் ரோஹித் சர்மா. ஷிகர் தவான் கடைசி வெற்றி பவுண்டரியாக அருமையான லாஃப்டட் ஸ்கொயர் கட் அடித்து வெற்றி பெறச் செய்தார்.

    ரோஹித் சர்மா முதலில் டாப்லியை டாப் எட்ஜில் விக்கெட் கீப்பருக்கு பின்னால் பவுண்டரி அடித்தார். பிறகு டேவிட் வில்லே ஷார்ட் பிட்ச் வீசி சோதிக்க பைன்லெக்கில் 10 வரிசைகள் தாண்டி பந்து போய் விழுந்தது. ரோஹித் பின்னி விட்டார். அதே போல் தேர்ட் மேனில் தட்டி விட்டு ஓவர்டனை பவுண்டரி அடித்து அவரது பேவரைட் ஆஃப் சைடு பவுண்டரியையும் விளாசினார்.



    பிறகு 7வது டாப்லி ஓவரில் தவான் 2 பவுண்டரிகளை விளாச ரோஹித் இன்னொரு பவுண்டரி விளாசினார். ஓவர்டன் மீண்டும் ஷார்ட் பால் வீச இம்முறை டீப் ஸ்கொயர்லெக்கில் பந்து பவுண்டரிக்கு தெறித்தது. 10வது ஓவரில் மீண்டும் போடாதீங்க போடாதீங்க என்று சொல்லி சொல்லி ரோஹித் சர்மா ஷார்ட் பந்து வீச்சை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் அனுப்பினார். 48 பந்துகளில் 48 ரன்களில் இருந்த போது கார்ஸ் என்ற பவுலர் வந்து தன் பங்குக்கு ஷார்ட் பிட்ச் வீச ரோஹித் மீண்டும் ஆன் திசையில் பெரிய சிக்சரை விளாசினார். அதுவே ரோஹித்தின் அரைசதமாகவும் அமைந்தது. அதே ஓவரில் கார்ஸ் பந்தை மீண்டும் பாயிண்டில் ஒரு பவுண்டரியும் பிறகு இன்னொரு ஷார்ட் பிட்ச் பந்தை மீண்டும் பைன்லெக்கில் 10 வரிசை தள்ளி சிக்சர் விளாசினார்.

    இப்படியாக இங்கிலாந்தை முதலில் பும்ரா போட்டு படுத்தி எடுக்க, பிறகு ரோஹித் சர்மா பேட்டிங்கில் விளாசித்தள்ளினார்.

    பாஸ்பால் என்று மெக்கல்லமின் ஆக்ரோஷ அணுகுமுறையை விதந்தோதிய இங்கிலாந்து இப்போது ‘பும்ராபால்’ ஹிட்மேன் பால் என்று புலம்ப வேண்டியதுதான் பாக்கி. ஜஸ்பிரித் பும்ரா ஆட்ட நாயகன்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Jasprit bumrah, Rohit sharma, Shikhar dhawan

    அடுத்த செய்தி