ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கே.எல்,ராகுல் மற்றும் ஜடேஜாவின் அபாரமான ஆட்டத்தால் 20 ஒவர்கள் முடிவில் 161 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி கான்பீரா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20-ல் தனது முதல் போட்டியில் அவர் இன்று விளையாட உள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகார் தவான் களமிறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. ஷிகார் தவான் 1 ரன்னில் அவுட்டாக அடுத்த வந்த கேப்டன் விராட் கோலி 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.
சஞ்சு சாம்சன் 23, மனிஷ் பாண்டே 2, ஹர்டிக் பாண்டியா 16 ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் கே.எல்.ராகுல் மட்டும் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதி ஓவர்களில் அபாராமாக விளையாடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.