போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கீட்டால் குறைக்கப்பட்ட ஓவர்கள் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மே.இ.தீவுகளை 119 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, ஷுப்மன் கில்லின் 98 ரன்கள், தவானின் 58 ரன்களால் 36 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்தது. மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம் என்பதால் டக்வொர்ட் லூயிஸ் முறைப்படி மே.இ.தீவுகளுக்கு 37 ஓவர்களில் 255 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. இந்தியா தரப்பில் யஜுவேந்திர செஹல் 4 ஓவர் 17 ரன்கள் 4 விக்கெட் என்று அசத்தினார். ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட், சிராஜ் 2 விக்கெட்.
முதல் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி நெருங்கி வந்து தோல்வி கண்டது. ஆனால் நேற்று படுதோல்வி கண்டதோடு 3-0 என்று ஒயிட்வாஷ் கண்டது. அதுவும் இது 2ம் நிலை இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
சேசிங்கில் முகமது சிராஜ் 2வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸுக்கு அதிர்ச்சி அளித்தார். கைல் மேயர்ஸ் குச்சியைப் பெயர்த்து சம்ரா புரூக்ஸை எல்பி செய்ய வெஸ்ட் இண்டீஸ் 0/2 என்று ஆனது. பிராண்டன் கிங் (42), ஷேய் ஹோப் (22) கொஞ்ச நேரம் நின்று 47 ரன்களைச் சேர்த்தனர், ஆனால் ஷேய் ஹோப்பை செஹல் காலி செய்தார். ஸ்டம்ப்டு ஆனார்.
கேப்டன் நிகலஸ் பூரன் (42) பிராண்டன் கிங் இணைந்து 27 ரன்கள் சேர்த்தனர். அப்போது கிங் 42 ரன்களில் அக்சர் படேல் பந்து திரும்பாது என்று தெரியாமல் ஆடி பவுல்டு ஆனார். பூரன் உடனேயே தீபக் ஹூடாவை ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். ஆனால் இன்னொரு முனையில் கீஸி கார்ட்டி திணறிக்கொண்டிருந்தார் கடைசியில் 17 பந்தில் 5 ரன்கள் என்ற நிலையில் சர்துல் தாக்கூரை இறங்கி வந்து அடிக்கப்போய் பவுல்டு ஆனார். பூரன் மேலும் 2 பவுண்டரிகளை அக்சர் படேலை அடித்தார், ஆனால் 42 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் வெளியேற 119/6-லிருந்து 137 ரன்களுக்கு மே.இ.தீவுகள் சுருண்டது.
முன்னதாக ஷுப்மன் கில், ஷிகர் தவான் அருமையாக இன்னொரு சதக்கூட்டணி அமைத்தனர், இருவரும் 113 ரன்களைச் சேர்த்தனர். ஷுப்மன் கில் முதலில் நிதானம் காட்டி பிறகு ஆக்ரோஷமானார். அவர் 98 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 98 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், முதல் சதம் இன்னும் அவருக்கு லபிக்கவில்லை. காரணம் முதல் மழை இடையூறுக்குப் பிறகு ஆட்டம் தொடங்கி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது, பிறகு 2வது முறை மழை குறுக்கிட்டப்போது 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டம் 36 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்கள் இருந்த போது முடிக்கப்பட்டது. இதனால் கில் 98 ரன்களில் தேங்கினார் பாவம்.
தவான் 58 ரன்களில் ஆட்டமிழக்க, கில்லும் ஷ்ரேயஸ் அய்யரும் வெளுத்து கட்டினர், அய்யர் 34 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 44 ரன்கள் எடுத்தார். இந்தியா முதல் 24 ஓவர்களில் 115 தான் அடுத்த 12 ஒவர்களில் 110 எடுத்து 225 ரன்களுக்கு 3 விக்கெட் என்று முடிந்தது. கடைசியில் தொடரை 3-0 என்று கைப்பற்றியது, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ஹுப்மன் கில்தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs west indies, India vs Westindies, Shikhar dhawan, Shubman Gill, West Indies vs India, Yuzvendra chahal