மும்பை டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று நியூசிலாந்து அணி தன் 2வது இன்னிங்சில் 167 ரன்களுக்கு சுருண்டது, ஜெயந்த் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின் மேலும் 1 விக்கெட்டுடன் 4 விக்கெட்டுகள் என்று டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
நியூசிலாந்து மொத்தமே இரண்டு இன்னிங்ஸ்களிலும் 84 ஓவர்கள்தான் தாக்குப் பிடித்தது, இந்திய அணி மாறாக 179 ஓவர்களை ஆடி 17 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. பிட்ச் இங்கிலாந்து தொடருக்கு போடப்பட்டது போல் குழிப்பிட்ச் அல்ல, இது ஸ்பின் பிட்ச் 2ம் நாள் முதலே பந்துகள் குட்லெந்தில் திரும்பி எழும்பின அதனால்தான் எல்.பி. அவுட்கள் குறைவாக இருந்தன. அதுதான் ஒரு நல்ல பிட்சுக்கு அடையாளம்.
இன்று காலை 140/5 என்று தொடங்கிய நியூசிலாந்து முதலில் ரச்சின் ரவீந்திரா (18) விக்கெட்டை ஜெயந்த் யாதவிடம் இழந்தது. இதே ஓவரில்தான் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசியிருந்தார் ரச்சின் ரவீந்திரா, ஆனால் இந்தப் பந்து பிட்ச் ஆகி திரும்ப எட்ஜ் ஆகி புஜாரா கையில் ஸ்லிப்பில் போய் உட்கார்ந்தது.
அடுத்ததாக இன்னிங்சின் 54வது ஓவரை வீசிய ஜெயந்த் யாதவ், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன், மற்றும் டிம் சவுதீயை ஒரே ஓவரில் டக் அவுட் ஆக்கினார். கைல் ஜேமிசன் அருமையான ஆஃப் ஸ்பின் பந்தில் கால்காப்பில் ஸ்டம்புக்கு நேராக வாங்கினார், ரிவியூ பயனளிக்கவில்லை. ஒரு பந்து சென்று, சவுதீ பெரிய ஷாட்டுக்கு போய் பவுல்டு ஆனார்.
அடுத்ததாக வில்லியம் சோமர்வில்லுக்கு கோலி 2வது ஷார்ட் லெக் பீல்டரைக் கொண்டு வர ஜெயந்த் யாதவ் பந்து திரும்ப இன்சைடு எட்ஜ் நேராக அகர்வால் கைக்குச் சென்றது. கடைசியாக நிகலஸ் 44 ரன்களில் இறங்கி வந்து அஸ்வினை தூக்கி அடிக்க முயன்றார், ஆனால் பந்து பிட்சில் கிரிப் ஆகி திரும்ப சஹா ஸ்டம்ப்டு செய்தார். நியூசிலாந்து 167 ரன்களுக்குஆல் அவுட் ஆனது.
ஜெயந்த் யாதவ் 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ரவி அஸ்வின் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த டெஸ்ட் போட்டி வெற்றி மூலம் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் புள்ளிகள் 12-ஐ இந்தியா பெற்றது, கடந்த டெஸ்ட் ட்ரா ஆனதில் 4 புள்ளிகளைச் சேர்த்தால் 16 புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளது, நியூசிலாந்து 4 புள்ளிகள் மட்டுமே.
ராகுல் திராவிட் பயிற்சியாளர் ஆன பிறகு முதல் டெஸ்ட் வெற்றி, முதல் டெஸ்ட் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, India vs New Zealand, R Ashwin, Rahul Dravid