மெல்போர்னில் டெஸ்டில் பேட்டிங் செய்துகொண்டிருந்த ரோகித் மற்றும் ரிஷப் பண்டை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வம்புக்கு இழுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
296 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் வரிசை வீரர்கள் விரைவில் இழந்தது. 3-ம் நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. பெர்த் டெஸ்ட் போட்டியில் வீரர்கள் வார்த்தை மோதல் நடந்ததுபோல், இந்த போட்டியிலும் சில நிகழ்வுகள் நடந்தன.

பெர்த் மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - டிம் பெய்ன். (Twitter)
3-ம் நாள் ஆட்டத்தில், ரிஷப் பண்ட் பேட்டிங்கின்போது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், “தோனி வந்ததால் ஒருநாள் அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் லீக் தொடரில் விளையாடும் ஹரிஹேன்ஸ் அணியில் சேர்த்துவிடவா?” என கூறினார்.
அதேபோல, ரோகித் சர்மா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த பிஞ்சிடம், “ரோகித் சிக்ஸ் அடித்தால் நான் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் மும்பை அணியில் சேர்ந்து விடுகிறேன்” என்றார்.
ஆனால், ரோகித் சர்மா அதை கண்டுகொள்ளவில்லை.
டிம் பெய்னின் உரையாடல்கள் அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.