• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • விராட் கோலி முதல் ஷாகின் அப்ரீடி வரை- இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை பிளேயர் டு வாட்ச்

விராட் கோலி முதல் ஷாகின் அப்ரீடி வரை- இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை பிளேயர் டு வாட்ச்

கோலி-ஷாகின் அப்ரீடி, டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான்

கோலி-ஷாகின் அப்ரீடி, டி20 உலகக்கோப்பை இந்தியா-பாகிஸ்தான்

  • Share this:
    இந்தியா-பாகிஸ்தான் அணியில் சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவரையொருவர் சந்திக்காத வீரர்கள் உள்ளனர், உதாரணமாக பும்ராவை அதிகம் அவர்கள் ஆடியதில்லை, அதே போல் ஷாகின் ஷா அப்டீடியை அதிகம் இந்தியா ஆடியதில்லை. ஆகவே இன்றைய இந்தியா-பாகிஸ்தான், டி20 உலகக்கோப்பை துபாய் போட்டியில் சில முக்கிய வீரர்கள் பற்றி பார்ப்போம்:

    விராட் கோலி: கடந்த 2 ஆண்டுகளாக சதம் எடுக்காவிட்டாலும் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய அச்சுறுத்தல்தான். பாகிஸ்தானுக்கு எதிராக டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் 254 ரன்கள் எடுத்துள்ளார், ஒருமுறை கூட பாகிஸ்தான் கோலியை வீழ்த்தியதில்லை அனைத்திலும் நாட் அவுட் தான். சராசரி 84.66. கடந்த முறை டி20 உலகக்கோப்பை 2016-ல் ஆடிய போது விராட் கோலி 55 ரன்கள் விளாசி இந்திய அணியை துல்லியமாக வெற்றிக்கு இட்டுச் சென்றார். இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆனால் ஐபிஎல் 2021-ல் கோலி 15 போட்டிகளில் 405 ரன்களை 28.92 என்ற சராசரியில் எடுத்தது.

    கே.எல்.ராகுல்: ஐபிஎல் 2021 தொடரில் 626 ரன்கள் விளாசியுள்ளார், ராகுல். இங்கு பயிற்சி ஆட்டத்திலும் செம பார்மில் இருக்கிறார், உண்மையில் பாகிஸ்தானுக்கு இவர் ஒரு பெரிய அச்சுறுத்தல். பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் ஆடுகிறார், அதனால் தன் முத்திரையைப் பதிக்க விரும்புவார். கே.எல்.ராகுல்தான் பாகிஸ்தான் அணிக்கு பெரிய அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் பேட்டிங் கன்சல்டண்ட் மேத்யூ ஹெய்டன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

    பும்ரா: பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா ஹை பிரஷர் ஆட்டத்தில் ஆடுகிறார், பாபர் அசாம், ரிஸ்வான், ஃபகர் ஜமான், முகமது ஹபீஸுக்கு இவர் வீசுவதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. இந்திய அணியின் 3 வடிவங்களிலும் பிரமாதமாக வீசி வருபவர் பும்ரா. ஐபிஎல் 2021-ல் 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இங்கிலாந்துக்கு எதிராக தொட முடியாமல் வீசி 26/1 என்று முடிந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் ஆடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் பும்ரா, ஆனால் அந்த பும்ரா வேறு இந்த பும்ரா முற்றிலும் வேறு. எனவே இவர் எப்படி வீசுவார் என்பதும ஆவலான விஷயம்.

    பாபர் அசாம்: ஐசிசி நம்பர் 2 ரேங்கில் உள்ள பாகிஸ்தானின் சிறந்த வீரர், கோலியுடன் ஒப்பிடப்படக்கூடியவர். 64 மேட்ச்களில் 2204 ரன்கள் எடுத்துள்ளார். மிகவும் சீரான ஒரு வீரர், கிரிக்கெட்டில் உள்ள அனைத்து ஷாட்களையும் ஆடக்கூடியவர். இது வரை இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 158 ரன்களையே எடுத்துள்ளார் பாபர். டி20-யில் இந்தியாவுடன் ஆடியதில்லை, ஆனால் அந்த பாபர் வேறு, இப்போது தொடக்கத்தில் இறங்கும் பாபர் வேறு.

    ஷாகின் அப்ரீடி: இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரீடி எப்போதுமே அச்சுறுத்தலானவர். இந்திய பேட்ஸ்மென்களுக்கு இடது கை வீச்சாளர் என்றால் கொஞ்சம் நடுக்கம்தான், ஆனால் இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒருநாள் போட்டியில் ஷாகின் அப்ரீடி விக்கெட் இல்லாமல் முடிந்தார். இதுவரை 30 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஷாகின் அப்ரீடி 32 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

    ஹசன் அலி: இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தல் ஹசன் அலிதான், மிடில் ஓவர் தாதா என்றே கூற வேண்டும். ஆக்ரோஷமான பவுலர். இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் ஆடியதில்லை. வார்ம் அப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2/21 என்று எடுத்த ஹசன் அலி, அடுத்த தென் ஆப்பிரிக்கா போட்டியில் 52 ரன்கள் விளாசப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: