இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று இரவு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு எதிராக மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறவுள்ளது. மேலும், 7-ம் தேதி, இந்தூரிலும், 9-ம் தேதி புனேவிலும் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இலங்கை அணியை அனுபவம் வாய்ந்த லசித் மலிங்கா வழிநடத்துகிறார். இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளதில், இந்திய அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் இளம் வீரர்களுடன் இலங்கை களமிறங்கவுள்ளதால் அந்த அணியின் பலத்தை கணிக்க முடியாத நிலை உள்ளது. இதுவரை இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகளில் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அசாம் மாநிலத்தில் தீவிரமாக நடைபெற்று வருவதால் போட்டி நடக்கும் கவுகாத்தி மைதானத்துக்கு வெளியே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு கருதி, ரசிகர்கள் செல்போன் மற்றும் பர்ஸ் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றையப் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஒரு ரன் சேர்க்கும் நிலையில், சாதனையுடன் 2020-ம் ஆண்டை தொடங்கவுள்ளார். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 2 ஆயிரத்து 633 ரன்களுடன் கோலி, ரோஹித் சர்மா முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். மேலும், ஒரு ரன் சேர்த்தால் விராட் கோலி தனியொருவனாக முதலிடத்திற்கு முன்னேறுவார்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Virat Kohli