இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தொடர்ச்சியாக 2 தொடர்களில் வென்று சாதித்ததையடுத்து இந்திய அணி டாப் அணியாக முன்னேறியதற்குக் காரணம் என்னவென்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டனு இந்நாள் இம்ரான் கானும் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்ரான் கூறும்போது, “இந்திய அணியை இப்போது பாருங்கள், உலகின் டாப் அணியாகத் திகழ்கிறது. நம்மிடையே நிறைய திறமை இருந்தாலும் இந்தியா அடிப்படை கிரிக்கெட் கட்டமைப்பை வலுப்படுத்தியதால் இந்திய அணி இன்று டாப் அணியாகத் திகழ்கிறது.
கட்டமைப்பை தகுந்த முறையில் உருவாக்கினால் அது வேலை செய்வதற்கு சில நாட்கள் ஆனாலும் திறமைகளைக் கூர்படுத்த முடியும். நம் அணியும் இந்தியா போல் உலகத்தை வெல்லும் அணியாக மாறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இப்போது நம்மிடையே இருக்கும் மாகாண கிரிக்கெட் கட்டமைப்பு வலுவடைந்தால் இன்னும் 2-3 ஆண்டுகளில் இதன் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
உள்ளபடியே கூற வேண்டுமெனில் கிரிக்கெட்டை கவனிக்க என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. என்னால் கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்க முடியவில்லை, நேரம் இல்லை. ஆனால் நம் அடிப்படை கட்டமைப்பு மாற்றப்பட்டுள்ளது, எனவே இதன் பலன் 2-3 ஆண்டுகளில் கிடைக்கும்.” என்றார்.
இம்ரான் கான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர், மேலும் உலகின் தலை சிறந்த கேப்டன்களுள் ஒருவர். 1992 உலகக்கோப்பையில் மிகவும் பின்னடைவு கண்ட நிலையிலிருந்து அபார வெற்றி பெற்று உலகக்கோப்பையையே வெல்லச் செய்தவர் இம்ரான் கான்.
இவரது கேப்டன்சியில்தான் சிறந்த பவுலர்களான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதிர், சிக்கந்தர் பக்த், சர்பராஸ் நவாஸ் போன்றவர்கள் ஆடி உலகை அச்சுறுத்தினர்.
அதே போல் மோசின் கான், முடாசர் நாசர், சாதிக் முகமது, ஹாரூன் ரஷீத், போன்ற சிறந்த பேட்ஸ்மென்களுக்கு வாய்ப்பளித்து உருவாக்கியதும் இம்ரான் கான் தான்.
2018-ல் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனவுடன் ஐசிசி தலைவராக இருந்த இஷான் மானியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக்கினார்.
அடிப்படைக் கட்டமைப்பை இம்ரான் வலுப்படுத்தினார், அதனால் 16 பிராந்திய அணிகளுக்குப் பதிலாக 6 மாகாண அணிகளாக பிரித்து கட்டுக்கோப்பைப் புகுத்தியுள்ளார் இம்ரான் கான்.
எப்போதும் கிரிக்கெட்டை நட்புறவுக்கான ஒரு களமாக பார்க்கும் இம்ரான் கான் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு போட்டிகள் தொடங்குவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருபவர்.