புதனன்று பகலிரவு டெஸ்ட்; பிங்க் பந்தில் 36 ஆல் அவுட் அச்சத்தில் விராட் கோலி ; குழிபிட்சுக்கு பிங்க் பந்து உதவுமா? - அணி என்ன?

அகமதாபாதில் பயிற்சியில் இந்திய அணி.

பிங்க் நிறப் பந்தில் நடைபெற்ற 15 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் 354 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்கள் வெறும் 115 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துள்ளனர் என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம்.

  • Share this:
நாளை (புதன், 24-2-2021) அகமதாபாதில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது, இது பகலிரவு ஆட்டம் பிங்க் நிற எஸ்.ஜி பந்தில் டெஸ்ட் போட்டி ஆடப்படுகிறது.

1,10,000 பேர் அமர்ந்து பார்க்கும் உலகின் மிகப்பெரிய மைதானம், மெல்போர்னையும் கடந்த கொள்ளளவு.

சிகப்பு நிற எஸ்.ஜி. பந்துக்கும் பிங்க் நிற எஸ்.ஜி பந்துக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அதன் புறத்தோலில் கலர் எப்படி சேர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்ததே. பிங்க் பந்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட லேயர்கள் கலர் சேர்க்கப்படும். இந்த கலர் கோட்டிங்குகள் நீண்ட நேரம் தாங்க வேண்டும் என்பதால் கூடுதலாக அரக்கு இன்னொரு லேயர் சேர்க்கப்படும்.

இந்த கூடுதல் அரக்குப் படிவினால் பந்துகள் எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளே வருவதாக பேட்ஸ்மென்கள் முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மென்கள் கூறியதும் நினைவுகூரத்தக்கது. அதே போல் பீல்டர் கையில் பந்து படும்போது வலிக்கும் படியான கடினத்தன்மையையும் கொண்டிருந்ததாக வீரர்கள் தெரிவித்தனர். பந்தின் பளபளப்பு நீண்ட நேரம் இருப்பதால் ஸ்விங் ஆகிக் கொண்டே இருக்கும்.

இதனால் தான் பிங்க் நிறப் பந்தில் நடைபெற்ற 15 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் 354 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்கள் வெறும் 115 விக்கெட்டுகளையும் மட்டுமே எடுத்துள்ளனர் என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம். அதனால் அன்று ரோஹித் சர்மா கூறியது போல் சென்னை பிட்ச் போல் இருக்கும் என்றால் பிங்க் பந்து அதற்கு உதவுமா என்று தெரியாது. ஏனெனில் பிங்க் பந்து எளிதில் மென்மையாகி விடாது.

பிங்க் பந்து.


இதற்கு முன்னால் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் அஸ்வின், ஜடேஜா மொத்தமே 7 ஓவர்கள் தான் வீசினர்.

பிங்க் நிறப் பந்தில் ஆடும்போது பிட்சில் புற்கள் இருந்தால்தான் பிங்க் நிறப்பந்து விரைவில் தன் கலரை இழக்காது. மாறாக குழிப்பிட்சுக்காக புற்களை சுத்தமாக மழித்து விட்டால் பந்தின் கலர் விரைவில் மங்கிப் போய் பந்தைப் பார்ப்பது கடினமாகி விடும். இன்னொன்று, கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்டில் 4 வங்கதேச வீரர்கள் பவுன்சரில் ஹெல்மெட்டில் வாங்கி 2 கன்கஷன் பதிலிகளை அழைக்க நேரிட்டது.

புஜாரா பிங்க் நிறப்பந்து கண்ணுக்குத் தெரிவதில் பிரச்சினை இருக்கிறது, சவால்தான் என்று கூறியுள்ளார்.

மேலும் புஜாரா கூறும்போது, அகமதாபாத்தில் பனிப்பொழிவு ஏற்படும், அப்படி ஏற்பட்டால் பந்து ஸ்பின்னும் ஆகாது, ஸ்விங்கும் ஆகாது, பேட்ஸ்மென்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும் என்றார். ரிவர்ஸ் ஸ்விங் இருக்காது, ஸ்பின்னர்கள் பந்தை பிடிக்க முடியாது, ஈரத்தை பிங்க் பந்துகள் உள்வாங்கி பந்து கனமாகி வடிவம் போய்விடும்.

இப்படிப்பட்ட கண்டிஷனில் ரிஸ்ட் ஸ்பின்னர்தான் சரியாக இருப்பார் என்கிறார் புஜாரா, அப்போது குல்தீப் யாதவுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டும், ஆனால் விராட் கோலிதான் வித்தியாசமாக (?) சிந்திப்பவராயிற்றே, அக்சர் படேலைத்தான் வைத்துக் கொள்வார். ஆகவே இவ்வளவு பிரச்சினை இருக்கிறது.

இதில் இந்திய, இங்கிலாந்து அணிகள் எப்படி ஆடப்போகின்றன என்பது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. சென்னை 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து பி அணியை இறக்கியது, இதில் நிச்சயம் ஜோப்ரா ஆர்ச்சர், பிராட், ஆண்டர்சன் இருப்பார்கள், 2 ஸ்பின்னர்கள் இருப்பார்கள். குழிப்பிட்ச் போட்டும் பயனற்று போவதற்குப் பதில் புற்களுடன் பிட்ச் இருந்தால் இந்திய வேகப்பந்து வீச்சின் முன் இங்கிலாந்து நிற்காது என்ற நம்பிக்கையுடன் களமிறங்குவதுதான் ஆரோக்கியம். ஆனால் பிங்க் பந்தில் 36 ஆல் அவுட் ஆனது கோலியின் கேப்டன்சியில்தானே அது கண்ணு முன்னால வந்து போகுமா இல்லையா?

ஆட்டம் மதியம் 2.30 மணிக்குத் தொடங்கும். உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, பந்த், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா
Published by:Muthukumar
First published: