ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மார்னஸ் லபுஷேனும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 177 ரன்களில் முதல் இன்னிங்சை இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா அபாரமாக சதம் விளாசினார். இந்திய அணியிலும் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய தொடங்கின. ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இணைந்து 88 ரன்கள் சேர்த்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 327 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று மீண்டும் களமிறங்கிய இந்திய அணியில், சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 70 ரன்களிலும், அக்சர் படேல் 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக அதிரடியாக விளையாடிய ஷமி, 47 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என 37 ரன்களை எடுத்தார். இதனால் இந்திய அணி 400 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக புதிதாக களமிறங்கிய டோட் முர்பி 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Axar patel, Ind Vs Aus, INDvAUS, Rohit sharma, Test match