Home /News /sports /

கிலி கொடுத்த சாஹர்: இந்தியாவுக்கு 3-0 ‘ஒயிட்வாஷ்’ தோல்வி- தென் ஆப்பிரிக்கா அபாரம்

கிலி கொடுத்த சாஹர்: இந்தியாவுக்கு 3-0 ‘ஒயிட்வாஷ்’ தோல்வி- தென் ஆப்பிரிக்கா அபாரம்

ஆட்ட நாயகன் தொடர் நாயகன் குவிண்டன் டி காக்.

ஆட்ட நாயகன் தொடர் நாயகன் குவிண்டன் டி காக்.

தென் ஆப்பிரிக்கா தொடர் இந்தியாவுக்கு பெரிய தலைவலிகளை உருவாக்கியுள்ளது. கேப்டன்சி பிரச்சனை, அணித்தேர்வு பிரச்சனை, கோலியின் ஆர்வமற்ற புதிய போக்கு ஆகியவற்றினால் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் 3-0 என்று ஒயிட் வாஷ் தோல்வி கண்டது. முன்னதாக டெஸ்ட் தொடரையும் 1-2 என்று கோட்டை விட்டது.

அணித்தேர்வும் சொல்லும்படியில்லை, ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் பங்களிப்பு செய்தவரை ட்ராப் செய்து விட்டனர், ஜெயந்த் யாதவ் அணியில் எதற்கு என்ற கேள்வியே எஞ்சியது.

குவிண்டன் டி காக்கின் அபாரமான, வாய்ப்பே வழங்காத சதம் மற்றும் வான் டெர் டசனின் அரைசதம் ஆகியவற்றினால் 214/3 என்று இருந்த தென் ஆப்பிரிக்கா அணி அதன் பிறகு 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 287 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய இந்திய அணி 43வது ஓவரில் 223/7 என்று தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தீபக் சாகர் தனது 2வது ஒருநாள் அரைசதத்தை தொடர்ச்சியாக எடுத்தார். 34 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் 54 ரன்கள் எடுத்து 278 ரன்கள் வரை கொண்டு வந்தார், ஆனால் அவர் ஆட்டமிழக்க இந்திய அணி 283 ரன்களுக்கு சுருண்டு ஒயிட் வாஷ் தோல்வி கண்டது.

தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் பெலுக்வயோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கடைசி ஓவரில் 5 ரன்கள் இந்திய வெற்றிக்குத் தேவை தப்ரைச் ஷம்சிக்குப் பதிலாக வந்த ட்வைன் பிரிடோரியஸ் வீச பிரசித் கிருஷ்ணா சிங்கிள் எடுத்தார், ஆனால் அடுத்ததாக ஸ்ட்ரைக்குக்கு வந்த சாஹல் தான் ஏதோ பெரிய ஹீரோ என்று நினைத்துக் கொண்டு ஆடப்போய் அவுட் ஆக இந்தியா 283 ரன்களுக்கு முடிந்தது.

ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டமிழந்த பிறகு இறங்கினார் சாஹர். அப்போது இந்திய வெற்றிக்குத் தேவை 77 பந்துகளில் 93 ரன்கள். 2 ஓவர்களுக்குப் பிறகு சூரியகுமார் யாதவ் (32 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39) எளிதான கேட்சைக் கொடுத்து வெளியேறினார். ஜெயந்த் யாதவ்வும் சடுதியில் வெளியேறினார்.

சாஹரின் பேட்டிங் திறமைகளைப் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அபாரமாகப் புகழ்ந்தது நினைவுக்கு வரும் வகையில் ஆடினார் சாஹர். கடந்த ஆண்டுதான் அவர் இலங்கைக்கு எதிராக ஒரு அரைசதத்தை சற்றும் எதிர்பாரா நிலையிலிருந்து அடித்து இலங்கையின் 275 ரன்களை வெற்றிகரமாக விரட்டியிருந்தார்.

17 பந்துகளில் 20 ரன்களில் இரண்டு எட்ஜ் பௌண்டரிகள் என்றாலும் ட்வைன் பிரிடோரியஸை அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்தார். லுங்கி இங்கிடியின் பவுலிங்கில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார் தீபக் சாஹர். 31 பந்தில் அரைசதம் அடித்த நிலையில் லுங்கி இங்கிடி அவரை வீழ்த்தினார்.

முன்னதாக ராகுல் 9 ரன்களில் லுங்கி இங்கிடியிடம் எட்ஜ் ஆகி வெளியேறினார். அதன் பிறகு ஷிகர் தவான் (61), விராட் கோலி (65) ஆகியோர் 98 ரன்களைச் சேர்த்து தவான் பிரமாதமாக ஆடினார், மேட் ஹைடன் பாண்டியில் பிரிடோரியஸ் பந்தை இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார். பிரிடோரியஸை மட்டும் 24 ரன்கள் எடுத்தார் தவான். கோலி ரிஸ்க் இல்லாத இன்னிங்ஸ் என்பதை விட ஆர்வமற்ற ஒரு இன்னிங்சில் சொந்தக் கணக்கில் ஒரு அரைசதத்தை சேர்த்துக் கொண்டார், மற்றபடி ஆட்டத்தில்பழைய மாதிரி கோலி நிற்கிறார் விரட்டல் விராட்டாக இருப்பார் என்று நினைக்கும்படி ஆடவில்லை. கடைசியில் மகராஜ் பந்தில் பவுமாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பெலுக்வயோ, தவான் மற்றும் ரிஷப் பண்ட்டை காலி செய்தார், ரிஷப் பண்ட் முதல் பந்திலேயே பொறுப்பற்ற ஷாட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆட்ட நாயகன் தொடர் நாயகன் இரண்டுமே குவிண்டன் டி காக் தான். மொத்தத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளுடன் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.  பாவம் திராவிட்!
Published by:Muthukumar
First published:

Tags: India vs South Africa, Virat Kohli

அடுத்த செய்தி