Home » News » Sports » CRICKET INDIA VS AUSTRALIA WHAT HAPPENED IN 36 ALL OUT MUT

36 ரன்களிலே....! இந்திய பிட்ச் ‘சிண்ட்ரோம்’- இந்திய அணியின் பலத்தையே பலவீனமாக மாற்றிய ஆஸ்திரேலியா

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக அமைந்தது.

36 ரன்களிலே....! இந்திய பிட்ச் ‘சிண்ட்ரோம்’- இந்திய அணியின் பலத்தையே பலவீனமாக மாற்றிய ஆஸ்திரேலியா
விராட் கோலி
  • Share this:
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக அமைந்தது. ஏனெனில் அதுவரை அந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி திடீரென சைக்கிள் ஸ்டாண்டில் நெருக்கமாக வைத்திருக்கும் சைக்கிள்களில் ஒரு சைக்கிளைத் தட்டி விட்டால் எப்படி வரிசையாகச் சரியுமோ அப்படிச் சரிந்தது.

பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இந்தச் சரிவுக்கு பல காரணங்களை கூறுகின்றனர், உடனே சிலர் ஷுப்மன் கில், ராகுலை தொடக்கத்தில் இறக்க வேண்டும் என்கின்றனர். சிலர் பிட்சில் ஒன்றுமில்லை பவுலிங் துல்லியம்தான் என்றும் மேலும் சிலர் ஆஸ்திரேலிய பந்து வீச்சின் அதி தீவிரம் மற்றும் புத்திசாலித்தனம், கட்டுக்கோப்பு அபார கேப்டன்சி என்று கூறுகின்றனர்.

தடுப்பாட்டத்திலும் தேவைப்பட்டால் அடித்து ஆடியும் சூழ்நிலையை எதிர்த்துப் போராடிய போராட்ட வீரர் சுனில் கவாஸ்கரும் கூட இத்தகைய ஆஸ்திரேலிய பவுலிங்குக்கு எதிராக இந்திய பேட்ஸ்மென்கள் எதுவும் பெரிதாக மட்டுமல்ல சிறிதாகக் கூட செய்து விட முடியாது என்கிறார். கருத்துக்கள் மாறுபடும்.


ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி குறித்த மீடியா ஹைப்பைப் பார்த்தும், ஐபிஎல் போன்ற தரமற்ற கீழ் நிலை கிரிக்கெட்டைப் பார்த்தும், கோலி மீதான நாயக வழிபாட்டு மனோபாவத்திலும் ஏதோ இந்திய அணிக்கு இத்தகைய சரிவு சாத்தியமே இல்லை என்பது போலவும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவெனில் 2000-ம் ஆண்டுக்குப் பிறகே உள்ளூரிலும் கூட, ஜாம்பவான்களைக் கொண்ட இந்திய அணி இத்தகைய சரிவைச் சந்தித்தது. மும்பையில் 2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக 100 ரன்களுக்கு சரிந்துள்ளது, முன்னதாக 2002-ல் ஹாமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக 99 ரன்களுக்கு மடிந்துள்ளது. 2014-ல் இங்கிலாந்து ஓவலில் 94 ரன்களுக்கு சுருண்டது. 2008-ம் ஆண்டு அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்க வேகத்துக்கு 76 ரன்களுக்குச் சுருண்டது. ஆகவே நல்ல வேகப்பந்து வீச்சுக்கு எதிராக உள்நாட்டிலேயே திணறிய அணிதான் இந்திய அணி என்பதற்கு மேற்கண்ட சந்தர்ப்பங்கள் சாட்சியம்.

ஆனால் அடிலெய்ட் பிட்சில் நடந்தது என்னவெனில், முதல் 2 நாட்கள் பிட்சில் இருந்த ஈரப்பதம் அடித்த வெயிலில் கொஞ்சம் கொஞ்சமாகக் காய்ந்து பிட்ச்சில் பந்துகள் சற்றே வேகம் கூடுதல் பெற்றன, மேலும் சில ஸ்பாட்களில் பந்து நின்று ஸ்விங் ஆனது.இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களின் கால்கள் நகரவில்லை என்பதுதான் தீரா பேட்டிங் நோய். இந்தியப் பிட்ச்களில் ஒரு ஃபுல் லெந்த் பந்தை காலை நகர்த்தாமலேயே நேராகவோ, கவர் ட்ரைவோ ஆடி 4 ரன்களை எடுத்து விட முடியும். ஏனெனில் பவுன்ஸ் முழங்கால் அளவுதான், இடுப்புக்குக் கீழ்தான், அதே ஆஸ்திரேலியா பிட்ச்களில் ஃபுல் லெந்த் பந்தை அதே போல் கால்காப்புக்கு முன்னால் மட்டையை நீட்டி ஆடினால் பந்து பின்னால் விக்கெட் கீப்பர், ஸ்லிப், கல்லியில் கேட்ச் ஆகும், இதுதான் தாத்பரியம், ஏனெனில் அங்கு பவுன்ஸ் கொஞ்சம் கூடுதல். இதை ஆஸி பவுலர்கள் அபாரமாகப் பயன்படுத்தினர். ஷார்ட் பிட்ச் பந்துகளையே வீசவில்லை.

அதிலும் பாட் கமின்ஸ் பந்துகள் காற்றில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்து பிட்ச் ஆகும் போது மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி ஒன்று நேராகவோ அல்லது சற்றே வெளியேயோ ஸ்விங் ஆகிறது. இதனைக் கணிப்பது மிகமிகக் கடினம், இப்படிப்பட்ட ஒரு விளையாட முடியாத பந்தில்தான் புஜாரா சிக்கி ஆட்டமிழந்தார்.

மற்றபடி ஹேசில்வுட் ஃபுல் லெந்தில் சாதாரணமாகவே வீசினார். ரஹானே 4 ரன்களுக்கு வெளுத்திருக்க வேண்டிய ஒரு ஃபுல் லெந்த் பந்தில் காலை நகர்த்தாமலேயே இந்தியப் பிட்சில் ஆடுவது போல் மட்டையை மட்டும் முன்னால் நீட்டினார் பந்து எட்ஜ் வாங்கி பின்னால் கேட்ச் ஆனது. விராட் கோலி இது போன்று அவுட் ஆகக் கூடியவர்தான், இவருக்கும் இந்தியப்ப்பிட்ச் சிண்ட்ரோம் தான் காரணம், அந்த பந்தை ஆடாமல் விட்டிருப்பது தான் சிறந்த பேட்ஸ்மென் செய்வதாகும். உலகின் சிறந்த வீரர் முன்னால் சென்று மட்டையை மட்டும் நீட்டுவது அழகல்ல. இந்தியப் பிட்ச் ஆக இருந்தால் வர்ணனையாளர்கள், ‘ஆஹா! வாட் எ ஷாட். பார்க்கும் இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், பாடி பேலன்ஸ்’ என்றெல்லாம் பீற்றித்தள்ளியிருப்பார்கள். ஆனால் இது ஆஸ்திரேலிய பிட்ச், ட்ரைவ் ஆடினார் பந்து கல்லிக்குச் சென்றது கவருக்கு அல்ல. கிரீன் எதிர்பார்த்துக் காத்திருந்தார் கேட்ச் ஆனது.

டி20 கிரிக்கெட்டை ஆடி விட்டு நேராக டெஸ்ட் மேட்சுக்கு வந்ததினால் டெஸ்ட் மேட்சுக்கே உரிய சிக்கனமான தடுப்பாட்டம், பந்துகளை ஆடாமல் விடுவது போன்ற லட்சனங்களை இந்திய பேட்ஸ்மென்கள் இழந்துள்ளனர்.

சரி! டெஸ்ட் போட்டி போன்று ஆட முடியவில்லையா? 53 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் என்ன செய்திருக்க வேண்டும்? டி20 போலவே அடித்து ஆடியிருக்கலாமே! அப்படி ஆடியிருந்தால் ஆஸ்திரேலியா பவுலர்கள் உத்தியை மாற்றியிருப்பார்களே. ஆஸ்திரேலியா பவுலர்கள் எப்போதும் நன்றாகவே வீசுவார்கள். அதுவும் அவர்கள் பிட்சில் அவர்கள் தாதாக்களே. எதிரணி பேட்ஸ்மென்கள்தான் அவர்களை நன்றாக வீச விடாமல் அடிக்க வேண்டும். டி20 போல் ஆடி 20 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து அனைவரும் அவுட் ஆகியிருந்தால் கூட மொத்த ரன் எண்ணிக்கை 170-175 ஆக இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஏனெனில் இதே பிட்சில்தான் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், கடைவரிசை பேட்ஸ்மென்களை வைத்துக் கொண்டு 70க்கும் கூடுதலான ரன்களை அடித்தார். எனவே இந்திய அணி வீரர்களின் அணுகுமுறைதான் தவறு என்று விராட் கோலி கூறியது சரியே. எப்படியிருந்தாலும் இந்த 36 ரன்கள் என்ற துர்க்கனவிலிருந்து மீள இந்திய அணிக்கு நாளாகும். கோலியும் அடுத்த டெஸ்ட் முதல் இல்லை.

மொத்தத்தில் ஆஸ்திரேலிய பவுலர்கள், இந்திய அணி வீரர்களின் இந்தியப் பிட்ச் ஆட்ட உத்தியையே இந்திய வீரர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா திருப்பி வெற்றி கண்டது, அது என்னவெனில் முன் காலுடன் மட்டையையும் கொண்டு வந்து ஸ்விங் ஆகும் பந்திடம் நீட்டும் போக்கு. இதற்கு மாறாக பேக் அண்ட் அக்ராஸ் உத்தியில் ஆடியிருந்தால் பந்தை ஆடாமல் விட்டிருக்கலாம் அல்லது தடுக்கலாம்.

ஸ்டீவ் ஸ்மித்தை அழகாக ஆடவில்லை என்று கேலி பேசும் கிரிக்கெட் அறியாத கருத்தாளர்கள், இங்கிலாந்தில் இதை விட ஸ்விங் ஆகும் களத்தில் எப்படி பின் காலை முதலில் பின்னால் நகர்த்தி ஷஃபுள் செய்து வெளுத்து வாங்கி சதங்களக அடித்து நொறுக்கினார் என்பதைப் பார்த்தால் ஒட்டுமொத்த இந்திய பேட்ஸ்மென்களின் போதாமை வெட்ட வெளிச்சமாகும். இந்திய பேட்ஸ்மென்கள் தங்களின் பலமாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தையே பலவீனமாக மாற்றி வீரர்களின் மனங்களில் பெரும் சந்தேகத்தையும் குருட்டுப் புள்ளியையும் உருவாக்கி விட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள்.
First published: December 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories