இலங்கையை வீழ்த்த இந்திய-சி டீம் போதும்- கம்ரன் அக்மல் அதிரடி

பாக். வீரர் கம்ரன் அக்மல்.

இப்போது இந்திய கிரிக்கெட் இருக்கும் வலுவான நிலையில் இந்திய அணி ஒரே நேரத்தில் 3 அணிகளை சர்வதேச கிரிக்கெட்டில் இறக்க முடியும், இலங்கையை வீழ்த்த இந்தியாவின் சி டீம் போதும் என்று பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்தில் இந்திய மூத்த வீரர்கள் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூஸிலாந்துடன் விளையாடிய பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது, இதற்காக இந்திய அணி ஜூன் 2ம் தேதி புறப்படுகிறது, 3 மாதங்களுக்கும் மேல் இந்திய சீனியர் அணி இங்கிலாந்தில் முகாமிடவுள்ளது.

    2வது இந்திய அணி அதே நேரத்தில் வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கு ராகுல் திராவிட் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படலாம் அல்லது எதிர்காலத்தை முன்னிட்டு ஐபிஎல் 2021 தொடரில் வெளுத்து வாங்கும் பிரிதிவி ஷாவிடம் கேப்டன்சி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    இதில் ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களான படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கைக்கு எதிராக ஜூலை 13ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும், ஜூலை 22ம் தேதி முதல் 3 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் இளம் வீரர்களையும் அதற்காக தயார்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரம் அக்மல்,

    இந்தியாவால் ஒரே நேரத்தில் 3 அணிகளை கூட உருவாக்க முடியும் என பாராட்டியுள்ளார்.

    இந்தியாவின் கிரிக்கெட் உள்கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் அடிதளத்தில் இருந்து வீரர்களை மிகச்சிறப்பாக உருவாக்குகின்றனர். இந்திய அணி அடுத்ததாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவின் 3வது அணியை அதற்கு அனுப்பினாலும் இலங்கையை வீழ்த்திவிடும், அப்படிபட்ட பலமான வீரர்கள் இந்தியா வசம் உள்ளனர்.

    முன்னாள் வீரர் ராகுல் திராவிட் பிசிசிஐ-காக கடந்த 7 - 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவர் இந்திய வீரர்களை அடிதளத்தில் இருந்து சிறப்பாக செதுக்கிய விதம் இன்று இந்திய அணியை வேறு இடத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அவர் தயார்படுத்தி அனுப்பும் இளம் வீரர்களை சர்வதேச போட்டிகளில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மேலும் மெருகேற்றுகிறார்.

    கேப்டன் பதவி இந்திய அணியில் தோனிக்கு பிறகு விராட் கோலி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஒருவேளை கோலிக்கு ஓய்வு தேவைப்பட்டால் ரோகித் சர்மா கேப்டன் பதவிக்கு உள்ளார். அவருக்கும் காயம் ஏதாவது ஏற்பட்டால் கே.எல்.ராகுல் உள்ளார். எனவே முக்கிய வீரர்கள் இல்லை என்ற கவலை பிசிசிஐ-க்கு இருக்கவே இருக்காது.

    இவ்வாறு கூறியுள்ளார் கம்ரன் அக்மல்.
    Published by:Muthukumar
    First published: