முகப்பு /செய்தி /விளையாட்டு / வாஷிங்டன் சுந்தரின் ஒரு ஓவர் திருப்பு முனை, ராகுலுக்கு கேட்சை விட்ட ’ஹோப்லெஸ்’ ஹோப்-தொடரை வென்றது இந்தியா

வாஷிங்டன் சுந்தரின் ஒரு ஓவர் திருப்பு முனை, ராகுலுக்கு கேட்சை விட்ட ’ஹோப்லெஸ்’ ஹோப்-தொடரை வென்றது இந்தியா

வெற்றிக்களிப்பில் இந்தியா

வெற்றிக்களிப்பில் இந்தியா

சூர்யகுமார் யாதவ் தனது அதிகபட்ச ODI ஸ்கோரைப் பதிவு செய்த பிறகு, பிரசித் கிருஷ்ணா (4/12) மற்றும் ஷர்துல் தாக்கூர் (2/41) ஆகியோர் ஆறு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள வாஷிங்டன் சுந்தரின் அந்த ஒரு குறிப்பிட்ட இறுதி கட்ட ஓவர் ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :

புதன் கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. சூர்யகுமார் யாதவ் தனது அதிகபட்ச ODI ஸ்கோரைப் பதிவு செய்த பிறகு, பிரசித் கிருஷ்ணா (4/12) மற்றும் ஷர்துல் தாக்கூர் (2/41) ஆகியோர் ஆறு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொள்ள வாஷிங்டன் சுந்தரின் அந்த ஒரு குறிப்பிட்ட இறுதி கட்ட ஓவர் ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி சொதப்பாலாகத் தொடங்கியது, ரோகித் சர்மா (5), கிமார் ரோச் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

ரிஷப் பண்ட்டிற்கு ஒன்றும் சிக்கவில்லை, அவருக்கு ஆர்த்தடாக்ஸாகவும் ஆடவரவில்லை, அன் ஆர்த்தடாக்சும் கைக்கொடுக்கவில்லை, வெஸ்ட் இண்டீஸ் அவரைக் கட்டிப்போட்டனர், விராட் கோலி 3 அருமையான பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்த பிறகு மீண்டும் விட்டேத்தி மனோபாவம் தலைத்தூக்க ஓடியன் ஸ்மித்தின் அவுட்ஸ்விங்கருக்கு அவரது வழக்கம்போலான எட்ஜ் ஆகி வெளியேறினார்.

கோலி எட்ஜ் ஆகி வெளியேறுகிறார்.

முன்னதாக இதே ஓவரில் ரிஷப் பண்ட் அசிங்கமாக ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே சென்றபந்தை புல் ஷாட் ஆட முயன்று கொடியேற்றி வெளியேறினார். தொடக்க வீரராக ரிஷப் பண்ட்டை முயற்சி செய்தது வீணானது. ஓடியன் ஸ்மித் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்தியா 12வது ஓவரில் 43/3 என்று ஆனது.

சூரியகுமார் யாதவ் - ராகுல் ரீ-பில்ட்:

43/3 என்று இந்திய அணி தடுமாறிய போது கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இணைந்து 91 ரன்களை சேர்த்து அணியை மீட்டனர். வந்தவுடன் ராகுல் கேட்ச் கொடுத்தார், ஆனால் ஷேய் ஹோப் அதை தவற விட்டார் மிகவும் ஈசியான கேட்ச், இதுதான் மே.இ.தீவுகளின் தோல்விக்குக் காரணம். அப்போது பிடித்திருந்தால் 64/4 என்று ஆகியிருக்கும் இந்தியா. இதன் பிறகு ராகுல் அகீல் ஹொசனை மிட்விக்கெட்டில் தூக்கி சிக்சர் விளாசினார். பிறகு இவரையே தலைக்கு மேல் நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். 23 பந்தில் 7 என்று இருந்த ராகுல் 47 பந்துகளில் 49 என்று குவிக்காக வந்தார். அதன் பிறகு மெதுவாக 2வது ரன்னுக்குத் தொடங்கி ரன் அவுட் ஆனார், ஆனால் ஏதோ சூரியகுமார் யாதவ் செய்த தவறு போல் காட்டிக் கொண்டார். சூரியகுமார் யாதவ் இத்தனைக்கும் ராகுலை விட வயதில் பெரியவர்.

சூர்யகுமாரை பொறுத்தவரை ஸ்பின்னர்களை சரளமாக ஸ்கோர் செய்து அரைசதம் கடந்தார். இருப்பினும், அவர் ஸ்கோரிங் ரேட்டை உயர்த்த நினைத்தபோது, ​​ஆலன் வீசிய லெந்த்தை தவறாகக் கணித்து, ஸ்வீப் ஷாட் டாப்-எட்ஜில் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆகி 83 பந்துகளில் 64 ரன்களில் முடிந்தார். ஹூடா 25 பந்துகளில் 29 ரன் ரன்கள் எடுக்க வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களை எடுக்க சர்துல் தாக்கூர் 8 ரன்களில் கோட்டை விட இந்திய அணி 237/9 என்று முடிந்தது.

