உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்தில் தோல்விகளால் விமர்சனத்துக்குள்ளான பாகிஸ்தான் அணி தற்போது தொடர் வெற்றியின் மூலமாக ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியடைந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியையும், கேப்டன் சர்பராஸையும் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
பாகிஸ்தான் வீரர்கள் மீதான விமர்சனத்தின் எல்லையாக கேப்டன் சர்பராஸ் அஹமதை பொது இடத்தில் ரசிகர் ஒருவர் கேலி செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்தது. விமர்சனங்களையும், கேலிகளையும் உடைத்து எறிந்த பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணி மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகரித்தது.
உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி தோற்கடித்து ரசிகர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுலிங், ஃபில்டிங், பேட்டிங் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி பொறுப்புடன் செயல்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்து உள்ளது. 1992 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் தோல்வி அடைந்த பின் வெற்றி பாதைக்கு திரும்பியது. தற்போதும் அதே நிலையில் உள்ளதால் இந்த முறையும் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றியை இந்திய அணியின் ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவரும், பாகிஸ்தான் ரசிகர் ஒருவரும் உற்சாகமாக ஆடி, பாடி கொண்டாடினர். இரு நாட்டு ரசிகர்களின் இந்த கொண்டாட்டத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.