ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி… 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது…

3ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி… 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது…

இந்திய அணி

இந்திய அணி

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், இருவரும் டி20 மேட்ச்சைப் போல விளையாட ஆரம்பித்து ரன்களை குவித்தார்கள். ரோஹித் சர்மா101 ரன்னும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். அடுத்து வந்த விராட் கோலி 36 ரன்னும், இஷான் கிஷன் 17 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்னில் நடையைக் கட்டினார். ஒரு கட்டத்தில் 400 ரன்களை அணி எளிதாக கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் 350யை தாண்டி விடுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூரின் சிறப்பான ஆட்டத்தால் அணி 50 ஓவர்கள் முடிவில் 385 ரன்களை எட்டியது.

பாண்ட்யா 38 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரியுடன் 54 ரன்களும், ஷர்துல் தாகூர் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் டெவோன் கான்வே விளையாடினர். முதல் ஓவரில் ஃபின் ஆலன் பாண்ட்யா பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். அடுத்து இணைந்த கான்வே – நிகோல்ஸ் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. 42 ரன்னில் நிகோல்ஸ் வெளியேற அடுத்து வந்த டேரில் மிட்ச்செல் 24 ரன்கள் எடுத்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த டெவோன் கான்வே 138 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பிரேஸ்வெல் 26, சான்ட்னர்34 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 295 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணியில் ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியுள்ளது.

First published:

Tags: Cricket