அடிலெய்டில் மோசமாகத் தோற்ற பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் இந்திய அணியை ஊற்றி மூடிய நிலையில், 0-4 தோல்விதான் என்று இறுமாப்பு கொண்ட நிலையில் ரஹானே தலைமையில் இந்தியா அபார மீட்டெழுச்சி பெற்று அபார வெற்றியுடன் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு நம்ப முடியாதபடி மீண்டெழுந்தது இந்திய அணி. ரஹானேவின் கேப்டன்சி அற்புதமாக அமைந்தது.
நேதன் லயன் வீசிய 16வது ஓவரின் 5வது பந்தை ரஹானே ஸ்கொயர் லெக்கில் தட்டி விட்டு ஒரு ரன் எடுத்ததையடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி 70/2 என்று வெற்றி பெற்றது.
70 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, மயங்க் அகர்வால் (5), புஜாரா (3) ஆகியோர் விக்கெட்டை ஸ்டார்க் மற்றும் கமின்ஸிம் இழந்த போது பதற்றம் ஏற்பட்டது.
ஆனால் கேப்டன் ரஹானே, அபார ஷுப்மன் கில் இணைந்து வெற்றிக்கு இட்டு சென்றனர். ரஹானே 40 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களுடனும், ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 7 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
தொடர்ச்சியாக மெல்போர்னில் 2வது வெற்றி என்பதோடு மெல்போர்னில் மட்டும் இந்திய அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இன்று காலை 133/6 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, முகமது சிராஜ் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா கமின்ஸை ஷார்ட் பிட்ச் பவுன்சரில் வீழ்த்த கடைசியில் ஹேசில்வுட்டை அஸ்வின்பவுல்டு செய்ய ஆஸி. அணி முதல் முறையாக 200 ரன்களை ஒரு இன்னிங்ஸில் இந்தத் தொடரில் கைப்பற்றியது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் மிக மோசமாக ஆடினார். ஆடாமல் விட வேண்டிய பந்தை தப்பும் தவறுமாக மட்டையை நீட்டி கேட்ச் ஆனார். புஜாராவும் வெளியே சென்ற கமின்ஸ் பந்தை மட்டையை நீட்டி கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார், தவறுகளிலிருந்து திருத்திக் கொள்ளவே இல்லை.
அறிமுக போட்டியில் ஆடிய சிராஜ் (5 விக்), ஷுப்மன் கில், (45, 35 நாட் அவுட்) அபாரமாக ஆடினர், ஜடேஜாவின் பங்களிப்பு அளப்பரியது, ரஹானே கேப்டன்சி, பேட்டிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணமாக அமைந்தது. ரஹானே கேப்டன்சியில் 3வது டெஸ்ட் வெற்றியாகும் இது.
பந்து வீச்சாளர்கள் பும்ரா, உமேஷ், சிராஜ், அஸ்வின் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகி இருந்திருக்காது, திட்டமிட்டபடி லெக் திசையில் பீல்டர்களை நெருக்கி, நேராக பவுலிங் செய்து இன்ஸ்விங்கர் அவுட் ஸ்விங்கர், ஷார்ட் பிட்ச், ஃபுல் லெந்த் என்று மாறி மாறி வீசி ஆஸ்திரேலியாவின் ஸ்கோரிங் வேகத்தை முடக்கியதுதான் இந்திய வெற்றியின் முக்கியக் காரணியாகும்.
ஆட்ட நாயகனாக 112, 27 நாட் அவுட் என்று அசத்திய ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs Australia, Melbourne