மே.இ.தீவுகள் அணியில் அல்ஜாரி ஜோசப், ஓடியன் ஸ்மித் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்ற ஜேசன் ஹோல்டர் சிக்கனம் காட்டினார்.

பிரசித் கிருஷ்ணாவின் எழுச்சி, வாஷிங்டன் சுந்தரின் திருப்பு முனை ஓவர்:

238 ரன்கள் இலக்கை எதித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் பிராண்டன் கிங், ஷேய் ஹோப் தன்னம்பிக்கையுடன் தொடங்கினர். 6 பந்துகளில் 4 பவுண்டரிகள் விளாசினர். தாக்கூர், சிராஜ் சரியாக வீசவில்லை. ஆனால் பிரசித் கிருஷ்ணா வந்தார் வந்தவுடன் பிரசித் கிருஷ்ணா முகுந்தா முராரே என்பதற்கு ஏற்ப வந்தவுடன் பந்தை தையலில் பட்டு தெறிக்கவிட பிராண்டன் கிங் 18 ரன்களில் வெளியேறினார்.

அடுத்த ஓவரிலும் பிரசித் கிருஷ்ணா ஒரு பந்தை லெந்திலிருந்து தையலில் பட்டு எகிற வைக்க டேரன் பிராவோ எட்ஜ் செய்து வெளியேறினார். பிறகு கேப்டன் நிகோலஸ் பூரனையும் பிரமாதமாக வீசி ரோகித் சர்மாவே வைடு ஸ்லிப்பில் கேட்ச் எடுத்தார். ஷம்ரா புரூக்சையும் ஆட்டிப்படைத்தார் பிரசித் கிருஷ்ணா. ஆனால் செகல், மற்றும் வாஷிங்டன் சுந்தரை சரளமாக ஆடிய பூருக்ஸ் 37 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் இவர் 44 ரன்களில் அபாயகரமாகத் திகழ்ந்த போது ஹூடாவின் முதல் விக்கெட்டாக கேட்ச் ஆனார்.

ஸ்டார் பவுலர் பிரசித் கிருஷ்ணா

அலேக் ஹொசைனும், பேபியன் ஆலனும் 42 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க, சமீபகாலங்களில் இந்தியாவை அச்சுறுத்திய வீரராக ஓடியன் ஸ்மித் திகழ்ந்தார். தாக்கூரை அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசி தன் பலத்தைக் காட்டினார். சிராஜ் புல்டாஸை பந்து உடைபடுமாறு பவுண்டரிக்கு அனுப்பினார். வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடாவுக்கு இன்னும் ஓவர் இருக்கும் நிலையில் ஓடியன் ஸ்மித் வெஸ்ட் இண்டீஸை கரை சேர்ப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

கதிகலக்கிய ஓடியன் ஸ்மித்

44 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்குத் தேவை 36 பந்துகளில் 48 ரன்கள். அப்போதுதான் 45வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில்தான் 20 பந்துகளில் 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அச்சுறுத்திய ஓடியன் ஸ்மித்தை ஆட்டிப்படைத்து 3 ரன்களையே கொடுத்து அவர் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

பீல்டிங் செட் அப் அபாரம், ரோகித் சர்மா மிகப்பிரமாதமாக விராட் கோலியை ஆன் திசை பவுண்டரி அருகே கொண்டு சென்றார், வாஷிங்டன் சுந்தர் ஒரு பந்தை இழுத்து விட ஓடியன் ஸ்மித் இழுத்து அடிக்க பந்து சரியாகச் சிக்காமல் மேலே எழும்பி விளக்கொளியில் கடினமான கேட்சை எளிதாகப் பிடித்தார் கோலி.

வாஷிங்டன் சுந்தர் ஓவரில் திருப்பு முனை கேட்ச் எடுத்த விராட் கோலியை பாராட்டும் ரோகித் சர்மா

கிமார் ரோச்சை பிரசித் கிருஷ்ணா எல்.பி.ஆக்கி 9 ஓவர் 3 மெய்டன் 12 ரன்கள் 4 விக்கெட் என்று பின்னி எடுத்தார், ஆனால் வாஷிங்டன் சுந்தரின் அந்த 45வது ஓவர்தான் திருப்பு முனை ஏற்படுத்தியது. ஆட்ட நாயகனாக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

First published:

Tags: Ind vs WI ODI, India vs west indies, Washington Sundar