தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளதால் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி இன்று தொடங்க இருந்த நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதே போல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் பேட்டிங் பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் அணியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் விலகியது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருந்த போதும், ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதித்த ஹர்திக் பாண்டியா வருகை அணிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Also Read :
என் தந்தையைப் பார்த்தே விக்கெட் கீப்பிங் தேர்வு செய்தேன் - ரிஷப் பண்ட் உணர்ச்சிகரம்
கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் விலகி உள்ளதால் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களின் முக்கிய மாற்றங்கள் இருக்கும். கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஒபனிங்கில் ருதுராஜ் கெய்வாட் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரராக இஷான் கிஷான் இருப்பார். வலது மற்றும் இடது என்ற முறையில் ஒபனிங்கின் படி இவர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது.
உத்தேச இந்திய அணி : ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்சல் படேல், சஹால், உம்ரான் மாலிக்
டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தினால், டி-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தும் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.