சிட்னி டெஸ்ட் போட்டியில் எந்த 11 பேரைக் களமிறக்கலாம் என குழப்பம் நிலவுவதால் ஆஸ்திரேலிய அணியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஜன.3) தொடங்குகிறது.

சிட்னி கிரிக்கெட் மைதானம். (Cricket Australia)
இதுவரை, டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியின் பட்டியலை ட்விட்டரில் வெளியிட்டு வந்தது. ஆனால், முதல் மற்றும் மூன்றாவது டெஸ்டில் அடைந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மெல்போர்னில் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)
சிட்னியில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்டில் டிரா செய்தாலே இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிடும். ஆனால், சிட்னியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இதனால், அந்த அணி நிர்வாகம் பலத்த யோசனையில் உள்ளது. தொடக்க வீரர் பிஞ்ச் 6 இன்னிங்சில் விளையாடி ஒரேயொரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளதால், அவர் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆரோன் பிஞ்ச். (Cricket Australia)
சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், மெல்போர்ன் டெஸ்டில் களமிறங்கி ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ்-க்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மார்னஸ் லாபஸ்சேக்னே-வை சேர்க்கலாம் என தெரிகிறது. முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ஆடுகளத்தை பார்த்த பிறகுதான் அணி தேர்வு முடிவு செய்யப்படும் என கூறினார்.

மைதானத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் (வலது). (Cricket Australia)
அவர் அளித்த தகவலின்படி போட்டி தொடங்குவதற்கு முன்பு, ஆடுகளத்தைப் பார்த்த பின்னர்தான் ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.