தேறாதது ஆஸி.யா? இந்திய அணியா? - மெல்போர்னில் அபார வெற்றியை நோக்கி ரஹானே படை

தேறாதது ஆஸி.யா? இந்திய அணியா? - மெல்போர்னில் அபார வெற்றியை நோக்கி ரஹானே படை

மெல்போர்ன் டெஸ்ட்.

ஜடேஜா மிக முக்கியமான அரைசதம் மற்றும் ரஹானேவுடன் இணைந்து அமைத்த சதக்கூட்டணியோடு (121 ரன்கள் கூட்டணி) 2வது இன்னிங்ஸ் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸி.யை சந்திக்கு இழுத்தார்.

  • Share this:
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில்  36 ஆல் அவுட், தோல்விக்குப் பிறகு இந்திய அணியை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் ஊற்றி மூடினர். தேறவே தேறாது என்றனர். ஆனால் தேறாமல் போனதென்னவோ ஆஸ்திரேலிய அணிதான் என்பதை வாய் பேசாமல் செயலில் நிரூபித்துள்ளது இந்தியா.

ஆம்! மெல் போர்ன் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் அற்புத சதம் மற்றும் ஜடேஜாவின் அரைசதம் ஆகியவற்றினால் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸை கடும் அழுத்தத்துடன் தொடங்கிய ஆஸ்திரேலியாவின் உடைந்து போன டாப் ஆர்டர் மீண்டும் உடைந்து நொறுங்கியது, காரணம் இந்திய அணியின் அபாரப் பந்து வீச்சு, பும்ரா, சிராஜ், உமேஷ், அஸ்வின், ஜடேஜா வெளுத்துக் கட்டினர். ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் என்று 2 ரன்கள் முன்னிலைபெற்றுள்ளது, நாளை சம்பிரதாயம் முடிந்து இந்தியா தொடரைச் சமன் செய்யும். தேறாதது இந்தியாவா, அல்லது ஆஸ்திரேலியாவா என்பது தினவெடுக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் புரியும்.

இரண்டாவது இன்னிங்சில் அருமையான லேட் அவுட் ஸ்விங்கரில் ஜோ பர்ன்ஸ் (4) விக்கெட்டை வீழ்த்திய உமேஷ் யாதவ் காயத்தினால் பெவிலியன் திரும்பியுள்ளார், அவருக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.

5 பவுலர்கள் என்ற உத்தி இந்தியாவுக்கு பிரமாதமாக கைகொடுத்தது. ஏனெனில் ஜடேஜா மிக முக்கியமான அரைசதம் மற்றும் ரஹானேவுடன் இணைந்து அமைத்த சதக்கூட்டணியோடு (121 ரன்கள் கூட்டணி) 2வது இன்னிங்ஸ் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸி.யை சந்திக்கு இழுத்தார். ஜடேஜாவும் அஸ்வினும் நன்றாக வீசியதால் சிராஜ், பும்ராவை அதிகம் பயன்படுத்த நேரிடவில்லை.

இன்னும் 200 ரன்களையே முதல் டெஸ்ட்டிலிருந்து பார்க்காத ஆஸ்திரேலியா அணியின் சரிவுக்குக் காரணம் ரன் மெஷின் ஸ்டீவ் ஸ்மித் இப்போது அஸ்வினால் ரிப்பேர் ஆகிவிட்டது, இன்று அவர் பும்ராவின் சமயோசித லெக் ஸ்டம்ப் பந்துக்கு ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து பந்தைக் கோட்டை விட்டு பவுல்டு ஆனார். அவரே திகைத்துப் போனார்.

டிம் பெய்னுக்கு டிஆர்எஸ் மேல்முறையீட்டில் அவுட் கொடுக்கப்பட்டது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது, சர்ச்சைக்குரிய முடிவு என்கின்றனர் அதனை. ஹாட்ஸ்பாட்டில் எட்ஜுக்கான அடையாளம் காட்டியது, ஸ்னிக்கோ மீட்டரும் உறுதி செய்தது, பின் ஏன் அவர் கோபமாகச் சென்றார் என்று தெரியவில்லை.

அந்தத் தருணத்தில் ஆஸ்திரேலியா 23 பந்துகளில் 1 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன் பிறகு கமின்ஸ் (15 நாட் அவுட்), கேமரூன் கிரீன் (17 நாட் அவுட்), 18 ஓவர்களைச் சமாளித்து 34 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலியா 133/6 என்று இந்திய முன்னிலையை கடந்தது.

மேத்யூ வேட் போராடி 40 ரன்களைச் சேர்த்தார் ஆனால் அவரும் ஜடேஜா பந்தில் எல்.பி.ஆனார். லபுஷேன் நன்றாக ஆடினார், ஆனால் அஸ்வினின் புத்திசாலித்தனம் அவரை விழுங்கி விட்டது. ஒரு பந்தை ஆஃப் ஸ்பின் செய்யாமல் நேராக கையை ரவுண்ட் ஆர்மில் அப்படியே செலுத்த லபுஷேன் மட்டை விளிம்பில் பட்டு ரஹானேவிடம் கேட்ச் ஆக 28 ரன்களில் அவர் வெளியேறினார். ட்ராவிஸ் ஹெட், சிராஜ் பந்தை 2வது ஸ்லிப்புக்கு எட்ஜ் செய்து வெளியேறினார், ரஹானேவின் அபார கேப்டன்சி அது.

கமின்ஸ் 8 ரன்களில் இருந்த போது அஸ்வின் பந்தை மெலிதாக எட்ஜ் செய்தார் ஆனால் ரிஷப் பந்த் கேட்சை விட்டார். கமின்ஸை அப்போது கழற்றியிருந்தால் ஒருவேளை ஆஸ்திரேலியா மிக மோசமான இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியிருக்கும்.

ஆனால் கமின்ஸ், கிரீன் 2 ரன்கள் முன்னிலையுடன் நாளை தொடங்குகின்றனர்.
Published by:Muthukumar
First published: