இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்க முடிவு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி (கோப்பு படம்)

உலககோப்பை டி 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க உள்ளது

  • Share this:
கொரோனா பரவலுக்கு நடுவே கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஐபிஎல் டி20 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை டி 20 போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க உள்ளது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள டி20 உலகக் கோப்பையில் 45 மேட்ச்கள் நடத்தப்பட உள்ளன. இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்சனை, தீவிரவாத தாக்குதல் பிரச்சனை உள்ளிட்டவை காரணமாக சுமூக உறவு இல்லை. இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே பல ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுவதில்லை. இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சுற்றுப்பயணம் செய்து விளையாடாமல் வேறு வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால், தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. இது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவதற்கு மார்ச் இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த உலகக்கோப்பை தொடரை வேறு நாட்டில் நடத்த ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி கூறி இருந்தார்.

Also Read : பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை?
 இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து அணி வீரர்களுக்கும் விசா வழங்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை 2021 தொடரில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க போவது உறுதியாகியுள்ளது.


மேலும் தகவல் தெரிவித்த அந்த அதிகாரி, இந்த தொடரை நடத்த அஹமதாபாத், லக்னோ, சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடரின் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளார்.

Also Read :  முகமது ஷமியின் காலை தொட்டு கும்பிட்ட பின் 4 விக்கெட்களை வீழ்த்தினார் தீபக் சஹார்
 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விசா பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கும் சூழல் அப்போது இருக்குமா.? அப்படி ரசிகர்கள் போட்டிகளை காண அனுமதி வழங்கும் பட்சத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் போட்டிகளை காண எல்லையைத் தாண்டி பயணிக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
Published by:Vijay R
First published: